ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியாரை எதிர்க்கும் பா.ஜ.க.வின் போக்கில் மாற்றம் வருவதாகத் தெரிகிறது
September 26, 2020 • Viduthalai • இந்தியா

தந்தை பெரியாரின் அரசியலில் பா.ஜ.க. சிக்கியதா?

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு நிலைப் பாட்டை எதிர்த்துக் கொண்டே, அவரது சில கொள்கைகளை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதா என்ற கேள்வியுடன் கூடிய குழப்பத் தில் தமிழக பாஜக இருப்பதாக தெரிகிறது.

பல ஆண்டுகளாக சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் சிந்தாந்தத்தை கடுமையாக எதிர்த்து தனது ஹிந்து வாக்கு வங்கியை ஒரு நிலைப்படுத்த முயன்ற நிலையில், தற்போது பாஜக மாநிலத் தலைவர்  எல்.முருகன், தந்தை பெரியாரைப் பற்றி தெரிவித்த கருத்து, கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக நிறுத்தியுள்ளது. காரணம் எதுவாக இருப்பினும், தந்தை பெரியா ரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை பாஜக தலைவர் முருகன் பாராட்டியது, காவிக் கட்சியின் தலைவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநில தலைமையகத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி, பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, பாஜக தலைவர் முருகனிடம் அதே செப்டம்பர் 17-ஆம் தேதியில் 142-ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்படும் தந்தை பெரியாருக்கும் வாழ்த்து தெரிவிப்பீர் களா? என பத்திரிக்கை நிருபர்கள் நேரடியான கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முருகன், தந்தை பெரியார் சமூக சீர்திருத்தவாதி. வாழ்த்து சொல்வதில் எந்த தடையும் இல்லை என பதிலளித்தார். அதே நாளில், அண்மையில் பாஜக மாநிலத் துணைத் தலைவராக நியமிக் கப்பட்ட கே.அண்ணாமலை, தந்தை பெரியார் என அழைக்குமாறு, கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார். சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தந்தை பெரியார் போராடினார் என டிவிட்டரில் பதிவும் செய்தார்.

இந்த விஷயம் இத்துடன் முடிந்திருக்கும். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, விழுப்புரத்தில் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், தந்தை பெரியார் நிறைய சமூக மாற்றங்களைச் செய்துள்ளார். அவரது நல்ல கொள்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கடவுள் இல்லை என்பதை ஏற்க முடியாது என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மீண்டும் பதிலளித்தார்.

அறிக்கை வெளியிடுவதற்கும், குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிப்பதற்கும் வேறுபாடு உண்டு. ஊடகங்கள் இதை திரித்து  வெளியிடுகின்றன என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த 1925-ஆம் ஆண்டில், காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து சிலர் தங்களது அரசியல் நிலைப்பாட்டை உருவாக்கிட வெளி வந்தனர். தந்தை பெரியாரும், ஆர்.எஸ்.எஸூம் சமூக நீதிக்காக பாடுபட்டார்கள். ஆனால் இருவரது சித்தாந்தமும் ஒரு நாளும் சந்திக்காது, ஒன்று போல செல்லவும் முடியாது. ஒவ்வொரு வரும் தங்களது வழியில் சமுதாயத்திற்காக பாடுபடுகிறார்கள். எங்களுக்கென்று தலைவர்கள் உள்ளார்கள். சமூக முன்னேற்றத்திற்கு அவர்கள் செய்த காரியங்களை சொல்வதற்கும் இடம் உள்ளது என்றார் நாராயணன்.

ஆனால், தந்தை பெரியார் பற்றி எந்த விமர்சனமும் பதிவிட வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் முருகன், கட்சியின் சமூக வலைத் தள பிரிவிற்கு அண்மையில் அறிவுறுத்தி இருப்பது, கட்சி நிர்வாகிகளிடையே சில விரி சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

நாங்கள் பெரியாரையும் அவரது கொள்கை களையும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அப்பொறுப்பில் உள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார். தலைவர் முருகனிடம் இருந்து அத்தகைய அறிவுறுத்தல் எதுவும் வந்த தாக உறுதிப்படுத்தவும் மறுத்து விட்டார்.

