ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தகுதி - திறமை எது
October 10, 2020 • Viduthalai • மற்றவை

தகுதி - திறமை எது?

பெரியார் கணிப்பும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பும்

‘இந்து தமிழ் திசை’  ஏட்டில் வெளிவந்த கட்டுரை கவனிக்கத்தக்கது. அது இதோ:

நடந்து முடிந்த பொதுப் பாடத் தேர்வு - அநியாயத்துக்குக் கடினமான ஒன்றாக இருந்தது. ‘தரமானது’ என்றாலே கடினமாகதான் இருந்தாக வேண்டுமா என்ன...? அதிலும் அந்தந்த துறை விற்பன்னர்கள் மட்டுமே பதில் அளிக்க முடியும் என்கிற அளவுக்கா ‘தரம்’ தேவைப்படுகிறது...?

கார்பன் நேனோ ட்யூப்ஸ், ’கோல்ட் ட்ரான்ச்’, ’செர்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட்’, ‘ட்ரிம்ஸ்’, ‘காஞ்ஜுடேட் வாக்சின்’ என்று ஒவ்வொரு பாடத்துக்கு உள்ளும் ஆழமாக நுழைந்து கேட்பதை - ஒரு தேர்வராக ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்.

போட்டித் தேர்வுக்கான அளவுகோல் - பல்வேறு துறைகளில் அறிதலும், புரிதலும் தானே அன்றி, அப்பாடங்களின் நுண்ணிய பொருளை ஆராய்ந்து சொல்வதல்ல. இந்த விதி, அநியாயத்துக்கு மீறப்பட்டு இருக்கிறது.

‘ப்ளூரி பொடன்ட் ஸ்டெம் செல்’, நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2003; சைபர் காப்பீடு; கார்பன் - ‘சமூக விலை’; இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாள நாட்டுடன் வர்த்தக உறவு; மற்றும் ‘west taxes intermediate’ தொடர்பான வினாக்கள், தேர்வர்களை சவாலுக்கு அழைப்பது போல் உள்ளதே அன்றி, அவர்களின் பொது அறிவுத் திறனை சோதிக்கிற முயற்சியாகப் படவில்லை.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி, இந்தியாவின் பல்லுயிரிகள் - ‘சிலோன் ஃப்ராக்மவுத், காப்பர்ஸ்மித் பார்பட், சாம்பல் நிற மினியெட், வெள்ளை தொண்டை ரெட்ஸ்டார்ட் ஆகியன.. தேர்வர்களைக் கலங்கடிக்க வைக்கும் கேள்விகள்.

எத்தனை மாதங்கள் படித்தாலும் யாராலும் இத்தனை துறைகளில் புலமை பெறுவது இயலாத காரியம். கேள்விகளின் கடினத் தன்மை, ஒரு பாடத்தின் ஆழத்தைப் பொறுத்ததாக அமைவது, எல்லாருக்குமான பொதுவான போட்டித் தேர்வில் தவிர்க்கப்பட வேண்டும்..

தேர்வு முடிந்து சில மணி நேரங்களுக்கு, துறை சார்ந்த ’நிபுணர்கள்’ கலந்து ஆலோசித்து, விடைகளைத் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. என்ன பொருள்..? இது, பொதுத் தேர்வர்களுக்கான பொதுத் தாள் அல்ல.

மொத்தம் 100 கேள்விகளில், நிபுணத்துவம் இருந்தால் அன்றி விடை அளிக்க முடியாது என்கிற வகைக் கேள்விகள் - 40க்கும் மேல் இருந்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு மிக அதிகம். ’வடிகட்டுகிற வேலைக்கு’ உதவும் என்பதன்றி வேறு எந்த நியாயமும் இவ்வகைக் கேள்விகளில் இல்லை.

அறிவியல் - தொழில்நுட்பம், பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம், ‘தேசிய வரலாறு’ ஆகிய பகுதிகளில், ‘கணிக்க முடியாத’ பகுதிகள், அதிகம்; ‘பரிச்சயம்’ அற்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் ஏராளம்.

விவசாயம் தொடர்பான கேள்விகள் கூட, விவசாயக் கல்வி சார்ந்து இருந்த அளவுக்கு, நேரடியாக வேளாண்மை பற்றி அதிகம் இல்லை. ஆனால் மிக கவனமாக, ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ பற்றி மீண்டும் மீண்டும் குறிக்கப்படுகிறது!

