ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்தினால் இடமாற்றமா
October 9, 2020 • Viduthalai • தமிழகம்

தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்தினால் இடமாற்றமா?

தலைவர்கள் கண்டனம்

சென்னை, அக்.9 கடலூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காவல்துறையைச் சேர்ந்த மூவர் மரியாதை செலுத்தி ஒளிப்படம் எடுத்துக் கொண்டதற்காக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து நேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத் தலைவர்களும் அதனைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். அவ்விவரம் வருமாறு:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

மதிமுக  பொதுச்செய லாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தந்தைபெரியார்அவர் களின் பிறந்த நாளான 17.09.2020அன்றுகடலூர் புது நகரில் காவல் நிலை யத்தில் காவலர்களாகப் பணியாற்றிய ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இருக்கிறார்கள்.

பெரியார் சிலையின் கீழ் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்தை இணைய தளத்திலும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனைச் சகித்துக்கொள்ள இயலாத காவல்துறை உயர் அதிகாரிகள், அவர்களை கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய் திருக்கிறார்கள்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் பெருமளவில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுக்க போராடிய பெரியார் அவர்களின் சிலைக்கு நன்றி உணர்ச்சியோடு மாலை அணிவிப்பதும், மரியாதை செலுத்துவதும் சட்ட விரோதச் செயலா? ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய செயலா?

பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் நடைபெறுவது என்பது கண்டனத்துக்குரியது.

உடனடியாக அந்தக் காவலர்களின் இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட வேண்டும் என்றும், காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் தவறான அணுகுமுறையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக செய்தித் தொடர்புச்செயலாளர் டி.கே.எஸ். இளங்கோ வன் எம்.பி., வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தனது பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிப் பரப்புரைக்கு எதிராகக் கடலூரில் எந்தஇடத்தில்பாம்பு, செருப்புஆகியவற்றை வீசி அவமானப்படுத்த நினைத்தார்களோ, அந்த இடத்திலேயே, தன் முன்னி லையிலேயே, தனது சிலைத் திறப்பு விழாவைக் கண்டு, தனது கொள்கையின் வெற்றியைத் தரணிக்குப் பறைசாற்றியவர் தந்தை பெரியார். கடலூர் கெடிலம் ஆறு - அண்ணா பாலத்தின் அருகே, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை இன்றும் கம்பீரமாக நின்று பழம்பெரும் வரலாற்றைப் பார்ப்போர்க்கு எடுத்துரைக்கிறது. அதைக் காணும் இளைய சமுதாயத்தினர்,  தம் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்ட - மானுடகுலம் போற்றும் அந்த மாமனிதருக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்துவது வழக்கம்.

கடந்த செப்டம்பர் 17 அன்று, தந்தை பெரியார் சிலைக்கு, கடலூர் காவல் நிலையக் காவலர்களான ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களைக் காட்டி மூவரையும் விழுப்புரம் சரக டி.அய்.ஜி.யின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கடலூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர்.

தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதும், நன்றி காட்டுவதும், காவல்துறைக்கு எந்த வகையில் நிர்வாகரீதியான இடையூறுகளை - சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேறெந்தக் குறிப்பிட்ட காரணங்களும் இல்லாத நிலையில், அவர்கள் மூவரையும் மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட சமுதாயத்து இளைஞர்கள் - பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கல்வி கற்று, நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்று, சமூகத்தில் உயர்ந்த நிலை அடைந்திட வேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். அவர் எண்ணிய நிலையை அடைந்த இளைஞர்கள் - பெண்கள் உள்ளிட்டோர் அவருக்கு மரியாதை செலுத்துவது போலவே, காவலர்களும் நன்றி காட்டியுள்ளனர். இதில் காவல்துறைக்கு என்ன நிர்வாகப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது?

