ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும் - சிந்தனையும்
September 20, 2020 • Viduthalai • மற்றவை

கார்கில் விநாயகர் எங்கே?

செயங்கொண்டம் விநாயகர் கோயில் உண்டியலில் - அடிப்பக்கம் துளையிட்டு நூதன திருட்டு!

கார்கில் விநாயகர், ரபேல் விநாயகர் என்றெல்லாம் நூதன விநாயகர்களை உற்பத்தி செய்து, ஊர்வலம் விட்டுப் பயன் என்ன? இந்த நூதனங்கள் - திருடர்களின் நூதன திருட்டைத் தடுக்க முடியவில்லயே! இவர்தான் விக்னேஷ்வரராம். அதாவது துன்பம் வராமல் தடுப்பவராம்.

கடவுளிலும் மதமா?

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கும் இந்து அல்லாதார் மதப் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடத் தேவையில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பாம்!

மத வாரியும்,ஜாதிவாரியும், நாடு வாயிலாகக் கடவுள் என்றால் ஒரே கடவுள், அவர் எங்கும் நிறைந்திருப்பவர் என்று சொல்லுவதெல்லாம் புரூடாதானா?

வேளாங்கண்ணி கிறித்துவர் கோயிலில் இல்லாத தடை - நாகூர் முசுலிம் தர்காவில் இல்லாத தடை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் தடை ஏன்? மதவெறியிலிருந்து ஏழுமலையானும் தப்பவில்லையோ!

நீதிமன்றம் இர(ற)ங்குகிறது

இணைய வகுப்புகளில் ஏழை மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன் இலவசமாக அரசு வழங்க வேண்டும். - டில்லி உயர்நீதிமன்றம்

கரோனா காலத்தில் கல்விக் கூடங்கள் திறக்கப்பட முடியாத ஒரு சூழலில் காணொலி மூலம் வகுப்புகளை நடத்திட அரசு உத்தரவிட்டது. அதே நேரத்தில் காணொலி மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள லேப்டாப் - ஸ்மார்ட் போன் போன்றவை  ஏழை எளிய மாணவர்களுக்கு உண்டா என்பது பற்றி அரசுகள் சிந்திக்கவில்லையே! உயர் தட்டுக்காக மட்டும்தான் அரசா? 'நீட்' என்பதுகூட செலவு செய்து பயிற்று நிறுவனங்களில் சேர்பவர்களுக்குத்தான் வாய்ப்பு!

இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கும் ஏழைகளின் வீட்டின் நிலைமை என்ன? தாலியை அடமானம் வைத்துத் தன் பிள்ளைக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தார் ஒரு தாய் என்ற செய்திகளை எல்லாம் அமைச்சர்கள் படிக்கவே மாட்டார்களா?

தீண்டாமையை ஒழிக்குமா?

புதிய கல்விக் கொள்கை ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கும். - ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர்.

கோயிலுக்குள் எல்லா ஜாதியினரும் போகலாம் - தடுக்கக் கூடாது என்கிற வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுமா?

பதில் சொல்ல வேண்டுமே!

கரோனா காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க பரிசீலனையாம்!

ஆமாம், அதுதான் நல்லது; தேவையில்லாமல் எதிர்க்கட்சிக்காரர்களின் கேள்விகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. நம் இஷ்டத்துக்கு அவசர சட்டங்களைப் பிறப்பிப்பதை விட்டுவிட்டு ஏன் நாடாளுமன்றத்தை நடத்தி அவதிப்பட வேண்டும் என்று மத்திய அரசு மிகவும் புத்திசாலித்தனமாக நினைத்திருக்கலாம் அல்லவா!

மடியில் கனம்?

தெலங்கானா - ராஷ்டிர  சமிதி எம்.பி.க்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்த்து வாக்களிப்பார்கள் - முதல் அமைச்சர் சந்திரசேகரராவ்.

மடியில் கனமில்லை என்றால் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்கலாம் அல்லவா!

தொழில் சரியில்லையே!

தொழில் சரியில்லை, சினிமா நடிகர்கள் அரசியலில் குதிக்கத் தயாராகிறார்கள் - செய்தி

ஆமாம், இப்பொழுதெல்லாம் சினிமா தொழில் சரியில்லையே!

மும்மொழிக்கொள்கை

மும்மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை  - மத்திய அரசு பதில்

தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிதிட்டம் இடம் பெற்றது குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு - மும்மொழிக் கொள்கையில் மாற்றமில்லை என்று மத்திய அமைச்சர் எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார்.

மத்திய அரசு புரிந்துகொள்ளும் வகையில் மொழி பேசினால்தான் சரிபட்டுவரும் போல் தோன்றுகிறது.