ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
September 19, 2020 • Viduthalai • மற்றவை

சட்டம் சல்லி சல்லியாகும்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கை வாபஸ் பெற்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என முக்கிய மனுதாரரான அன்சாரி கூறியுள்ளார்.

இப்படி ஓர் உரிமையை எடுத்துக்கொள்வது சரிதானா? பாபர் மசூதி இடிப்பு என்பது வெறும் மதப் பிரச்சினை மட்டுமல்ல;  சட்டத்தை, நேர்மையை சல்லி சல்லியாக உடைத்த குற்றத்தின் உச்சம் ஆகும். குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டால், பல பாபர் மசூதி இடிப்பு நிகழ்வுகளுக்கு லைசென்ஸ் கொடுத்ததாகிவிடும், எச்சரிக்கை!

மோடிக்குக் கோவிலாம்!

தெலங்கானாவில் பிரதமர் மோடிக்குக் கோவில் - காலை, மாலையில் பூஜை செய்யும் தொண்டர்கள்.

கோவில்கள் எப்படி தோன்றின என்பது இப்பொழுது புரிகிறதா? எல்லா வகைகளிலும் ஆட்சி முறையில் தோல்வி கண்ட ஓர் அரசின் தலைவர் கடவுள் என்றால், கடவுளின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்; ஆக, மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் நாத்திகர்களே!

அ.தி.மு.க. கூட்டம் கோஷம்!

அ.தி.மு.க. கூட்டத்தில் நேற்று காரசார விவாதம் - கோஷம்! முதலமைச்சரை ஆதரித்தும், துணை முதலமைச்சரை ஆதரித்தும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

அத்தைக்கு மீசையும், தாடியும் முளைக்கட்டும், சித்தப்பா என்று அப்பொழுது முடிவு செய்யலாம், அல்லவா!

திருமணம் நிச்சயிக்கப்படுவது ‘சொர்க்கத்திலா?'

தந்தை பெரியார் பிறந்த நாளான நேற்று சென்னை அண்ணா சாலை - பெரியார் பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பு இணையர்கள் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் 'சொர்க்கத்தில்' நிச்சயிக்கப்பட்டதாக சனாதனிகள் சொல்லுவதுண்டு. இப்பொழுது சில இடங்களில் ரொக்கத்திலும் நிச்சயிக்கப்படுகிறது.

திருமணம் என்பது வயது அடைந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடைபெறக்கூடிய ஒன்று - இதில் மற்றவர்கள் தலையிடுவது அதிகப்பிரசங்கித்தனம் என்றாரே, பெரியார் - அது இப்பொழுது!

அம்பலமாகிவிடுமே!

கரோனா காலத்தில் சிறப்பு ரயிலில் பயணித்த 97 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மரணம் - நாடாளுமன்ற செய்தி

நடந்து சென்றார்களே ஆயிரம் மைல்களைக் கடந்து - அதுபற்றிய செய்தி ஒன்றும் கிடையாதா? சொல்லமாட்டார்கள் - காரணம், மத்திய அரசின் மனிதநேயமற்ற நிலை அம்பலமாகிவிடுமே!

அம்பேத்கர் வழியில்....

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அத்துறை ஹாசிம்புத் கவுர் பாதல் (அகாலி தளம்) நேற்று நாடாளுமன்றத்தில் பதவி விலகினார்.

பதவி பெரிதல்ல - கொள்கையே முக்கியம் என்று அன்று அண்ணல் அம்பேத்கர் மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார். அவ்வழியில் இப்பொழுது ஓர் அமைச்சர்!

தேசியக் கல்வியை எதிர்த்தும், 'நீட்'டை எதிர்த்தும் யாராவது பதவி விலகியிருந்தால், ''சபாஷ்'' போட்டிருக்கலாம்!

சக்தியில்லையோ....

மகாளய அமாவாசையன்று இராமேசுவரம் அக்னி தீர்த்தம் வெறிச்சோடியது.

கோவில்களும், தீர்த்தங்களும் வெறிச்சோடினால் மக்களுக்கு எவ்வளவோ இலாபம் - புத்திக்குப் புத்தியும், பணத்துக்குப் பணமும் மிச்சமாகும் அல்லவா!  (ஆமாம், ராமநாதர் கடவுள் இதைக்கூட சரி செய்ய சக்தி இல்லையோ!)

ஆறு பெரிசா -

ஒன்று பெரிசா?

தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து ஒரு கோடி கையொப்பம் பெறும் திட்டம் நேற்று தொடக்கம்.

மீதி ஆறு கோடி மக்களும் எதிர்க்கிறார்களே!