தந்தை பெரியார் அவர்கள் அரசியல் கட்சியின் தலைவர் அல்ல; தேசத்தந்தை எனப் போற்றப்படும் அண்ணல்  காந்தி அடிகளைப் போல, தமிழ்நாட்டிற்கும், திராவிட இனத்திற்கும் தந்தை பெரியார் பொதுவான தலைவர்.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அனைவருக்காகவும், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இறுதி மூச்சு வரை அயராமல் பாடுபட்ட அரிய தலைவர். அதனால்தான் அவர் மறைவெய்தியபோது, முழுமையான அரசு மரியாதையுடன், அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெற ஆணை பிறப்பித்தார் நன்றியுணர்வு கொண்ட அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

தங்களுக்குப் பதவி கிடைக்கச் செய்தவர்களுக்கே நன்றி காட்டாத அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு, இந்த வரலாறு எங்கே நினைவிருக்கப் போகிறது?

அதனால்தான், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்திய காவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய அனுமதித்திருக்கிறது காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அரசு.

தந்தை பெரியாரின் தத்துவங்களில் முதன்மையானது சுயமரியாதை. தந்தை பெரியாரின் கொள்கை வார்ப்புகளில் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா. அந்தப் பேரறிஞரின் பெயரைக் கட்சிக்கு ‘லேபிளாக’  வைத்துக் கொண்டு, பதவி சுகத்திற்காகவும், சொந்தப் பாதுகாப்புக்காகவும், சுயமரி யாதையை அடமானம் வைத்து, சோற்றால் அடித்த பிண்டங்கள் போல, பிழைப்பு நடத்தும் எடுபிடி அ.தி.மு.க. அரசு, தனது டில்லி எஜமானர்களுக்குப் பாதம் தொட்டு சேவை செய்யும் வகையில், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும் போக்கினை அனுமதித்து வருகிறது. தந்தை பெரியார் சிலைக்கு நன்றி செலுத்திய காவலர்களை இடமாறுதல் செய்திருக்கிறது.

நிர்வாகக் காரணங்கள் எனும் சொத்தை வாதத்தை முன்வைக்கும் நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க. அரசின் வெட்கக் கேடான செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடமாறுதல் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்று, மூன்று காவலர்களும் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி செய்திட அனுமதித்திட வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் மூவர் பணி யிட மாற்றம் செய்யப் பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமானதொல். திருமாவளவன் கண்ட னம் தெரிவித்துள்ளார்.

கண்டன அறிக்கை வருமாறு:

"கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய மூன்று காவலர்களும் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். அதற்காக அவர்கள் மூவரையும் பழிவாங்கும் நோக்கோடு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் மூவரையும் மீண்டும் கடலூரிலேயே பணியாற்ற ஆணையிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கும் காவி உடை அணிவித்தும், காவிச் சாயத்தை ஊற்றியும் அவமரியாதை செய்ப வர்களைக் கைது செய்ய, தண்டிக்க முன்வராத தமிழக அரசு, இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூவரையும் தண்டித்திருப்பது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது அதிமுக ஆட்சியா அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியா என்கிற சந்தேகத்தை இது எழுப்புகிறது.

குறிப்பிட்ட காவலர்கள் மூவரும் தங்கள் பணி நேரத்திலோ சீருடையிலோ இதைச் செய்யவில்லை. அவர்கள் செய்தது எந்த விதத்திலும் சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காத்தவரும், சமூக நீதிக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவருமான பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது குற்றம் என்று தமிழக அரசு கருதுகிறதா? இதைத் தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்களுள் இருவர் தாழ்த்தப்பட்ட பிரிவையும், ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவையும் சேர்ந்தவர்கள். மூவருமே ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் மூவரும் எந்தவொரு புகாருக் கும் ஆளாகாதவர்கள். அப்படியானவர்களை இடமாற்றம் செய்து தண்டிப்பது ஏற்புடையதல்ல.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் மூவரையும் மீண்டும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றிட ஆணையிட வேண்டுமெனவும் தங்களின் ஆட்சி, பெரியார் வழிவந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரில் இயங்கும் ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் விசிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.