நாங்கள் யார் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு இல்லை. எந்தத் தலைவரையும் அதுவும் உயி ரோடு இல்லாத தலைவர்களை புண்படுத்தும் எண்ணமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு பெரியாரின் சிலை மீது காவி வர்ணம் வீசியதை நாங்கள் கண்டித்தோம் என்றார் நாராயணன் திருப்பதி.

தலைவர் முருகன் தந்தை பெரியார் பற்றிய கருத்தில் உடன்படுவதில் எந்த தவறும் இல்லை என்றார் பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராசன்.  கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். நல்ல கொள்கைகளைப் பாராட்டுவதில் தவறில்லை ஆனால், பெரியா ரைத் தாண்டி தற்போது சிந்திக்க வேண்டியுள்ளது என்றார் நாகராசன்.  காலம் மாறிவிட்டது. இன் றைய தலைமுறை டிஜிட்டல் காலத்திற்கு தங் களை தயார்படுத்திவிட்டார்கள். யாரும் வித வைத் திருமணத்தை எதிர்க்கவில்லை. தேர்வு களில் தொடர்ந்து மாணவிகள், மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாக தேர்ச்சி பெறுகிறார்கள். பெரியாரின் கடவுள் கொள்கை மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தாக்கிப் பேசியது இவற்றை நாங்கள் ஒரு நாளும் ஏற்க முடியாது. ஆனால் அவரது மற்ற கொள்கைகளை அனை வரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் கூறினார் நாகராசன்.

தமிழகத்தில் அக்கட்சி அதிக மக்களிடம் சென்றடைவதற்குரிய சில  நடவடிக்கைகளை எடுத்திடுவதற்கான சில வழிமுறைகளை பாஜக தலைமை வகுத்துள் ளது. இளைஞர்கள் மற்றும் நேர்மறையான ஒரு போக்கை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித தாக்குதல், அரசியல் தலைவர்கள் குறிப்பாக பெரியார் போன்ற மாபெரும் தலைவர்களை இழிவுபடுத் துவது இவற்றிற்கெல்லாம் இடம் இல்லை என பாஜக தலைவர் முருகன் மற்றும் துணைத் தலைவர் அண்ணாமலை இருவருக்கும் நெருக் கமான ஒரு மூத்த தலைவர் தெரிவித்தார்.

பாஜக தலைவர்கள் மக்களை வசப்படுத்துவ தற்காகவும், வெகுமக்கள் அரசியலுக்காகவும், கட்சியின் அடிப்படையான சித்தாந்தத்தை புரிந்து கொள்ளாமல் பெரியாரை ஆதரிக்கின் றனர். இது கட்சியின் தற்போதுள்ள வாக்கு வங்கியை தக்கவைப்பதற்கும், அதேபோல மேலும் விரிவாக்கவும் உதவாது என்றார் அரசியல் விமர்சகர் கோலாகல சீனிவாஸ்.  பெரியார் திராவிட நாடு என்ற கோட்பாட்டை பிராந்திய உணர்வை தூண்ட உருவாக்கினார். பாஜகவின் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாடு அது என்றார் சீனிவாஸ்.

பெரியாரின் முக்கியத்துவத்தையும், தமிழ் நாட்டு அரசியலில் அவரது தாக்கத்தையும் பாஜக உணர்ந்து கொண்டது நல்லது டாக்டர் அம்பேத்கரை பிரதமர் மோடி புகழ்வது போல, முருகன் தந்தை பெரியாரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார் என சிலர் தெரிவித்தனர்.

பெரியாரை விமர்சனம் செய்வதன்மூலம், தமிழக வாக்காளர்களிடமிருந்து பாஜக விலகி நிற்கிறது. பெரியாரை அங்கீகரிப்பதன் மூலம், வரவேற்கத்தக்க, சரியான நடவடிக்கையை முருகன் எடுத்துள்ளார். இது தமிழகத்தில் பாஜக மேலும் வளர உதவிடும் என்றார் அரசியல் ஆய்வாளர் காசிநாதன்.

 நன்றி: 'டைம்ஸ் ஆப் இந்தியா', 25.9.2020

தமிழில்: கோ.கருணாநிதி