ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
September 5, 2020 • Viduthalai • மற்றவை

கடவுளை மற, மனிதனை நினை!

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தான 'கோ.வி.ஷீல்டு' சென்னை வந்துவிட்டது. பரிசோதனை வரும் 10 ஆம் தேதி தொடங்கும்.

கோவில் கோவிலாகச் சுற்றினாலும் கோவிட்-19 தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாது - அறிவியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் தயவைத்தான் எதிர்பார்க்கவேண்டும் - கடவுளை மற, மனிதனை நினை!

விரைவில் எதிர்பாருங்கள்!

கட்சி தொடங்கும் தேதியை ரஜினிகாந்த் இன்னும் முடிவு செய்யவில்லை - கட்சியின் உயர்மட்ட நிர்வாகி தகவல்.

கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்ற அறிவிப்புத் தேதி வரும் என்று எதிர்பார்க்கலாம் அல்லவா! (விரைவில் எதிர்பாருங்கள் என்று சினிமா விளம்பரம் வருவதில்லையா!)

மாற்றம் என்பதுதான்

மாறாதது!

வருங்காலத்தில் புத்தக விற்பனையின் கணிசமான பகுதி மின் வணிகம் வழியாக நடக்கும். வாசகர்கள் விரும்பும் நூல்களை அவர்கள் இருக்கும் இடங்களுக்கே கொண்டு சேர்ப்பதற்கான வசதிகளைச் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

மாற்றம் என்பதுதான் மாறாதது. சரஸ்வதி பூஜையன்று பழைய புத்தகங்களை எல்லாம் தேடிப் பிடித்து பூஜையில் வைத்து சந்தனம் குங்குமம் தடவும் காலம் மலையேறி விட்டது. நவீன விஞ்ஞான 'மின்னகம்' இந்தப் பூஜைகளை எல்லாம் புறமுதுகிட்டு ஓடச் செய்துவிட்டதே!

அதிகமாகலாம்!

கரோனா தொற்று அக்டோபரில் அதிகமாகலாம் - மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கடிதம்.

ஆக, 2020 ஆம் ஆண்டுவரை ஊரடங்கு நிச்சயம் என்பது மட்டும் உறுதியோ உறுதி!

போகுமா

மனுதர்மப் புத்தி?

கேள்வி: பெண்களெல்லாம் இப்போது ஊழலில் ஈடுபடுவதுபற்றி....

பதில்: ஆணும் - பெண்ணும் சமம் என்கிற பெண்ணுரிமை வாதத்தை ஏற்ற பிறகு, ஆண் ஊழல் - பெண் ஊழல் என்று எப்படி பிரிக்கலாம். - 'துக்ளக்', 9.9.2020.

ஆக, ஆணும் - பெண்ணும் சமம் என்பதுதான் அவாளுக்குப் பிரச்சினையா? மனுதர்மப் புத்தி இந்த மனுஷர்கள் மண்டைக்குள் பொங்கி வழிகிறதே - என் செய்ய!