ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் 'விடுதலை' மலர்
October 11, 2020 • Viduthalai • கழகம்

நேற்றைய (10.10.2020) தொடர்ச்சி...
பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் மருத் துவர் சோம.இளங்கோவன், தமிழக முன்னேற்றத்தில் நம் இயக்கத் தோழர்களின் பங்கு மிக இன்றியமையாதது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். 'கிராமங்கள், நகரங்கள் எங்கும் முதலில் திருக்குறள் மன்றங்கள் தேவை. குறளின் பொருள் சொல்லி விளக்கி அது அவர்களது வாழ்க்கையில் முன்னேற எப்படி வழிவகுக்கிறது' என்பதை எடுத்துக் காட்டிக் குழந்தைகளுக்குப் பரிசளிக்க வேண்டும். அதன்பின்னர், புரட்சிக் கவிஞர், பெரியார், அண்ணா, கலைஞர், காமராசர் பற்றிப் போட் டிகள் நடத்த வேண்டும்' என்கிறார். நல்ல கருத்துரை, தோழர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைக்கம் போராட்டம் பற்றிய பழ.அதியமானின் கட்டுரை பல அரிய தகவல்களை நமக்குத் தருகின்றது. வைக்கம் போராட்டத்தின் ஒவ்வொரு களத்திலும் முன் நின்றவர் பெரியார். தமிழ்நாடு காங்கிரசுக் கமிட் டியின் சார்பில் வைக்கம் போராட்டத்திற்கு ரூ.10,000 நிதி உதவி கிடைக்கப் பெரியார் ஏற்பாடு செய்தார். வைக்கத்துக்கு வந்த முக்கியமான தலைவர்கள் அனை வரும் பெரியாரைச் சந்தித்து விட்டே சென்றனர். கேரளத் தலைவர்களின் அழைப்பை ஏற்று வைக்கத் திற்குச் சென்ற பெரியார் தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த வைக்கம் போராட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டினார். அதற்காக இருமுறை அவர் சிறைத் தண்டனை பெற்றார். 

சிறையில் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட ஒரே போராளி பெரியார் மட்டுமே. ஏழு முறை வைக்கத்திற்குச் சென்ற பெரியார் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 114 நாட்களில் 74 நாட்கள் சிறையில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். வைக்கம் போராட்ட வெற்றிவிழாவுக்கு கேரளாவிற்கு வெளியிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஒரு தலைவர் பெரியார் மட்டுமே, அத்துடன் வெற்றிவிழாக் கொண் டாட்டங்களுக்குத் தலைமை தாங்கும்படியும் கேரள மக்கள் பெரியாரைக் கேட்டுக் கொண்டார்கள்.' இப்படிப்பட்ட அரிய தகவல்களை அதியமான் தேடியெடுத் துத் தந்திருக்கிறார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் கட்டுரை ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன் தருவ தாகும். இந்தியா என்பது ஒரு நாடல்ல; நாடாகக் கட்ட மைக்கப்பட்ட நிலப்பகுதி, பல மொழி, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டோர் வசிக்கும் இடம். இந்தப் பகுதியை ஓர் அரசன் ஆண்டதாகவோ ஒரே நாடாக இருந்ததாகவோ வரலாறு இல்லை என்றும், 1940இல் நீதிக்கட்சி மாநாட்டில், "நாம் நம்மை இந்து என்று சொல்லக் கூடாது, திராவிடர் என்றே சொல்ல வேண் டும், இந்து மதம் என்று சொல்லக் கூடாது, திராவிட சமயத்தவர் என்றே சொல்ல வேண்டும்" என்று நினைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துக்காட்டியும், 1944இல் திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை எடுத்துக்காட்டிப் பார்ப்பனரை அண்டவிடக் கூடாது என்பதோடல்லாமல் இழிவு செய்யும் இந்து மதத்தை விட்டு விலக வேண்டும் என்ற கருத்தோட்டங்களையும் செயலவைத் தலைவர் விளக்குகிறார்.


