ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியாரின் இலக்கியப் பார்வை
September 12, 2020 • Viduthalai • மற்றவை

முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

தத்துவப் பேராசான் தந்தை பெரியார், இலக்கியத்தை எப்படி நோக்கினார்? எந்த வகையில் கணித்தார்?  அதன் தேவைகளை, பயன்களைப் பொறுத்தே பெரியாரின் நோக்கும், போக்கும்  அமைந்தது.

"எந்த நூலும் அதன் பயனை அளவாகக் கொண்டதே தவிர, அதனை ஆக்கியவனையோ, அற்புதத்தையோ அளவாகக் கொண்டது அன்று" என்பது அவர்  வரையறை!

"இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்?அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், மனித சமுதாய வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து" (விடுதலை 24.11.1961)

கலை கலைக்காகவே, கலை வாழ்க்கைக்காகவே என்று இரு சாரார், கலை - இலக்கியத்தைப் பற்றி பட்டி மன்றம் நடத்திய காலகட்டத்தில், வாழ்க்கை என்பதையும் தாண்டி, மனித சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதாக கலை இலக்கியங்கள் இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் பறைசாற்றினார் என்றால், அவரின் மாந்த நலக் கண்ணோட்டத்தை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏதோ பெரியார், கலை - இலக்கியங்களுக்கு எதிரானவர் போல் சித்தரிக்கப்படுவதையும், அப்படி விமர்சிக்கக் கூடியவர்களை விட பெரியார் கலை இலக்கியத்தின் மீது கரிசனம் உள்ளவராகவே இருந்துள்ளார் என்பது வெளிப்படும்.

கலையின் உருவம் மட்டுமன்றி, அதன் உள்ளடக்கத்தையும் வற்புறுத்துவது தமிழ் மரபு ஆகும்.

அதற்கு ஒப்பவே தந்தை பெரியாரும் கலை - இலக்கியத்தின் உள்ளடக்கமான பலனைக் கருதியே கலைகளை ஆதரித்தார். அதற்காக கலை உணர்வை முற்றிலும் புறக்கணித்தவரும் அல்லர் என்பதை அவரின் கூற்றிலிருந்து அறியலாம்.

"நம் கலைகள், நம்முடைய நாகரிகம், பண்பாடு அந்தக் காலத்திலேயே எவ்வளவு உயர்ந்திருந்தது என்பதைக் காட்டுகின்றன"என்றதோடு, கலைகளில் தன்னைப் பெரிதும் கவர்ந்த நாடகக்கலை பற்றிக் கூறுமிடத்து,"நாடகம், பகுத்தறிவு ஊட்டுவதாக, மக்களை ஒழுக்கமுள்ள சான்றோர்களாக்கும் சாணைக்கற்களாகத் திகழவேண்டும்" என்பதே அவரின் உள்ளக்கிடக்கையை உணர்த்துவதாய் உள்ளதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

"கலையிலும், மொழியிலும் கலப்படம் செய்வது, ஒருவரை மற்றவருக்கு அடிமைப் படுத்துவதாகும்" என்றும் கூறினார்.

தமிழர்தம்  பழங்கலைகளில் ஒன்றான பரதநாட்டியக் கலையைப் பற்றி, "அது ஆடுவோரையும்,  காண்போரையும் இரண்டறக் கலக்கச் செய்யும் ஆற்றல் மிக்கது. அது இன்று வெறும் சிற்றின்பக் கலையாகிச் சிறுமைப்பட்ட நிலையை மாற்றி, அறிவூட்டும் கலையாக ஆக்கிட வேண்டும்" என்று கலை வளர்ச்சிக்கான கருத்தை இப்படி தெரிவித்துள்ளார்.

இலக்கியம் என்பது ஒரு இனத்தை சீரிய இலக்கை நோக்கி இட்டுச் செல்வதாக இல்லாமல், பழமை, வைதீகம், மூடநம்பிக்கை, அறியாமை என்னும் படுகுழியில் தள்ளுவதாக இருக்கக் கூடாது. அந்தவகையிலேயே இலக்கியம் பற்றிய பெரியாரின் பார்வை இருந்தது.

"இலக்கியங்கள் என்பவை பெரிதும் சமய உணர்ச்சியோடு பழமைக் கற்பனைகளே அல்லாமல், அறிவு நிலையில் நின்று பழமைப் பற்றில்லாமல் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட இலக்கியங்கள் காண்பது அமாவாசை அன்று சந்திரனைப் பார்ப்பது போலத்தான் முடிகிறது.(விடுதலை15.10.1962)

நமது தமிழ் இலக்கியத்தில் இமயமலைக்கு அப்பால் எதையும் காண முடியாது. அதற்கு மேல் எங்கே போய் விடுவானோ என்று கருதி,  இமயமலை தான் கைலாசம்! அங்கு தான் கடவுள் இருக்கிறார்! என்று சொல்லிவிட்டான்"(விடுதலை 4.10.1967)

"தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள்- நூல்களே!"