‘தேசிய வரலாறு’ பகுதியில், காவிரி டெல்டா, சோழ - பல்லவ சாம்ராஜ்ஜியம் என்று 2 கேள்விகளில் மட்டும், தமிழ்நாடு பற்றிய கேள்விகள் ஏதோ தலை காட்டுகின்றன. ஆனால் நாம் கேள்விப்பட்டிராத பல பெயர்கள், பல சம்பவங்கள் ஆங்காங்கே வந்து ‘மிரட்டுகின்றன’.

‘இந்து தமிழ் திசை’ ஏட்டில் (7.10.2020) பக்கம் 10இல் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் எழுதிய கட்டுரைதான் மேலே எடுத்துக்காட்டப்பட்டு இருக்கிறது.

கட்டுரையின் தலைப்பு “யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: கிராமம் Vs நகரம்?”

கட்டுரையின் உள்ளடக்கம் (Lead)  பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுக்கான அளவுகோல் - பல்வேறு துறைகளில் அறிதலும், புரிதலும் தானே அன்றி அப்பாடங்களின் நுண்ணிய பொருளை ஆராய்ந்து சொல்வதல்ல - இந்த விதி நடந்து முடிந்த யுபிஎஸ்சி தேர்வில் அநியாயத்துக்கு மீறப்பட்டுள்ளது என்று முக்கிய அம்சமாகக் கூறியுள்ளது.

இவ்வளவுக்கும் இது முதல்நிலைத் தேர்வுதான். ஏன் இத்தகைய கடுமையான கேள்விகள்?  இவற்றிற்கும், பொது அறிவிற் கும் என்ன சம்பந்தம்? கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதுபோல தொழில் நுட்பம், நுணுக்கம் தெரிந்து கொள்வதற்கு தேர்வர்கள் அந்தத் துறைப் படிப்பாளிகளா?

ஏதோ ஒரு பட்டப் படிப்பு இருந்தால் இத்தகைய தேர்வுகள் எழுதப் போதுமானது என்ற நிலையில், எத்தனை மாதங்கள் படித்தாலும் யாராலும் பதில் சொல்லப்பட முடியாத வினாக்கள் என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

சகல வசதியும், வாய்ப்பும் கொண்ட நகர்ப்புரத்தைச் சேர்ந்த படிப்பாளிகளாலேயே பதில் அளிக்க முடியாத கேள்விகளுக்கு ஏதுமற்ற, வசதியற்ற, முதல் தலைமுறையைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  பதில் களை அளிப்பார்கள் என்று நினைத்துத்தான் பார்க்க முடியுமா?

இது ஏதோ எதேச்சையாக நடந்த ஒன்று என எண்ணி ஏமாந்துவிடக் கூடாது. திட்டமிட்டுதான் இது நடந்திருக்கிறது. தப்பித் தவறி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று பெரும் பதவிகளின் நாற்காலிகளில் அமர்ந்துவிடக் கூடாது என்று கருதும் ‘தீட்டு’ எண்ணம் கொண்ட ஆதிக்கச் சூழ்ச்சி இதன் பின்னணியில் படம் எடுத்து ஆடுகிறது.

மார்க்கு தான் தகுதி -  திறமைக்கு அளவுகோல் என்பது அசல் பித்தலாட்டம் என்பார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். மார்க்கு வாங்குவது என்பது ஒரு வகையான கலை. கற்றுக் கரை சேர்ந்த பல தலைமுறையாகப் படித்த கூட்டத்திற்கு இது ஒரு கை வந்த கலையாகும்.

மனப்பாடக் கல்வி என்பதே கூட - புரோகிதக் கூட்டத்துக்கு மிகவும் வசதியானதே! மந்திரங்களை மனப்பாடம் செய்து உருப்போட்டு, உருப்போட்ட அந்த மரபணு அவர்களின் இரத்தத்திலேயே கலந்த ஒன்று. எனவே இந்த மனப்பாட முறையை படிப்பு முறையாக வைத்துள்ளனர் பார்ப்பனர் என்று கூறுவார் தந்தை பெரியார்.