பொருளாளர் வீ.குமரேசனாரின் பெரியார் மனித நேய சுயமரியாதை பன்னாட்டு மாநாடு' என்னும் கட் டுரை ஒரு பயண இலக்கியத்தைப் போல அமைந்துள் ளது. மாநாட்டு நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போல் நிகழ்ச்சிகளை நிரல்பட வரைந்துள்ளார். அங்கு எடுக் கப்பட்ட நிழற்படங்கள் கட்டுரைக்கு அழகு சேர்க்கின்றன.

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் எச்சிலைப் பக்தி' என்ற தலைப்பில் வரைந்துள்ள கட்டுரை பக்திவயப்பட்ட மக்களின் அறியாமையை விளக்குகிறது. 'எச்சில் இலை மீது பக்தர்கள் உருளும் அளவுக்குக் கெட்டுப் போக வேண்டுமா? எந்தப் பார்ப்பான் எச்சில் இலையில் உருளுகிறான்? சங்கராச் சாரியார் உருளுவாரா? பக்தி முற்றிய குருமூர்த்திகள் உருளுவார்களா?' என்று அடுக்கடுக்கான வினாக்க ளைத் தொடுக்கிறார் முனைவர் சந்திரசேகரன். மேலும் வைக்கத்தில் எச்சில் இலையை விற்றுப் பணம் சம்பாதித்த நிகழ்ச்சியையும் பொதுச் செயலாளர் எடுத்துக் காட்டுகிறார்.

வழக்குரைஞர் அருள்மொழி, பெரியாரின் தத்துவம் மக்களை இணைக்கும் ஈர்ப்பு விசையாக விளங்குவதை விளக்குகிறார். அறிவியல் வளர்ச்சி விண்வெளி ஆய்வு களில் சாதனை செய்து கொண்டிருக்கிறது, குழந்தைகளின் கைவிரல்களில் கணினி உலகத்தைப் பந்துபோல் உருட்டு கிறது, நிலவுக்குச் சுற்றுலா - முன்பதிவு நடக்கிறது என் றெல்லாம் கண்கள் விரிய வியந்து பேசிக் கொண்டிருக்கும் போதே காதல் திருமணம் செய்ததற்காக வெட்டிக் கொல்லப் பட்ட இளம் பெண்கள், ஆண்கள் பற்றிய செய்திகள்...! இந்தப் பகுதியைப் படிக்கும் போது மனம் வலிக்கிறது. பெரியார் தனது போராட்டங்களால் யாருக்கும் அவர் தீங்கிழைத்ததில்லை. வன்முறையை அவர் ஒருபோதும் நம்பியதில்லை. ஆதரித்ததும் இல்லை...! மனுவின் கன்னிகா தானத்தை ஒழித்து வள்ளுவரின் வாழ்க்கைத் துணை நலத்தைச் சுயமரியாதைத் திருமணத்திற்குப் பெயராகச் சூட்டினார். இனத்திற்கே இழிவைத் தருகின்ற தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மாற்றாக உழவர் திருநாளாம் 'பொங்கல் விழா'வைத் 'தமிழர் திருநாள்' என்று கொண்டாடச் செய்தார். இத்தகைய ஒப்பீடு மிகச் சிறப்பானது. மேலும் பெர்ட்ரண்ட் ரசல், இங்கர்சால், பகத்சிங், மார்க்சு ஆகி யோரின் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்த தலைவர் பெரியார் என்பதனையும் வழக்குரைஞர் அருள் மொழி எடுத்துக் காட்டுகிறார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று நடந்து கொண் டிருக்கும் சமூகப் போராட்டங்களுக்கெல்லாம் வித்தூன்றி யவர் தந்தை பெரியார் என்பதை பிரின்சு என்னாரெசு பெரியார் கட்டுரை அருமையாக விளக்குகிறது. அண்மைக் காலத்து வரலாற்று ஆவணங்களாக அவற்றை பிரின்சு வரிசைப்படுத்தியிருக்கிறார். 

