ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் 'விடுதலை' மலர்
October 10, 2020 • Viduthalai • மற்றவை

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பிஎச்.டி..

நேற்றைய (9.10.2020) தொடர்ச்சி...

‘வரும் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இது தி.மு.க.வுக்காக அல்ல. இதுவரை தமிழ்நாடு கட்டிக்காத்த பண் பாட்டு அடித்தளம், பேணிக் காத்த உரிமைகள், தனித் தன்மைகள், இன நலன்கள், நிலை நிறுத்தப்பட தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயம்' என்று தமிழர் தலைவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து ஒவ்வொரு தமிழ னின் நெஞ்சிலும் நிலைநிறுத்தப்பட வேண்டிய பொன்வரிகளாகும்.

‘பெண்ணே! பெண்ணே!! பெரியாரை எண்ணிப் பெருமிதப்படு!' எனும் ஆசிரியரின் கட்டுரை பெண் விடுதலை பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குகிறது; தந்தை பெரியாரின் பெண் விடுதலைப் பணிகளை ஆராய்வார்க்கு இக்கட்டுரை பெரிதும் பயன்படும்.

தேசியக் கல்விக் கொள்கை (NEP) என்னும் ஆரியப் பார்ப்பனியக் குலக்கல்வித் திட்டத்தை - அதன் கொடுமைகளைக் கவிஞர் கலி.பூங் குன்றனார் தொகுத்து வழங்கியுள்ளமை, இதைப் பற்றிப் பரப்புரை செய்யும் சொற்பொழிவாளர் களுக்குப் பெரிதும் துணை புரியும். அது உண்மையிலேயே ஒரு மின்சாரத் தொகுப்புத் தான்!

தி.க. வேறு, தி.மு.க. வேறு என்னும் உளறு வாயர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததைப் போலக் கலைஞர் சொல்கிறார்: "தி.க., தி.மு.க. என்று இரண்டாக இருந்தாலும், இருவேறு இடங்களில் இருந்தாலும் ஒரே லட்சியத்திற் காகத்தான் பாடுபட்டு வருகிறோம். ஒன்று ஆட்சிப் பொறுப்பில் - அரசியலில் இருந்து அந்தப் பணியைச் செய்கிறது. மற்றொன்று வெளியே இருந்து அந்தப் பணியைச் செய்கிறது. அவ்வளவு தானே தவிர இருவேறு அமைப்புகள் அல்ல."

தளபதி மு.க.ஸ்டாலின் முன்பு ஒருமுறை குறிப்பிட்டது நம் நினைவில் இன்றும் நிலைத்து நிற்கும் வாசகம்: "திராவிட முன்னேற்றக் கழகத் தின் செல்நெறி எது என்பதைப் பெரியார் திடல் தான் முடிவு செய்யும்" மேற்கண்ட முழக்கத்தை மறக்க முடியுமா?

டாக்டர் கலைஞரின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும் போது நம்மால் உணர்ச்சிவயப்படாமல் இருக்க முடியவில்லை!

"தந்தை பெரியார் நம்மை விட்டு என்றும் மறையமாட்டார்கள்; நம் ரத்தத்தின் ரத்தம், உணர்ச்சியின் உணர்ச்சி! நரம்பின் நரம்பு! நம் மூச்சுக் காற்று! அவரைப் பிரிக்க முடியாது."

இப்படிப்பட்ட அருமையான கட்டுரைகள் தந்தை பெரியார் பிறந்த நாள் மலரை அணி செய்கின்றன. இவற்றைத் தேடி எடுத்து (46 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் எழுதிய கட்டுரை இது) மலரில் இடம் பெறச் செய்ததற்காக எவ்வளவு பாராட் டிலும் தகும்.