 (விடுதலை 5.1.1968)

“தமிழில் ஆரியம் புகுந்ததால் தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கடல் கடந்து வணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்ற வில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?(விடுதலை - 5.1.1968)

“இலக்கியம் என்று பாராட்டப் படுகின்றவற்றில் உள்ள குறைகளையும்,மூடநம்பிக்கைகளையும், ஒழுக்கக் கேடுகளையும் தாராளமாக எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாகும். இதுதான் நமது புலவர்களின் இலக்கியத் தொண்டாக இருக்க வேண்டும்“ (விடுதலை 6.10.1964)

“இராமாயணத்திலும் பாரதத்திலும் ஆகாயவிமானம் இருக்கிறது. ஆனால் அது மந்திர சக்தியில் ஓடியிருக்கிறது ஆங்கிலத்தில் ஆகாயவிமானம் இருக்கிறதே அது இயந்திர சக்தியில் ஓடுகிறது. எது நமக்கு வேண்டும்? மந்திரச் சக்தியா? இயந்திரச் சக்தியா?” (விடுதலை 26.3.1937)

“எந்த தமிழிலக்கியத்தை எடுத்தாலும், அதில் கடவுள், மதம், கடவுளது  நடத்தை, மதச் சம்பந்தமான கொள்கைகள் இவைகள் இல்லாத இலக்கியம் ஒன்றாவது இருக்குமா? கடவுளையும் மதத்தையும் நீக்கித் தமிழ்  இலக்கியங்களைப் பார்த்தால் மிஞ்சக் கூடியது எது? எவ்வளவு?(விடுதலை 24.3, 1961)

தந்தை பெரியாரின் இலக்கியப் பார்வை எப்படிப்பட்டது? இலக்கியம் எதற்காக?   எப்படி இருக்க வேண்டும்? என்பவற்றை மேலே உள்ள கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பெரியார் விரும்பும் இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டும். இல்லாது போனால் கடுமையாக விமர்சிக்க செய்வார் பெரியார் என்பதையும் தமிழ் அன்பர்கள் உணரவேண்டும்.

மேல்நாடுகளில் கிபி 15ஆம் நூற்றாண்டில் இலக்கியமும், தத்துவமும் மதங்களின் பிடியிலிருந்து விடுபட்டன. தமிழகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை. இங்கே இலக்கியங்கள் என்பவை பெரும்பாலும் ஆரிய வர்ணாசிரம கறை படிந்தே காணப்படுகின்றன.

பண்டித தன்மை வேறு; அறிவு வேறு; சமயம் வேறு என்பது நமது அபிப்பிராயம் நமது நாட்டில் பிரிக்கப்படவில்லை”

(குடிஅரசு - 2.10.1927)

தமிழனுக்கு இலக்கியம் என்று சொல்வதற்குத் தனித் தமிழ் இலக்கியம் எதுவும் கிடையாது. தமிழில் ஆரியம் கலந்த இலக்கியங்களே இருக்கின்றன.

( விடுதலை 5.4. 1971)

“நமது இலக்கியங்களும், புராணஙகளும், சாஸ்திரங்களும் பெண்களை அடிமைப்படுத்துவதாகவே உள்ளன. “

“இலக்கியம் என்பது நாகரிகத்தைப் புகட்ட வேண்டும் மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.ஆனால், ஆண்களுக்குப் பெண்ணை அடிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதனால்தான் பெண்கள் சமுதாயம் தலையெடுக்கவே முடியாது போய்விட்டது.” (விடுதலை 25,2.1956)

“இலக்கியங்கள் இருந்தால் அது நாகரிகத்திற்கு, அறிவு வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிட வேண்டும். ஆனால் நம் நாட்டு இலக்கியங்களோ புலவர்களும், மதவாதிகளும், ஆரியர்களும் பிழைக்கத்தான் இருக்கின்றன. “

(விடுதலை 3.9.1956)

தொலைநோக்குப் பார்வையுடன் இலக்கியங்களை நோக்கியவர் தந்தை பெரியார். மேலை நாடுகளில் இலக்கியங்கள் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும், வாழ்க்கை மேம்பாட்டுக்கும் பயன்படும் இலக்கியங்களாக இருக்கும்போது, நம் நாட்டில் ஆரியர்கள், புலவர்கள் பிழைப்புக்கு மட்டுமே பயன்படுவதாக இருப்பதைக் கண்டிக்கிறார். பார்ப்பனியத்தைப் பாதுகாக்கவும், புகுத்தவும், ஆதிக்கம் கொழிக்கவும் இலக்கியங்கள் உதவுவதா? என்று சிந்தித்த பெரியார், எல்லாமே ஆரிய மயம் ஆவதற்கு துணைபோகக் கூடிய வகையில் நமது இலக்கியங்கள் இருந்த காரணத்தினால் தான் மனிதநேயர் பெரியார் அவற்றைச் சாடினார்.

