ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஏன்
September 11, 2020 • Viduthalai • தலையங்கம்

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஏன்?

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங் களில் சேருவதற்கு ஜே.இ.இ. முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு 2 முறை நடத்தப்படும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தேர்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த 1ஆம் தேதி தொடங்கி 6ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 9 1/5 லட்சம் பேர் எழுத இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 8 லட்சத்து 58 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத விருப்பம் தெரிவித்து இருந்ததாக தற்போது கூறியுள்ளார். தேர்வு தொடங்கு வதற்கு முன்பே கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இருக்கும் இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது குறித்து பல எதிர்ப்புகள் வந்தன.

இருப்பினும் அவற்றை மீறி மத்திய அரசு தேர்வை நடத்தி முடித்து இருக்கிறது. அதன்படி, தேர்வு எழுத விண்ணப்பித்த மாண வர்களில் 74 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய ‘சுட்டுரை’ பக்கத்தில், ‘ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு 8 லட்சத்து 58 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில், 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் தேர்வை எழுதி இருக்கின்றனர். மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் மாணவர்களுக்கு தேர்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தன. இதற்காக அனைத்து மாநில அரசுகளை யும் பாராட்டுகிறேன். இந்த தேர்வில் பங்குபெறாத மாணவர்களில் சிலர், கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று இருக்கலாம். அதனால் அவர்கள் இந்த தேர்வுக்கு வராமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று சமாதானம் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வு நடந்த ஜனவரி, ஏப்ரல் மாதத்தில் முறையே 94.11 சதவீதம், 94.15 சதவீதம் மாணவர்கள் வருகை தந்து தேர்வை எழுதி இருந்தனர்.

கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மைத் தேர்வினை - விண்ணப் பித்தவர்களில் 94 விழுக்காட்டுக்கு மேல் தேர்வு எழுதி இருந்த நிலையில் இவ்வாண்டு கடந்த முதல் தேதி முதல் ஆறாம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் வெறும் 74 விழுக்காடு மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதியது எதைக் காட்டுகிறது?

கரோனா தொற்றுக் கடுமையாக இருக்கும் இந்தக் காலகட்டம் என்பது வெறும் உடல் நலனைப் பொறுத்த பிரச்சினை என்று மட்டும் எண்ணக் கூடாது.

பல்வேறு சமூக பொருளாதாரம் மற்றும் எண்ண வோட்டங் களையும் பாதித்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். யாரும் எதிர்பாராத இந்தக் கரோனா தாக்குதலால் உலகம் முழுவதும் மனித வாழ்க்கையின் போக்கையே புரட்டிப் போட்டுள்ளது.

கல்விக் கூடங்களைத் திறக்க முடியவில்லை. காணொலி மூலம் கல்வி என்பது கூட, காலம் தாழ்ந்து தான் தொடங்கப்பட்டுள்ளது. கல்வி கற்கும் நிலையில், தேர்வுகள் எழுதும் மனோ நிலையில் மாணவர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

வசதி வாய்ப்புள்ள குடும்பங்களைச் சார்ந்த இருபால் மாணவர் களின் சூழ்நிலை வேறு. அன்றாட வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி விட்டது இந்தக் கரோனா. வேலை வாய்ப்பின்றி அல்லப் படும் குடும்பங்கள் கோடானு கோடி. தொடக்கத்தில் அரசு ஏதோ உதவி செய்திருக்கலாம். அந்த உதவிகள் எல்லாம் தற்காலிகமான தாகவே இருந்தன என்பதுதான் உண்மை.

மாநில அரசுகள் தான் தங்கள் சக்திக்கு உட்பட்ட நிலையில் இந்த உதவியைச் செய்திருக்கின்றன. மத்திய அரசைப் பொறுத்த வரையில் 'கைதட்டுங்கள் - வீட்டில் விளக்கேற்றுங்கள்' என்று பிரதமர் 'மன்கிபாத்தில்' கூறியதோடு கை கழுவிவிட்டார்.

மத்திய நிதி அமைச்சரோ 'கரோனா கடவுள் செயல்' என்று கூறி, 'விலை உயர்ந்த' சோப் போட்டு ஒட்டு மொத்தமாகக் கைகழுவி 'தேங்காய்ப் பூ துண்டால்' (Torkey Towel) துடைத்துக் கொண்டு விட்டார்.

பராசக்தி திரைப்படத்தில் 'பஜனை செய்வோம் - பட்டினி கிடந்து பஜனை செய்வோம்!' என்று ஒரு பாடல் வரும். அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.

இது ஒரு பக்கம் என்றால், அன்றாடக் குடும்ப வாழ்க்கையை நகர்த்துவதற்கே மூச்சுத் திணறும் - மன உளைச்சல் பிடுங்கித் தின்னும் ஓர் இருண்ட சூழ்நிலையில், தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்ற ஜே.இ.இ. தேர்வு - 'நீட்' தேர்வுகளை நடத்தியே தீருவது என்பது ஒரு வகையில் உயர்ஜாதி மற்றும் உயர்தட்டு ஜமீன் மனப்பான்மையே தவிர, மக்கள் நல அரசு என்னும் தன்மைக்கே மாறுபாடான அணுகு முறையாகும்.

'நீட்டே' கூடாது - அது பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் கல்வி திட்டத்துக்கு மாறானது - மாணவர்களை தற்கொலை வரை இழுத்துச் செல்லுகிறது. கடந்த 'நீட்' தேர்வுகள் மூலம் அது தெளிவாகிறது என்று திட்டவட்டமாகத் தெரிந்திருந்தும் - முதல் தலைமுறையாக கல்விப் படிக்கட்டுகளை மிதிக்கும், ஏழை எளிய கிராமப்புற மக்களை மிகப் பெரிய அளவில் பாதிக்கும் என்ற நிலை இருந்தும், அதனை விடாப்பிடியாக நடத்தியே தீருவது என்பதில் அதிவேகம் காட்டுவது - பெரும்பாலான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, மக்ளுக்கு எதிரானதாகும். மக்கள் விரோத ஜனநயாக விரோத 'பாசிச' போக்காகும்.

இந்தக் கரோனா காலத்தில்கூட வசதி வாய்ப்புள்ளவர்கள், தலைமுறை தலைமு¬றாயகக் கல்வியில் புடம் போட்டவர்கள் நிலை என்பது வேறு - பெரும் பகுதி மக்களின் "சுற்றுச் சூழல்" என்பது வேறு. எட்டு மாநிலங்கள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், சமூகநீதிப் பார்வை இல்லாத நிலையில் - மனுக்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யப்பட்டன என்பது - என்னே கொடுமை!

இந்த மனுதர்மச் 'சூழல்' என்னும் 'கரோனா'தான் நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கிறது என்பதை வெகு மக்கள் புரிந்து கொள்ளட்டும். அதற்கேற்ப செயல்பட முன்வரட்டும்!