"தாய்ப்புலி எட்டடி பாய்ந்தால் புலிக்குட்டி பதினாறு அடி பாயும்" என்று ஊர்ப்புறத்தில் நம் பிள்ளைகளின் அறிவுத் திறனைப் பாராட்டிப் பெரியவர்கள் பேசுவார்கள். இதோ புலிக் குட்டியின் பாய்ச்சலைப் பாருங்கள்: "பெரியார் மீது வன்மம் கொண்ட மனித குல விரோத சக்திகளை எதிர்த்து நின்று, அறிவாயுதம் ஏந்தி, கருத்துக்களால் போரிடும் இளைய தலைமுறையினர் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றனர். அவர்கள் யாரும் பெரியாரைப் பார்த்ததில்லை. ஆனால் பெரியாரைத் தங்கள் வாழ்வின் அசை விலும், அந்த வாழ்வு தந்துள்ள தன்னம்பிக்கை யிலும் கண்ணுறுகின்றார்கள். உலகப் பெரியா ராக உயர்ந்து நிற்கிறார் தந்தை பெரியார்!" தி.மு. கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் எழுத்தில் உள்ள வலிமையும், தன்னம்பிக்கையும் குறிப்பிடத்தக்கவை.

தென்னாட்டு மக்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து 1920களின் தொடக்கத்திலிருந்தே தந்தை பெரியார் போர்க்குரல் எழுப்பி வந்துள்ளார் எனபதைச் சுட்டிக் காட்டும் புரட்சிப் புயல் ‘வைகோ' "இன்று மும்மொழித் திட்டத்தைப் புகுத்த முனைந்து நிற்கும் இந்துத்துவ - சனாதனக் கும்பலை முறி யடிக்கத் தந்தை பெரியாரின் அறிவாயுதம் ஏந்திக் களம் காண்போம், பெரியார் வழி நடத்து கிறார், அமைகின்ற களங்கள் அனைத்திலும் வாகை சூடுவோம்" என்று முழங்குகிறார்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் ‘அறிவாயுதம் ஏந்துவோம், அணிவகுப்போம்' என்கிறார். ‘சமூக வாழ்க்கையில் புதர் போல் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் திருத்தியமைக்க, சீரமைத்துப் பகுத்தறிவுத் திசையில் மனிதனைச் சிந்திக்க வைத்த இணையற்ற தலைவர் பெரியார்! ஆகவேதான் பெரியாரை எதிரியாகப் பார்க்கிறார்கள்.  பெரியார் ஒழிக என்று உரக்க முழக்கமிடுவோரைப் பார்த்துக் கேட்கிறோம், நீங்கள் யாரை வாழ்க என்று சொல்லப் போகின் றீர்? ஒரு முறையாவது சிந்திப்பீரா? சிந்தித்தால் நீங்கள் பெரியாரின் சீடராகி விடுவீர்கள்' என்கிறார் முத்தரசன்.

'திராவிட மொழி நூல் ஞாயிறு' பாவாணர் அவர்களின் கட்டுரையைப் படிக்கும் போது தந்தை பெரியாரின் மனித நேயம் எவ்வளவு உயர்ந்தது என்பதை அறிய முடிகிறது. பாவாண ரின் ‘ஒப்பியல் மொழிநூல்‘ பற்றிப் பெரியார் அய்ந்து பக்கம் தம் கைப்பட எழுதி அனுப்பியிருந்தார் என்பதும், அந்தப் புத்தகத்தின் நூறு படிகளை அய்யா பாவாணரிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார் என்பதும், திருச்சி பெரியார் மாளிகையில் பாவாணரைத் தனியே அழைத்துப் போய் அவருக்குப் பண உதவி செய்ததும் பலர் அறியாத செய்திகள். ‘கோடிக்கணக்கான மக்களோடு கூடிக் கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத் தார் (காங்கிரசார்) ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும், குமரிக் கோட்டக் காட்சியாயினும் சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும், அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும், ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தானியத்தை எதிர்த்ததிலும் பிராமணியத்தை எதிர்த்ததே பேராண்மை" என்னும் பாவாணரின் வரிகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண் டியவை.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாகிருல்லா அவர்கள் ‘பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்குடை யவை, அறிவியல் அடிப்படையில் அமைந் தவை, மனிதநேயம் வளர்க்கப் பிறந்தவை. ஆதலால் பெரியாரின் கொள்கைகளை அப் படியே அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான தமிழினத்திற்கு நாம் செய்யும் அளப்பரிய தொண்டாகும்' என்று நம் கடமையை நினைவூட்டுகிறார்.

- தொடரும்