“சமயம், சமுதாயம், கலை, பழக்க வழக்கம் முதலிய யாவும் ஆரியமயமாய், ஆரிய ஆகமம், ஆரிய ஆச்சாரம், ஆரிய தர்மம், ஆரியக் கதை ஆகியவைகளைக் கொண்ட இலக்கண இலக்கியம், சரித்திரம் காவியம்  ஆகியவைகளாக உள்ளன”(குடிஅரசு - 20.9.1947) என்றார்.

ஒழுக்கத்தை ஓம்பியவர் பெரியார். பக்தியைக் காட்டிலும் ஒழுக்கமே முக்கியம் என்றவர். சமுதாயமே ஒழுக்கம் இல்லையேல் எல்லாம் பாடுபடும் என்று பறைசாற்றியவர், அந்த வகையில் நமக்கான இலக்கியங்கள் என்று சொல்லப்படும் எந்த நூல்களுமே, காவியங்களுமே, கலைகளுமே ஒழுக்கத்தைப் போதிக்கின்றனவா? இல்லையே! அப்படி இருக்கும்போது இலக்கியங்களை எப்படிப் போற்றி வரவேற்பார் பெரியார்? கண்டனம் செய்வது முறைதானே!  சரிதானே!

“ சிலப்பதிகாரத்தில் ஆரியம், மடமை கலக்காமல் இருக்கும் பத்து வரிகளைக் காணமுடியாது. ஒழுக்கத்தைப் போதிக்கும் இலக்கிய நூல் எங்கே இருக்கிறது? ஒழுக்கத்திற்காக இலக்கியம் இல்லை என்பது மாத்திரமல்லாமல், ஒழுக்கத்திற்கான கல்வியும் இல்லை ஒழுக்கத்திற்கான மதமும் இல்லை. ஒழுக்கத்திற்கான அரசும் இல்லை”. (விடுதலை 3.9.1956)

எத்தனை நிதர்சனமான பெரியாரின் விமர்சனம்!

“தமிழ்த்தாய் உண்ட உணவு எல்லாம் சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய பஞ்ச காவியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பாரதம், ராமாயணம், பாகவதம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் முதலிய இவை தானே இருக்கின்றன;  இவர்களில் சுவை இருக்கலாம்; அழகாக இருக்கலாம்; முன்னேற்றத்திற்கான அறிவு இருக்கிறதா?” (விடுதலை 3.3.1948)

எத்தனை நியாயமான கேள்வி? அழகும், வர்ணனையும், சுவையும் இருந்து என்ன பயன்? அறிவு வளர்ச்சிக்கும், ஆக்கப்பூர்வமான தூண்டலுக்கும் எதுவும் இல்லாத இலக்கியத்தைப் பெரியார் ஏற்றுக் கொள்ளத்  தயாராக இல்லை.

இலக்கியம் என்பது இழிவை நீக்கி, மானத்தையும், அறிவையும் ஊட்டுவதாக நடப்பியல் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் இலக்கியக் கொள்கை எனலாம். தந்தை பெரியாரின் மொழி, இனம், கடவுள், நாடு, மதம் போன்ற எதன்மீதும் பற்று இல்லாத, வளர்ச்சி நோக்கிய மானுடப் பற்று ஒன்றே அவரது அனைத்து கொள்கைகளுக்கும் ஆணி வேராகும்.

இலக்கியத்தின் பயன் எதுவாக  இருக்க வேண்டும் என்பதைக் கீழ்கண்ட கேள்வி மூலம்  பெரியார் வெளிப்படுத்துவதைப் பாருங்கள்!

“நம் இலக்கியங்கள் ஆபாசம் நிறைந்ததாக, அறிவைப் பாழ்படுத்துவதாக, நடப்புக்கு ஒவ்வாததாக, ஒழுகக் கூடாததாக,  இழிமக்களாக்கக் கூடியதாக இருக்கிறதே தவிர, நம் இழிவைப் போக்கக் கூடியதாக, அறிவை வளர்ப்பதாக, நடப்புக்கு ஏற்றதாக இருக்கிறதா?”

பெரியாரின் இலக்கியப் பார்வை எது? என்பதற்கு இந்த கேள்வியே விடை!