உதாரணம் கூடக் கூறுவார். “ஒரு சப் இன்ஸ்பெக்டராக ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? உடல் வலிமை, துணிவு, சமயோசிதப் புத்தி வேண்டுமே தவிர, ‘நான் எம்.எஸ்.ஸி ஃபஸ்ட் கிளாஸ் - திருடா ஓடாதே நில்’ என்று சொன்னால் திருடன் நின்று விடுவானா” என்று பொதுக் கூட்டங்களில் எல்லோருக்கும் புரியும் படிக் கூறுவார். மக்கள் மத்தியில் சிரிப்பு அலைகள் வெடித்துக் கிளம்பும்.

இரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் போடுபவன் அதிக மார்க்கு வாங்கிய மாத்திரத்திலேயே மருத்துவக் கல்விக்குத் தேர்வு செய்யலாமா? என்ற தந்தை பெரியாரின் கேள்விக்குப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

தந்தை பெரியார் கூறிய தகுதி - திறமையின் அளவு மார்க்கு அல்ல என்ற கருத்தினை வெவ்வேறு சொற்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகளும்கூடச் சொன்னதுண்டே!

1992ஆம் ஆண்டு பீகாரில் லாலு பிரசாத் (யாதவ்) அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது மருத்துவ மேல் பட்டப் படிப்புக்காக மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடுக்கு வகை செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்டோருக்கு 14 சதவீதம்,

மலைவாழ் மக்களுக்கு 10 சதவீதம்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதம்,

பிற்படுத்தப்பட்டோருக்கு 9 சதவீதம்,

பெண்களுக்கு 3 சதவீதம் என்று ஒதுக்கி ஆணை பிறப்பித்தார் பீகாரில் லாலு பிரசாத். 

இதனை எதிர்த்து உயர்ஜாதியினர் உச்சநீதிமன்றம் சென்றனர்.

நீதிபதிகள் எஸ்.சி. அகர்வால், பி.பி. ஜீவன் ரெட்டி, எம்.கே. முகர்ஜி ஆகிய மூன்று நீதிபதிகளும் வழக்கினை விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர்.         

‘No one will be passed unless he acquires the requisite level of promotency. Secondly the academic performance is no guarantee of efficiency in practice. We have seen both in law and medicine that persons with brilliant academic record do not succeed in practice while students who were supposed to be less intelligent come out successful in profession. It is, therefore, wrong to presume that a doctor with good academic record is bound to prove a better doctor in practice it may happen or may not.

“முதலில் தேவையான அளவுக்கு அறிவுத்திறன் இல்லாத எவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. இரண்டாவதாக தேர்வுகளில் காட்டுகிற திறமையை வைத்து - அவர் தொழிலிலும் திறமையாகச் செயல்படுவார் என்பதற்கு உத்தரவாதம் கூற முடியாது. சட்டப் படிப்பானாலும் சரி; மருத்துவப் படிப்பானாலும் சரி; படிப்பில் மிகப் புத்திசாலித்தனமான மாணவர்கள் என்பதற்கான சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் நடைமுறையாக தொழிலில் கெட்டிக்காரர்களாக இருந்து விடுவது இல்லை.

அதே நேரத்தில் தேர்வுச் சான்றிதழ்களில் குறைந்த புத்திசாலிகள்போல் தோன்றுபவர்கள் தொழிலில் மிகவும் திறமைசாலியாகி வெற்றி பெறுகிறார்கள். எனவே நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் டாக்டர்கள் எல்லோருமே தொழில் ரீதியாகவும் நல்ல டாக்டர்களாகத்தான் இருப்பார்கள் என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிடுவது தவறு; அப்படி நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். 

இரயில்வே துறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ணய்யர், ஆர்.ஸ்.பதக், ஓ.சின் னப்பரெட்டி ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்‘ அளித்த  தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முத்திரை பொறிக்கத்தக்கதாகும்.

நீதிபதிகள் தனித்தனியாக வழங்கியுள்ள தீர்ப்பில் ஒருமித்த முறையில் கருத்தினை வழங்கினார்கள்.

ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ணஅய்யர் குறிப்பிட்டு இருக்கும் பகுதி மிக முக்கியமானது.