முதன்முதலாக இந்தி எதிர்ப் பைத் தொடங்கி வைத்தவர் பெரியார்தான்! இந்தி எதிர்ப்பு என்பது அனைத்து வகை ஆதிக்கங்களுக்குமான எதிர்ப் பின் அடையாளம்; பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பை எதிர்த்துப் பெரியார் எழுப்பிய குரல்; ஆரியம் செத்த மொழியைச் சிங்காரித்து அரியணையில் அமர்த்தப் பார்க்கிறது. மராட்டியத்தில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டம் தொடங்கியுள்ளது. ஆதியில் தமிழரைத் தங்கள் எதிரியாகப் பார்த்த மராட்டியர்கள், இப்போது தமிழரைத் தங்கள் முன்னோடியாகப் பார்க்கிறார்கள். தமிழகத்திற்கு அடுத்து இந்தி எதிர்ப்பில் கருநாடகம் முன்னணியில் நிற்கிறது. இதைப்போலவே மேற்கு வங்கத்தில், பஞ்சாப்பில், இந்தி எதிர்ப்பு, தீவிரமடைந்து வருவதை பிரின்சின் கட்டுரை விளக்குகிறது. 

'இந்தி தெரியாது போடா என்று வலைத்தளங்களில் முழங்கப்படுவது வரை, மாவலித் திருநாள் ஓணம்தான்; வாமன ஜெயந்தி அல்ல' என்று கேரள மக்கள் எழுப்பியுள்ள குரல் வரை அனைத்து நிகழ்வுகளை யும் நிரல்பட விளக்குகிறார் பிரின்சு. ஒரு தகவல் களஞ்சியமாக "எந்தை இட்ட தீ எண்டிசையிலும்" என்ற கட்டுரை விளங்குகிறது.

"சமூக நீதி, மதச்சார்பின்மை, ஆதிக்கத்திற்கு எதிரான குரல், பண்பாட்டுக் காப்பு, பெண்ணுரிமை என்ற அத்தனைத் தளங்களிலும் பெரியார் பற்ற வைத்த பெருநெருப்பு, பற்றிப் படர்கிறது. அது இழிவை ஒழிக்கும் சுயமரியாதைச் சுடராக ஒளிர்கிறது. அந்தச் சுடரைக் கையில் ஏந்தி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் இளைஞர் களே! மாணவர்களே! அணிவகுப்போம் வாரீர்!" என்னும் வரிகள் மறக்க முடியாதவை.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பியது; இதே கோவிலுக்குள் பாபு ஜெகஜீவன்ராம் அனுமதிக்கப்படாமல் அனுப்பப்பட்டது; ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் செல்ல முடியாமல் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திரும்பியது; பீகார் முதல்வராக இருந்த ஜித்தன் ராம் மாஞ்சி, கோவிலுக்குள் அனுமதிக்கப் படாமல் அவமதிக்கப்பட்டது; பூரி - கோவிலுக்குள் கிறித்துவரான மவுண்ட் பேண்ட்டன் அனுமதிக்கப்பட்டதும், அம்பேத்கர் வெளியில் நிறுத்தப்பட்டது; நேபாளத்தில் உள்ள பசுபதி கோவிலுக்குள் அனுமதி மறுத்தது - இவை யெல்லாமே பார்ப்பன இந்துமத - ஜாதிய மேலாதிக்கத்தின் கொடுமைகள் என்பதைக் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளார்.
இவற்றோடு பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், நம்.சீனிவாசன், ப.சுப்பிரமணியன், ந.க.மங்களமுருகேசன், வெளியுறவுத் துறைச் செயலாளர் கோ.கருணாநிதி, அதிரடி அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் எழுத்தோவியங்களும் பெரியார் பிறந்த நாள் மலரை அழகுபடுத்துகின்றன.
