ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
October 17, 2020 • Viduthalai • மற்றவை

குற்றவாளிகள் கழுத்தில் மாலை

குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது கேரள அரசு: - மாநில பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு.

குற்றவாளிகளை மாலையிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லும் பா.ஜ.க. ஆளும் உ.பி.யியைப் போல உலகில் வேறு எங்காவது கேள்விப்பட்டதுண்டா?

ஒதுக்குவார்கள் எச்சரிக்கை!

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இந்தாண்டு ஒதுக்கீடு இல்லை: - மத்திய அரசு திட்டவட்டம்.

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டவர்களை ஒதுக்கினால், வாக்கு வங்கியில் இவர்கள், பா.ஜ.க.வை ஒதுக்கித் தள்ளுவது உறுதி.

தேவை அறுவைச் சிகிச்சை!

பாபர் மசூதி வழக்கு; பழைய புண்ணை கிளறாத அரசியல் கட்சிகள்: - குருமூர்த்தி பாராட்டு.

என்னே சாமர்த்தியம்! பழைய புண் இருக்கிறது என்றால், அதைக் குணப்படுத்த கீறி அறுவை சிகிச்சைதானே செய்யவேண்டும்.

கரோனாவுக்குத் தலைமை இடமோ!

சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு.

கரோனா தனக்குத் தலைமையிடமாக தலைமைச் செயலகத்தை வைத்துள்ளதோ! படித்தவர்கள் மத்தியில் பரவுகிறது என்றால், அவர்கள் தடுப்பு முறைகளை முறையாகக் கடைபிடிக்கவில்லையா? அல்லது அதையும் மீறி கரோனா பரவுகிறதா? கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கைதான் இது!

குளிர்காலத்தில் தொற்று அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையையும் எச்சரிக்கையுடன் கவனிக்கவேண்டும்.

பேசுவது ‘ஜீரோ!'

தி.மு.க. தேர்தல் அறிக்கை ஜீரோவாகத்தான் இருக்கும்: - எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்று அறிக்கை வெளியிடுகிறார் - அறிக்கை தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு எம்.பி.,

தமிழக பி.ஜே.பி. தலைவர் சொல்லுவதைப் பார்த்தால் மக்களிடமிருந்து கருத்துப் பெறுவது ஜீரோவுக்குச் சமம் என்றால், மக்களை அவர் எப்படி எடை போடுகிறார்? பி.ஜே.பி.யைப் பொறுத்தவரையில், ஜனநாயகத்துக்கு ஜீரோ மார்க்தான்.

மக்களும் தேர்தலில் போடப் போவது ஜீரோதான்!

சபாஷ் பெண்கள்!

கரோனாவுக்கு உயிர் இழந்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள்.

பெண்கள் எப்பொழுதும் கட்டுப்பாடு மிக்கவர்கள்.

எலும்பு முறியவில்லை

யானைமேல் அமர்ந்து யோகா செய்த ராம்தேவ் கீழே தவறி விழுந்தார்.

இந்த மதம் பிடித்த வேலை எல்லாம் எதற்கு?

வாழத் தெரியாத ஆசாமி!

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தெலங்கானா தாசில்தார் சிறையில் தற்கொலை.

பைத்தியக்கார தாசில்தார். விஜய் மல்லையா மாதிரி 'லம்பாக' கடன் வாங்கி வெளிநாடு சென்று சொகுசாக வாழத் தெரியாத ஆசாமி.

கண்காணிப்பது யார்?

ஹத்ராஸ் கொலை வழக்கில் சி.பி.அய். விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு மனு.

உ.பி. அரசாங்கத்தைக் கண்காணிப்பது யார்?

இரங்கல் கடிதம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் இந்தியில் இரங்கல் கடிதம்.

மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் தமிழ் - தமிழன் என்ற முறையில் இரங்கல் தெரிவிக்கும் நிலை ஏற்படத்தான் போகிறது.