ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஜோபைடன் என்ற மாமனிதர்!  (1)
November 9, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

அமெரிக்க அதிபராக கடும் போட்டிக்கிடை யில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜன நாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோபைடன் அவர்கள் பற்றிய - அரசியலுக்கு அப்பாற்பட்ட அரிய தகவல்கள் - அவர் எத்தகைய சகிப்புத் தன்மையும், பொறுமையும் வாய்ந்த, எந்த கடுஞ்சோதனைகளையும் தாங்கி, தாண்டி வாழ்வில் வெற்றி பெற்று வந்தவர் என்பதை நன்கு விளக்குகின்றன.

வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புகளையும், அதிர்ச்சிக்குரிய நிகழ்வுகளையும் சந்தித்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற விரக்தியின் விளிம்புக்கே கூடச் சென்று அந்த கவலையைப் புறந்தள்ளி, அதிலிருந்து மீண்டு, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை ஓர் அமைதியும், ஆழமும் நிறைந்ததாகவே ஆக்கிக் கொண்டு எவ்வாறு ஜோபைடன் என்ற அந்த மாமனிதர் முன்னேறினார் என்ற மனித இயல்பு களை உள்ளடக்கிய அவரது வாழ்வின் குறிப்புகள் பற்றிய சில தகவல்கள்  - (அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியது அல்ல).

1972 இல் சட்டம் படித்து வழக்குரைஞராக வரவேண்டியவரான இவர், தமது மிகக் குறைந்த வயதில்  (31 வயது) செனட் சபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அரசியலுக்கு வந்தார் - மகிழ்ந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி பெரும் அளவில் நீடிக்க முடியாத அளவுக்கு வாழ்க்கையில் ஒரு சோக நிகழ்வு நடந்தது.

தனது துணைவியார் நீலியா, மகள் ஏமி, மகன்கள் பியூ மற்றும் ராபர்ட் ஆகியவர்களுடன் ‘கிறிஸ்துமஸ் ஷாப்பிங்’ சென்ற போது, இவரது காரின்மீது ஒரு டிராக்டர் மோதி, இவரது துணை வியார் நீலி, 9 வயது மகள் ஏமி கொல்லப்பட்டனர். மகன்கள் பியூ, ராபர்ட் ஆகியோர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தனர்.

இந்த சோகத்திலிருந்து அவரால் எளிதில் மீள முடியவில்லை; காரணம் இரண்டு தாயற்ற சிறு ஆண் பிள்ளைகளை வளர்க்கும் ‘ஒற்றைத் தந்தை’ நிலைக்குத் தள்ளப்பட்டார்! அவர் அடைந்த துயரம், துன்பம் அளவிடற்கரியது.

ஒரு கட்டத்தில் அவரது மன அழுத்தம் மிக அதிகமாகி தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட யோசிக்கும் அளவுக்குச் சென்று விட்ட நிலைமை!

எனினும் அவர் அதன் பிறகு தெளிவடைந்து “ஏன் நாம் வாழ்க்கையில் நம்பிக்கை இழக்க வேண்டும்? எதையும் எதிர்கொண்டு வாழும் பக்குவத்தைப் பெறுவதுதானே சரியான அறிவு வழி. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கடமையாற்றி அந்த துன்பத்திலிருந்து மீளும் வழிகாண வேண்டும்'' என்ற திட சித்தத்துடன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்!

இரண்டு இளம் மகன்களையும் வளர்க்கும் தந்தை - தாயின் பெருங்கடமையை அவர் ஆற்றிடத் தயங்கவில்லை.

36 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் AMTRAK - ரயிலில் பயணம் செய்து, தனது பணிகளை முடித்து, வீட்டிற்கு வந்து தனது பிள்ளைகளுக்கு அன்பையும், பாசத்தையும், உணவையும் ஊட்டி வளர்த்தார்; படுக்கையில் அமர்த்திக் கொண்டு பல கதைகளைப் படித்துக் கூறி அவர்களைப் பக்குவப்படுத்தி வளர்த்தார்!

1987ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்த லில் போட்டியிட முடிவு செய்தார் பைடன். அதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது அவருக்குத் தலையில் அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டது. அவருக்கு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் இரண்டு மிகப்பெரிய வீக்கங் கள் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக தலையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் எனவும் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அதனால் ஏற்பட்ட பக்க விளைவாக அவரது நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட வழிவகுத்தது. இதனால் மீண்டுமொரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டார் பைடன். எப்போதும் தடை களிலிருந்து மீண்டெழும் குணம் படைத்த பைடன், ஏழு மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார்.

வாழ்க்கையின் சோக மேகங்களும், இருட் டும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங் கின. என்றாலும் வாழ்க்கை என்பது பல எதிர் பாராத அதிர்ச்சித் திருப்பங்களைக் கொண்டது தானே! - இல்லையா? அதை எதிர்பார்க்கத்தானே வேண்டும்!

இவரது மகனுக்கு 46 வயது. மூளைப் புற்று நோய் அந்த பிள்ளையைத் தாக்கியது - அவரை மிகப்பெரிய துன்பக் கடலில் தள்ளியது. அவ ருக்கு சிகிச்சை, மற்றவைகளையும் ஏற்பாடு செய்து தனது அன்பைப் பொழிந்தார்! ஆனா லும், மகன் இறப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.

மகன் மரணமடைந்த சோகம் இவரை மீண் டும் தாக்கியது. எதையும் தாங்கும் இதயத்தோடு ஜோபைடன் இந்தத் தாங்க முடியாத இழப்பை யும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று கருதி அதை ஏற்றுக் கொண்டார். தனது பொது வாழ்வுப் பணியை - துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு, பராக் ஒபாமா அவர்கள் குடியரசுத் தலைவராக - அதிபராக இருந்தபோது அவரால் பெரிதும் கவரப்பட்டவரானார்!

எவ்வளவு துன்பம், துயரம் தொல்லைகள் தொடர்ந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் வாழ்வது என்பது பாடம் அல்லவா?

தனது  துணைவி, மகள், பிள்ளைகள் எப் போதும் தன்னுடன் இருக்கிறார்கள் என்ற உணர் வுடன் வாழத் தொடங்கினார், துயரத்தையும் போக்கிக் கொண்டார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இவரைப் பற்றி அருமையாகச் சொன்னார். “பாசாங்கு இல்லாது மனிதர்களை நேசிக்கும் அன்பான பண்புள்ளவர்; அவரது தொண்டு தொய்வில் லாதது - தன்னலமற்றத் தொண்டுள்ளம் அவரு டையது” என்று கூறியது சரியான மதிப்பீடு - சிறந்த பாராட்டும்கூட!

அத்தகைய சிறந்த மாமனிதர். எதிர்நீச்சல் அடித்து, அமெரிக்க நாட்டை ஒரு வகையான தனி மனித சர்வாதிகார ஆபத்திலிருந்து மீட் டெடுத்து, ஜனநாயகத்தை - புத்துயிரும் புத்தாக்கமும் தர ஆயத்தமாகியுள்ளார் என்பது  நற்செய்தி அல்லவா?

(ஒரு காணொலியின் மூலம் திரட்டப்பட்ட தகவல் இது!)