இந்திய மக்கள் தொகையில் அய்ந்தில் ஒரு பங்கினரைக் கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் தனியாக ஒதுக்கப்பட்ட பிரிவினர்களாக்கப்பட்டிருந்ததன் காரணமாக இவர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டவர் ஒரு பக்கமும் மற்ற ஜாதியினர் ஒரு பக்கமுமாக மிகப் பெரிய பிளவு சமுதாயத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

இவர்களின் சமூகப் பொருளாதார பின்னடைவுத் தன்மையை ஒழித்திட, தனிச் சலுகைகள் வழங்குவதற்கு அரசியல் சட்டமே அங்கீகரிப்பதால் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதை செல்லாது என்று சொல்ல முடியாது.

அரசியல் சட்டம் 15(4) 16(4) பிரிவின்படி தாழ்த்தப்பட்ட மலைசாதியினருக்கு மார்க் வரம்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. அமுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு மேலும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதில் குறை சொல்வதற்கு ஒன்றும் கிடையாது.

இப்படி பதவி உயர்வு தருவதால் ‘தகுதியின்மை’ தலை தூக்குகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நீதிபதி கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பில், “தாழ்த்தப்பட்டோர் நியமனம் என்பது  எண்ணிக்கையில் மிகவும் குறைவான சதவீதம்தான். மூன்றாவது, இரண்டாவது நிலை உத்தியோகங்களில்கூட இவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இடஒதுக்கீடு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பெரும்பாலான மற்ற சமுதாயத்தைச் சார்ந்த ஊழியர்கள் ‘திறமை’யாக இருக்கும்போது இந்தச் சிறிய எண்ணிக்கையில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினாலா, தகுதி போய் விடுகிறது” என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு பிரிவுகளில் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே உள்ள தாழ்த்தப்பட்டவர்களால், நிர்வாகத் திறமையே போய் விடுகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகும். வாய்ப்புகள் சூழ்நிலைகளை உருவாக்கித் தந்தால், இந்தியாவின் தாழ்த்தப்பட்டவர்கள் இந்த நாட்டை உயர்த்திப் பெருமைப்படுத்திக் காட்டுவார்கள்” என்றும் நீதிபதி கிருஷ்ணய்யர் தமது தீர்ப்பில் மேலும் கூறியுள்ளார்.

2008 ஏப்ரலில் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் அவர்கள் தந்த தீர்ப்பு ஒன்றும் முக்கியமானது. 

“நம் அரசமைப்புச் சட்டம் ஜாதியற்ற சமுதாயத்தை நிர்ணயிக்கவில்லை. ஜாதியை ஒழிப்பதற்கும் முனையவில்லை. ஆனால் ஜாதியின் பெயரால் இருந்து வரும் வேறுபாடுகளைப் போக்கி சரி செய்யும் நடவடிக்கைகளை  மேற்கொள்வதன் மூலம் ஜாதியின் காரணமாக நிலவி வரும் அந்தஸ்துவேறுபாடுகளையும் போக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் முயல்கிறது. அப்படி ஜாதியின் அடிப்படையில் இருக்கும் அந்தஸ்து வேறுபாடுகளைப் போக்கிவிட்டால், எல்லா ஜாதிகளும் சமமாகி விடும் ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கான தொடக்கமாக அது அமையும்“ என்று தீர்ப்புக் கூறியுள்ளாரே.

ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்து ஒடுக்கப்பட்ட மக்களின் அந்தஸ்தை உயர்த்துவதன் மூலமாகவே ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

மற்ற மற்ற பிரச்சினைகளில் எல்லாம் நீதிமன்றம் சொல்லுகிறது - சொல்லுகிறது என்போர் இதனையும் நீதிமன்றம் தானே சொல்லுகிறது - சிந்திக்க வேண்டாமா?

இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை செத்துப் போய் விடும் என்று ஒப்பாரி வைத்த உயர்ஜாதியினர் - உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோர்க்கு இப்பொழுது 10 சதவீதம் (EWS) வழங்கப்படுகிறதே - இப்பொழுது மட்டும் தகுதி, திறமை தூக்கு மாட்டிக் கொள்ளாதா?

பார்ப்பனர்களைப் பொறுத்த வரை எல்லாம் தம் சுயநலத்தை முன் வைத்துதான் - உணர்வீர்!