நம் தாய்க்கொடியான கழகக் கொடி ஜாதி ஒழிக' என முழங்கும். எனவே 'இளைஞர்கள் அதனைப் பற்றுக' என் கிறார் புரட்சிக் கவிஞர்,
"ஜாதி ஒழிக எனக் கூவும் தாய்க்கொடி
தானே பற்றுக இளந்தமிழ்ப் புள்ளினம்"
கேடு கெட்ட - தீய பார்ப்பனர்க்குப் பிறந்த தேவடியாள் மக்களைப் போலே ஆராயாமல் தீயநெறியில் சென்றால் அழிவது உறுதி;
"ஆயாது தீநெறிச் சென்றாய்
அம்மியா காவேரி ஆற்றுக்குத் தெப்பம்?"
என்று வினவுகிறார் புரட்சிக் கவிஞர். பெரியார் தொடங்கிய போர் ஒன்றே வெற்றி பெறும் என்பது புரட்சிக் கவிஞரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தந்தை பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துவோரைக் 'கறையான்கள்' என்று சாடுகிறார் கவிஞர் வேழவேந்தன்.
"நெருப்பினை அரிப்பதுண்டோ
நிலம் மீதில் கறையான் கூட்டம்?"
தந்தை பெரியார் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதைக் கவிஞர் வேழவேந்தன்.
"எத்தனை நாள்கள் சுற்றி இம்மண்ணில் வலமாய் வந்தீர்!
எத்தனை மேடை ஏறி
இடியாக முழங்கினீர்கள்!
எத்தனை இரவு நூல்கள்
எழுதியே குவித்தீர்!"
என்று பாடுகிறார். தந்தை பெரியாரின் ஓய்வறியாப் பணியினால் யார் யாரெல்லாம் முன்னேற்றம் கண்டார்கள் என்பதைக் கவிஞர் வேழவேந்தன் மிக அருமையான முறையில் எழுதுகிறார்.
"ஏரோட்டும் முனியன் முத்தன்
ஏடேந்திப் படித்த தாலே
நேரிலாப் பட்டம் பெற்றார்!
நீதிக்கே அரசர் ஆனார்!
சேரியின் ஏழைத் தோழன்
செழும் கல்வி பெற்ற தாலே
ஊர் மருத்துவராய் மாறி
உயர்தொண்டு புரிந்தார் இன்று!"
புரட்சிக் கவிஞரின் கவிதையும், கவிஞர் வேழவேந்தன் அவர்களின் கவிதையும் பிறந்த நாள் மலருக்குப் பெருமை சேர்க்கின்றன.
இவையன்றி அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாச் செய்திகள், நாவலர் நூற்றாண்டு விழா, பொதுவுட மைக் கட்சி அறிக்கையைத் தந்தை பெரியார் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது, கேரள முதல்வர் பினராய் விஜ யன் அய்யாவைப் பற்றிக் கூறியுள்ளது என்று எண்ணற்ற செய்திகள் பெட்டிச் செய்திகளாக மலரில் இடம் பெற்று மலரை ஒரு தகவல் களஞ்சியமாக்குகின்றன.
தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் பல வண்ணப் படங்களால் ஒளிர்கிறது! ஒவ்வொரு படமும் ஒரு வரலாற்று நிகழ்வை நமக்குக் கற்றுத் தருகின்றது. படங்களை வைத்தே வரலாற்றை வரைந்து விடலாம்! இத்தனை அழகான ஒளிப்படங்களைக் கால முறைப்படி தொகுத்தளித்த ஒளிப்படக் கலைஞர்கள் அனைவரையும் நாம் பாராட்ட வேண்டும் மானமிகு பா.சிவக்குமார், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, கி.சொக்கலிங்கம், இலக்கியன், அரசு ஆர்ட்ஸ் ராஜராஜன், சக்தி கிரிஷ், மணி வர்மா, திராவிடன், அட்டைப் படம் அளித்த பாரதிராஜா, மலரைச் சிறந்த முறையில் வடிவமைத்துக் கொடுத்த இரா.வீ.நாராயணன், கி.அருணாச்சலம், சி.கே.பிருத்திவிராஜ், ஜெ.சந்தியா ஆகியோர் பாராட்டுக்குரியோராவர். இவர் களின் கைவண்ணம் காலத்தை வென்று நிலைத்து நிற்கும். ஒரு மலரின் கட்டமைப்பு ஒரு வளமனையைக் கட்டுவதை விட மேலானது! அறிவார்ந்த செய்திகளை வரலாற்று முறைப்படி அடுக்குவது, வகைப்படுத்துவது, அழகு படுத்து வது என்று பல்வேறுபட்ட அறிவுக் கூர்மையுடைய செயல் களை உள்ளடக்கியது!
