ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் பிறந்த நாள் காணொலியில் கழகத் தலைவர் அறிவுக்குச் சுதந்திரம் தா என்றவர் பெரியார் - தராதே என்றது சனாதனம்!
September 19, 2020 • Viduthalai • கழகம்

* கலி. பூங்குன்றன்

தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி கடந்த செப்டம்பர் 17 மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் காணொலிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.

இந்தியா முழுவதும்  பல மாநிலங்களிலும் இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இன்றைய தினம் உயர் பதவிகளில் உயர் ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை எடுத்து கொண்டாலும் உயர் ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கமே.

கரோனாவைப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்கள் மளமளவென நிறைவேற்றப்படுகின்றன.

நாட்டின் நான்கு தூண்கள் பற்றி - தந்தை பெரியார் வைத்த விமர்சனங்கள் முக்கியமானவை. நாடு இன்று அதனைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது.

வடமாநிலங்களில் ஒரு சினிமா நடிகரின் தற் கொலையை வைத்து தொடர்ந்து பல நாட்களாக ஊட கங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டுள்ளனர். முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனம் முற்றிலும் திசை திருப்பப்படுகிறது- மறைக்கப்பார்க்கிறது. தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில்தான் கரோனா கால கட்டத்திலும் உண்மைப் பிரச்சினைகளை காணொலி மூலம் மக்களிடத்தில் எடுத்துக் கூறுகிறோம் என்றார்.

தொடக்கவுரை ஆற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தந்தை பெரியார் எந்த இடத்தில் சென்றாலும் சரி, ஜாதி சங்க மாநாடாக இருந்தாலும் சரி, ஜாதிப் பெருமை பேசுவதைச் சாடுவார் என்னதான் ஜாதிப் பெருமை பேசினாலும் - நீ சூத்திரன் என்பதை மறவாதே என்று இடித்துக் கூறுவார் என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசு - மத்திய அரசுத் துறைகளில் செயலாளராக பணியாற்றிய தனவேல் அய்.ஏ.எஸ். தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரி பரந்தாமன் ஆகியோர் உரைக்குப்பின் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றிய உரையின் சாரமானது. (உரை பின்னர் வெளிவரும்)

1) நிருவாகத் துறை - நீதித்துறை நாடாளுமன்ற துறைகளைச் சார்ந்த பெரு மக்கள் சிறப்பாகக் கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளனர். எனவே நீண்ட நேரம் நான் உரை யாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

2) பிறக்காத கடவுள்களுக்குத்தான் இது வரை இராமன் நவமி என்றும், கிருஷ்ண ஜெயந்தி என்றும் கொண்டாடி வந்திருக்கின்றனர். உண்மையிலே பிறந்த எனக்குப் பிறந்த நாள் விழா ஏன் கொண்டாடக் கூடாது? என்னைப் புகழ்வதற்காக அல்ல, என் பிறந்த நாள் என்று சொல்லிக் 'கொள்கைப் பரப்பும் - பிரச்சார விழா' என்று சொன்னவர் தந்தை பெரியார்.

3) 'அறிவுக்குச் சுதந்திரம் கொடு' என்று சொன்னவர் பெரியார் - 'அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்காதே' என்றது மதம் - சனாதனம்.

4) பெரியார் சிலையைக் கண்டுகூட எதிரிகள் ஏன் கோபப்படுகிறார்கள்? பயம் முக்கியக் காரணம்.  இதன் மூலம் நம் இனத்து இளைஞர்களுக்கு எளிதான சூத்திரம் (Easy formula) கிடைத்து விட்டது.

5) பெரியார் சொல்வது என்ன, எதிரிகள் சொல்லுவது என்ன என்று இளைஞர்கள் சிந்திக்கின்றனர். உண்மை புரிகிறது. பெரியாரே நம் போராயுதம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் -  பின்பற்றுகின்றனர் என்பதையும் தாண்டி கைப்பற்றுகின்றனர் எனும் அளவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது.

6) மூலப் பலதோடு போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர் முறை என்றார் அறிஞர் அண்ணா. அதைத்தான் நாம் தொடர்கிறோம்.

7) திருவாரூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சிவாஜிகணேசன், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் கலந்து கொண்டனர்.

8) அவ்விழாவில் தந்தை பெரியார் தெரிவித்த கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது.

நான் என் பொது வாழ்வில் எதை எதைக் கண்டித்தேன் - எதிர்த்தேன் எனக்கே தெரியாது. அப்படிப்பட்ட எனக்கு  - வசவுகளையே அதிகம் கேட்ட எனக்கு இந்தப் பாராட்டு என்றால் எனக்கு ஒரு சந்தேகம்! நான் ஏதேனும் கொள்கையில் நழுவி விட்டேனா என்று எனக்கே சந்தேகம்! மக்களுக்கு நல்ல புத்தி வந்து விட்டது என்றே கருதுகிறேன். அதனால் தான் எனக்கு இந்தப் பாராட்டு விழா!

