ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
September 16, 2020 • Viduthalai • மற்றவை

‘சென்டிமெண்ட்' என்னாச்சு?

நெல்லையில் 'நீட்' தேர்வு எழுத வந்த புது மணப்பெண்ணின் தாலி - மெட்டியைக் கழற்றிய பிறகே தேர்வு எழுதிட அனுமதி.

'சென்டிமெண்ட்'பற்றி எல்லாம் நீட்டி முழங்குபவர்கள் - இப்பொழுது எங்கே போனார்களாம்?

தாலியைப்பற்றி பகுத்தறிவாளர்கள் பேசும்போது மட்டும் அடேயப்பா, மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே!

அதிகரிப்பு....

மற்ற காரணங்களைவிட பொருளாதார காரணங்களால் தற்கொலைகள் அதிகரிப்பு.

சென்ற ஆண்டில் மட்டும் 1.4 லட்சம் பேர் தற்கொலை. நரேந்திர மோடி ஆட்சியில் நாடு வளர்கிறதாம் - வளம்பெறுகிறதாம் -

தற்கொலையிலா?

‘மகாத்மியம்

என்னே!'

'நீட்' தேர்வில் 90 சதவிகித மாணவர்கள் பங்கேற்பு. தேர்வு எளிதாக இருந்தது என்று ஊடகங்கள் பிரச்சாரம்.

'நீட்'டை நியாயப்படுத்தும் வகையில் நீட்டி முழங்கும் வேலையில் ஊடகங்கள்! என்னே பார்ப்பனத் தந்திர 'உச்சாடனம்!'

அச்சம்

'நீட்' அச்சம்: ஒடிசாவிலும் மாணவி தற்கொலை.

'இது எல்லாம் ஒரு பொருட்டா? எங்கள் நோக்கமே வேறு - ஆனால், அதை வெளியில் மட்டும் சொல்லமாட்டோம்!' என்பதுதான் அந்தப் பார்ப்பனத்தனம்!

ஏன் இணைக்கவில்லை?

நாட்டை இணைக்கும் மொழி இந்தியே! - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அப்படியா? இதுவரை ஏன் இணைக்கவில்லை? இனிமேல் எந்தத் தேதியில் இணைக்கும்? இந்தியாவை இணைத்துவிட்டது என்று ஏன் உள்துறை அமைச்சரால் கூற முடியவில்லை?

தமிழ்நாடு, கருநாடகம், மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் எதிர்ப்புக் கொடி எழுந்து நிற்கிறதே - இவற்றையெல்லாம் உள்துறை அமைச்சருக்குச் சொல்லப்படவில்லையா?

நாடாளுமன்றக் கட்டடமே ஆடுமே!

'நீட்' தேர்வைக் கண்டித்து நாடாளுமன்றம் முன் தி.மு.க. எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்.

'நீட்'டினால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய, கிராமப்புற, ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த இருபால் மாணவர்களே! நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை எம்.பி,க்கள் மனது வைத்தால் ஒன்றிணைந்து ஒரே ஒரு முழக்கம் கொடுத்தால் போதும், நாடாளுமன்றக் கட்டடமே ஆடுமே! தி.மு.க. முனைந்து இந்த ஒருங்கிணைப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

மூன்றே நாள்!

தமிழ்நாடு சட்டப் பேரவை மூன்று நாட்கள் மட்டுமே நடக்கும்.

அதிலும் முதல் நாள் இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு முடிந்துவிட்டது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைப்பற்றி யெல்லாம்  பேச இடம் கொடுத்தால் ஆளும் கட்சிக்குச் சங்கடம் என்று நினைத்து விட்டார்களா?

தந்தை பெரியார் சொன்ன ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது.

''முள்ளு முனையில் மூன்று குளம் வெட்டினேன். அவற்றில் இரண்டில் தண்ணீர் இல்லை. ஒன்றுவற்றிப் போய்விட்டது.('குடிஅரசு', 2.10.1927)

நாடாளுமன்றத்திலோ கேள்வி நேரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டதாயிற்று.

அந்த அளவுக்கு ஆளும் கட்சிகள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைகிறார்கள்.