கடந்த ஆண்டில் கழக டைரி' என்பது திராவிடர் கழக வரலாற்றில் இன்றியமையாத ஆணவக் குறிப்பேடாகும். 8.9.2019 முதல் 23.3.2020 வரை நடந்த அறுபது நிகழ்வுகளின் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.
இதைப் போலவே கழகத் தலைவரின் சுற்றுப் பயண நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. தந்தை பெரியார் ஓய்வறியாது சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததைப் போலவே ஆசிரியர் அவர்களும் நாடெங்கும் சுற்றி வருகிறார். 1.9.2019 முதல் 18.3.2020 வரை ஏறக்குறைய 126க்கும் மேற்பட்ட  நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆசிரியர் உரையாற்றியிருக்கிறார்.
கடந்த பெரியாராண்டில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்த அறிக்கைகள் 340. இவை சமகால வரலாற்றை நமக்கு எடுத்துரைப்பவை. ஆசிரியர் இதுபற்றி என்ன அறிக்கை கொடுத்திருக்கிறார்' என்பதை அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் காத்திருந்து ஆசிரியர் அறிக்கையைப் படித்த பின்பே  தங்கள் கருத்தைத் தெரிவிக்கின்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே. அந்த அளவு, தமிழகத்தின் அறிவுச் சுரங்கமாக' ஆசிரியர் அவர்களின் அறிக்கைகள் விளங்குகின்றன. அறிக்கைகளின் பட்டியல் கால முறைப்படி மலரில் இடம் பெற்றுள்ளது. ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன் தருவதாகும்.
உலகம் முடங்கிக் கிடக்கிறது. ஊர் அடங்கிக் கிடக்கிறது. மூச்சுவிட முடியாமல் மனித குலம் திணறிக் கொண்டிருக் கிறது. திராவிடர் கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கம்பீர மாகக் காணொலிக் காட்சியில் உரையாற்றுகிறார். இந்தியா எங்கும் நடந்த சமூகப் புரட்சிப் போராட்டங்களைத் தக்க சான்றுகளோடு எடுத்து விளக்குகிறார். உலகெங்கிலுமுள்ள தமிழர்களும், மேலை நாட்டினரும் ஆசிரியர் உரை கேட்டு மகிழ்கிறார்கள். காணொலி மூலமாக இதுவரை தமிழர் தலைவர் ஏறக்குறைய 70 உரைகளை வழங்கியிருக்கிறார். ஆசிரியரைத் தொடந்து இயக்கத் தோழர்கள் மாவட்ட அளவில் காணொலி உரைகளை நிகழ்த்தி வருகிறார்கள். இவையெல்லாம் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் மலரில் பதிவாகியிருக்கின்றன. காலங்களைக் கடந்து நிற்கும் இந்த மலர், என்றும் வாடாத மலர்! கருத்துக் கருவூலமாய் ஒளிவீசும் இந்த மலரை உருவாக்கிய கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனார் அவர்களுக்கும், அவருக்குத் துணை நின்ற தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியும், தலைதாழ்ந்த வணக்கமும் என்றும் உரியன.
- முற்றும்