9) தந்தை பெரியார் ஏந்தியது எல்லாம் அறிவாயுதம் தான் - இரத்தம் சிந்தாப் புரட்சியால் பெரு வெற்றி ஈட்டித் தந்தது. இதற்கு ஈடாக இன்னொரு அருஞ்செயலை யாராவது காட்ட முடியுமா?

10) தனது காலத்திலேயே தான் பாடுபட்டதன் பலனை நேரில் பார்த்து மகிழ்ந்தவர் பெரியார். தான் விதைத்தது எல்லாம் வளர்ந்து கனிந்ததை நேரில் கண்டு சுவைத்த தோட்டக்காரர் அவர். சுயமரியாதைத் திருமணம் போன்றவை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

11) நீட், தேசிய கல்விக் கொள்கை மதச் சார்பின்மைக்கு ஆபத்து என்ற நிலையில் இந்தியா முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் கிளர்ச்சி  பெரியார் என்ற நவீன ஆயுதம் (இராமன் காலத்து வில்லும், அம்பும் இராமனையே காப்பாற்றாது இந்தக் கால கட்டத்தில்) அவர்கள் கையில் - பேரதிர்வை ஏற்படுத்தி விட்டது.

12) பெரியார் சிலையைக் கண்டு அஞ்சுகிறார்கள் பெரியார் கைத்தடியைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

13) இன்றைய நிலை என்ன 

Executive -  நிர்வாகம்

Judiciary -  நீதித்துறை

Legislature -  நாடாளுமன்றம்

நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கக் கூடியவர்களின் ஆதிக்கம்இம்மூன்றிலும் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்த சமூக அநீதியை ஏற்க முடியுமா?

14) நாம் கண்ட களங்கள் பலபல - இனிகாண வேண்டிய களங்களும் முக்கியமானவை.

15) நீட், தேசிய கல்விக் கொள்கை 2020, சமூகநீதி இம்மூன்றும் முக்கியமானவை - கவனம் செலுத்தப்பட வேண்டியவை.

16) நீட்டினால் - பலன் பெறுவோர் யார்? தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள். தனிப் பயிற்சிக் கூடங்களில் சேர்ந்து படிக்க இலட்ச இலட்சமாக செலவு செய்யக் கூடியவர்கள் இவர்களுக்காகத்தானே 'நீட்', மற்ற மக்களின் நிலை என்ன!

17) தனியார் துறைகள் வளர்ச்சி - பொதுத் துறைகள் எல்லாம் தாரை வார்ப்பு - நீட்டினால் கார்ப்பரேட்டுகள் கொள்ளை.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில் அங்கே யாருக்கெல்லாம் வேலை வாய்ப்பு?

18) 31 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டவர் உண்டா? பிற்படுத்தப்பட்டவர்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அல்லவா! தாழ்த்தப்பட்டவரும் ஒரே ஒருவர் தான் - எப்படி சமூகநீதி கிடைக்கும்?

19) 12 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் உள்ள கலாச் சாரத்தை ஆய்வு செய்யப்போகிறார்களாம்! அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் 16 பேர்கள் பார்ப்பனர்கள் - அதில் ஒருவர் அகில உலக பிராமணர் சங்கத் தலைவராம்! (நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைதான்!)

தென்னிந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் கிடையாது. திராவிடக் கலாச்சாரம் பற்றி பேச ஆள் கிடையாது.

20) ஊடகங்களைக் கைப்பற்றியாகி விட்டது - தன்னாட்சி அமைப்புகள் ஒடுக்கப்பட்டு விட்டன. எஞ்சியிருப்பது மக்கள் மன்றமே - வீதிகளே!

21) கிளர்ச்சிகள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டியவை உண்டு.

22) உச்சநீதிமன்றத்தில் சமூகநீதி தேவை - நம் நாடாளு மன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். தூதுக் குழுவாகச் சென்று குடியரசு தலைவரைச் சந்திக்க வேண்டும்.

23) இடஒதுக்கீட்டை நேரடியாக ஒழிக்க முடியாத நிலையில் திணிக்கப்பட்டதுதான் கிரீமிலேயர்.

24) மனுதர்மமா? மனிதத் தர்மமா? மனுதர்மமா சமதர்மமா? என்பது தான் இப்போதைய கேள்வி.

25) முனை மழுங்கா அறிவாயுதமாம் தந்தை பெரியார் கொள்கையை இளைஞர்களே கையில் எடுங்கள் - இளைஞர்கள் எழ வேண்டும். இளைஞர்கள் எழுந்தால் வெற்றி ஆகாதது எதுவும் இல்லை.

26) நம்முடையது கருத்துப் போர் உரிமைப் போர் - ரத்தம் சிந்தும் போர் அல்ல- வன்முறைக்குச் சிறிதும் இடம் இல்லை.

27) களம் நோக்கிச் செல்லுவோம் - வெல்லுவோம்! வாழ்க பெரியார்!

தமிழர்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உதிர்த்த முத்துகள் இவை. கழகப் பொருளாளர்

வீ. குமரேசன் நன்றி கூறினார்.