ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர் கதையா
September 28, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர் கதையா?

இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு அரசு ஒடுக்கியிருந்தால் இந்த நிலை தொடருமா?

விஷமங்கள்  ‘பூமராங்' ஆகும் - எதிர்விளைவை ஏற்படுத்தும்!

தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியைத் தரும்!

காவிக் கூட்டத்துக்கு எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர் கதையா? இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு அரசு ஒடுக்கியிருந்தால், இந்த நிலை தொடருமா? விஷமங்கள் ‘பூமராங்' ஆகும் - எதிர் விளைவை ஏற்படுத்தும். தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியைத் தரும் - காவிக் கூட்டத்துக்கு எச்சரிக்கை! எச்சரிக்கை!! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அத்துணைக் கட்சித் தலைவர்களும், ஆளுங்கட்சி உள்பட

கண்டனம் தெரிவித்துள்ளனர்

நேற்று (27.9.2020) விடியற்காலை திருச்சி இனாம்குளத்தூர் பெரியார் சமத்துவபுரம் முன் உள்ள தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணத்தைப் பூசியும், செருப்புகளை மாலையாகப் போட்ட அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான செயலைக் கண்டித்து நாட்டில் உள்ள அத்துணைக் கட்சித் தலைவர்களும், ஆளுங்கட்சி உள்பட கண்டனம் தெரிவித் துள்ளனர்.

பா.ஜ.க.வில் புதிதாக சேர்ந்து, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஒரு முன்னாள் அதி காரிகூட இதனை ‘‘விஷமக் கிருமிகள்'' செய்துள்ளன என்று கூறியுள்ளார்.

நாடெங்கும் இந்தக் கீழ்த்தர செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சியினரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை திருச்சி காவல்துறையினர் இதுவரை கைது செய்ததாகத் தெரியவில்லை. கொலைக் குற்றவாளி களைக்கூட 24 மணிநேரத்தில் கண்டுபிடித்து கைது செய்யும் தமிழகக் காவல்துறை - அடாத வன்முறை செயலை செய்யும் காவிக் கூட்டம் என்ற காலிக் கூட்டத்தினை மட்டும் ஏனோ கண்டுபிடிக்கும் ஆற்றலை இழந்து தவிப்பதற்கு மூல காரணம் என்ன?

வாய் பொத்தி, கைகட்டி,

செயலற்று கைபிசைந்து நிற்பதா?

காவி என்றவுடன் வாய் பொத்தி, கைகட்டி, செயலற்று கைபிசைந்து நிற்பதா?

தமிழகத்தில் உண்மையான சட்டத்தின் ஆட்சி, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு முறை யாக, நியாயமாக, பாரபட்சமின்றி நடை பெற்றால், இப்படிப்பட்ட சம்பவங்கள் - தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர் சிலைகள்மீது காவி வர்ணம் பூசி, இப்படிப்பட்ட கலவரத்தைத் தூண்டும் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்கியிருந்தால் இதுபோன்று நடக்குமா? அரியலூரில் குற்றவாளிகளைக் கையோடு பிடித்து, கைது செய்து உடனடி ஜாமீன் வழங்கும் ‘‘பெருந்தன்மை'' காவல் துறை அதிகாரிகளுக்கு வருவது ஏன்?

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்திருக்கிறார்கள்

நாம் நேற்று உடனடியாகக் கண்டன அறிக்கை கொடுக்காமல் இருந்தது ஏன் தெரியுமா? இதனை தமிழ்நாடு எப்படி பார்க்கிறது என்பதைப் பீறிட்டுக் கிளம்பும் பல கட்சிகளின், தலைவர்களின், அமைப்பு களின் உணர்வுகள், ‘‘பெரியார் அனை வருக்கும் உரியார் - அவர் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல'' என்பதை அந்த எழுச்சியே காவிக் கூட்டம் என்ற காலிக் கூட்டத்திற்குப் புரியவேண்டும் என்பதற்காகவே; காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்திருக் கிறார்கள்.

தந்தை பெரியார் சிலை கண்டு இவர்கள் அச்சப்படுவது ஒன்றே அவரே நம் உரிமைப் போருக்கான ஆயுதம் என்று இளைஞர் உலகம் முடிவு செய்து களத்தில் இறங்கி - காவிகளைத் தமிழ்நாட்டில் காலூன்றாது, வேரோடும், வேரடி மண்ணோடும் துடைத் தெறிய துடித்து நிற்கிறது என்ற சுவரெழுத் தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், காவி மட்டுமல்ல, அவர்களோடு தங்களது பலவீனத்தை மறைக்க கூட்டு சேருவோரையும் சேர்த்து, படுதோல்வி அடையச் செய்ய இத்தகைய காவிக் கூட்ட கயமைகள் அதற்கு உதவிடும் உரங் களாகவே அமைவது உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் என்கிறபோது, இதுபோன்ற செயல்கள் எப்படிப்பட்ட லாபகரமான வரவு களாக தி.மு.க.வின் கூட்டணிக்கு அமையும் என்பதை காலம் உணர்த்திட ஆயத்தமாகி விட்டது!

பெரியார் எப்போதும் எதிர்நீச்சலில் வாழ்ந்தவர்; வாழ்பவர்; வெற்றி கண்டவர்.

பெரியார்மீது ஒரு செருப்பு விழுந்தால், மறு செருப்பையும் தேடி எடுத்த ஒப்பாரும் மிக்காரும் இலாத நெஞ்சுரமுள்ள தலைவர் என்ற வரலாறு தெரியாத அறிவுச் சூன் யங்களே, அரசியல் சுன்னங்களே, காலிக் கூட்டமே - வாலை ஆட்டு, உன் வால் நாளும் நீளட்டும்!

தி.மு.க. கூட்டணிக்கு வெற்றிக் கனி

மடியில் விழ வைப்பது உறுதி!

ஒட்ட நறுக்கிட அரசியல் களம் மட்டுமல்ல - அனைத்துத் துறைகளிலும் தமிழகம் ஆயத்தம்; பெரியார் மண்ணில் காவிகள் காலூன்றும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டு, தமிழ்நாட்டையே ஒதுக்கிவிட்டதே அந்தத் தலைமை - அதன் பின்னர் கூடவா உங்களுக்குப் புத்தி வரக்கூடாது!

விஷமங்கள் ‘‘பூமராங்'' ஆகும் - எதிர் விளைவுகளாகி தி.மு.க. கூட்டணிக்கு வெற்றிக் கனியை மடியில் விழ வைப்பது உறுதி!

 

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

28.9.2020