ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும் சிந்தனையும்
October 11, 2020 • Viduthalai • மற்றவை

தேர்வு எழுத மறுப்பா?
செய்தி: திருவனந்தபுரம் கல்லூரியில் இளநிலை சித்த மருத்துவம் படிக்கும் 39 தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று ஆண்டுகளாகத் தேர்வு எழுதிட அனுமதி மறுப்பு.
இது என்ன நியாயம்? உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், கேரள அரசு இதில் அலட்சியம் காட்டுவது சரியல்ல. கோரிக்கைகளுக்குக் காது கொடுக்கும் மக்கள் முதல்வர் பினராயி விஜயன் தலையிடுவது அவசியம் - தமிழ்நாடு முதல் அமைச்சரும் இந்த முக்கிய பிரச்சினையில் தலையிடுவாரா?

சரியான குட்டு
செய்தி: ஊராட்சிப் பணிகளுக்கு விடப்பட்ட மாவட்ட அளவிலான  டெண்டர் ரத்து  - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
அஇஅதிமுக அரசின் ஊழலற்ற போக்குக்கு இது ஒரு நற்சான்றோ?

அதிகப் பிரசங்கித்தனம்!
செய்தி: இளம்பெண் சவுந்தர்யா கணவருடன் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி.
வயது வந்த ஆணும், பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதற்கு இந்த நாட்டில் ஜாதி எவ்வளவுப்  பெரிய முட்டுக்கட்டை?
ஆணும், பெண்ணும் இணையும் திருமணத்தில் மூன்றாவது மனிதன் தலையிடுவதுகூட ஒருவகை அதிகப் பிரசங்கித்தனம் என்பது தந்தை பெரியாரின் கருத்து. மத்திய பிஜேபி அரசுக்கு என்று ஒரு மொழி - அது சமஸ்கிருதம் (இந்தி)
செய்தி: உணர்வு ரீதியான மொழி விவகாரங்களைக் கவனமாகக் கையாள வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை.
மத்திய பிஜேபி அரசு மிகவும் உணர்வு பூர்வமாகத் தான் மொழிப் பிரச்சினையைக் கையாண்டு வருகிறது - சமஸ்கிருதம் - இந்தி- இவை இரண்டும் பா.ஜ.க. சங்பரிவார் - பார்ப்பனர்களின் உணர்வுப் பூர்வமானவை ஆயிற்றே!

கல் நெஞ்சக்காரர்கள்
செய்தி: சிறையில் இருந்து பரோலில் 30 நாட்களுக்கு வெளியில் வந்தார் பேரறிவாளன்.
எத்தனை முறை பரோலில் வந்தும் என்ன பயன்? உச்சநீதிமன்றம் - மாநில அரசின் அமைச்சரவை முடிவு - இவை எல்லாம் பிஜேபி அரசைப் பொறுத்தவரை வெறும் துச்சம்தானே! பெயர் வேறு பேரறிவாளன் என்று இருக்கிறது - பகுத்தறிவுவாதியோ என்ற பயமும் இருக்கலாம்.

இந்தத் தகுதி யாருக்கு வரும்?
செய்தி: உ.பி.யில் கரோனாவால் உயிர் இழந்த 700 உடல்களைத் தகனம் செய்த தொண்டு - ஏகப்பட்ட பாராட்டு.
இதற்கெல்லாம் மட்டும் துப்பரவு தொழிலாளி தேவை. இந்த சாதனை எல்லாம் தகுதி - திறமை என்ற உரைக் கல்லுக்குள் வராது - ஃபஸ்ட் கிளாஸ் மார்க்குதான் தகுதியின் அளவுகோலாகக் கணக்கில் கொள்ளப்படும்  - சமுதாய அமைப்பின் வேர் பார்ப்பனீயத்தில் அல்லவா ஊடுருவி நிற்கிறது.

தீர்ப்புகளும்....
செய்தி: பெண்கள்மீதான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் 2 மாதத்தில் விசாரணை முடிய வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.
இது முக்கியம்தான். தீர்ப்புகளும் 2 மாதங்களில் முடிய வேண்டும் என்ற நிலை இருந்தால் மிகவும் நல்லது.

நினைவிருக்கட்டும்
செய்தி: திருப்பதி- ஏழுமலையான் கோயிலில் தினமும் 25,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு!
ஏற்கெனவே ஏழுமலையான் கோயில் அர்ச்சகரே கரோனாவால் மரணம் அடைந்தது நினைவில் இருக்கட்டும்!

பாராட்டலாம் - ஆனால்?
செய்தி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவச் சேர்க்கையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் இவ்வாண்டே 50 விழுக்காடு இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும். - உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
அரசைக் கலந்து கொண்டு சொல்லுவதாக தமிழக அரசு வழக்குரைஞர் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியதுதானே. இந்த வழக்குக்கே வேலையில்லாமல் தமிழக அரசு நடந்து கொண்டு இருந்தால்- பாராட்டியிருக்கலாம்.

ஏழுமலையான் முடிவை மாற்றுவாரா?
செய்தி: துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுச்சாமி, எம்.சி. சம்பத் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம்?
பிரச்சினைதான் எதிர் தரப்புக்குச் சாதகமாக முடிந்து விட்டதே - ஏழுமலையான் முடிவை மாற்றி எழுதுவாரா? ஆமாம் அம்மா சமாதி என்னாயிற்றாம்?

மெட்டமைத்துப் பாடுகிறதே!
செய்தி: ஜாதி,மதம் ரீதியாக சமூகத்தை எதிர்க்கட்சிகள் பிரிக்க முயற்சி. - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
அடடே! ஓநாய் சைவப் பாட்டை மெட்டமைத்துப் பாடுகிறதே! கசப்பான தபாஷ்!
செருப்புக்கும் ஆபத்தா?
செய்தி: அடுக்கு மாடி குடியிருப்புகளின் ஷூ, செருப்புகளைக் குறி வைத்துத் திருடும் கும்பல் - போலீசில் புகார்.
கொலை, கொள்ளை முதல் செருப்புத் திருட்டு வரையா? நல்லா இருக்கே சட்டம் - ஒழுங்கு!

இதைக்கேட்க நீங்கள் யார்?
செய்தி: பிரதமருக்கு ரூ.8400 கோடியில் விமானமா? ராகுல் காந்தி கேள்வி.
10 லட்சம் ரூபாய் சட்டை போடுவார் - ரூ.8400 கோடி மதிப்புள்ள விமானத்தில் பிரதமர் பறப்பார் - அது எங்கள் இஷ்டம் - கேட்பதற்கு நீங்கள் யார்? - இந்த பதிலை எதிர்பார்க்கலாம் - மைனஸ் 23 சதவீத பொருளாதாரம் இன்னும் கூடுதலாகும் - அவ்வளவுதானே?

முருகன் அல்லவா?
செய்தி: நவம்பர் 6 முதல் மாநிலம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை? - எல். முருகன், தலைவர், தமிழக பா.ஜ.க.,
முருகன் அல்லவா - அதனால் வேலைத் தூக்கிக் கொண்டு அலையப் போகிறார் போலிருக்கு - இரும்பின்மீதும், கல்மீதும் இருக்கும் நம்பிக்கை மக்கள்மீது வரவில்லையே - அதுதான் பா.ஜ.க., தோழர் முருகனுக்கு ஒன்று தெரியுமா? பா.ஜ.க.வுக்கு சுப்பிரமணியன் மீதுதான் ப்ரீத்தி - முருகன் மீதல்ல என்பது தெரியுமா?