ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
September 25, 2020 • Viduthalai • மற்றவை

எந்த வகை ஜனநாயகம்?

உடல்நலக் குறைவு காரணமாக பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

ஒரு கொலை வழக்கில் எத்தனைத் தண்டனை? தூக்குத் தண்டனை என்ற ஒன்று - 29 ஆண்டு சிறை என்பது இன்னொன்றா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், தமிழக அமைச்சரவை முடிவு எடுத்த பின்னரும், ஓர் ஆளுநரால் அதனைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியும் என்பது எந்த வகை ஜனநாயகம்?

ஓ, இப்படி ஒரு வழியா?

பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ் முறைகேடாக நிதி பெற்றவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற 100 நாள் வேலை தர முடிவு

வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருக்கும் ஒரு நாட்டில் வேலை வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்றால், முறைகேடுகளைச் செய்யலாம் என்ற ஒரு வழிமுறை இருப்பதை- வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போர் பின்பற்றாமல் இருந்தால் சரி!

ஆண்டவன்தான் காப்பாற்றனுமா?

அ.இ.அ.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் விஷ்ணு பிரபு கோவையிலிருந்து தமது குடும்பத்தாருடன் தனி ஹெலிகாப்டரில் சிறீவில்லிபுத்தூருக்கு வந்து, மூன்றாவது முறையாகவும் அ.தி.மு.க. ஆட்சியில் அமரவேண்டும் என்பதற்காக ஆண்டாள் கோவிலில் தரிசனம்.

மக்களை நம்பிப் பிரயோசனம் இல்லை - 'மகேசனை' நம்பவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ!

இப்பொழுதெல்லாம், மத்திய - மாநில ஆட்சியாளர்கள்கூட 'எங்கள் கைகளில் என்ன இருக்கிறது? எல்லாம் ஆண்டவன் செயல்தான்!' என்று கூறி பிரச்சினையைக் கைகழுவும் யுக்தியைக் கைகொள்கிறார்கள். இது ஒரு 'சாமர்த்தியமான' தப்பி ஓடுதல் (Escapism) யுக்தி - மக்களே உஷார்!

பேச்சுக் கச்சேரி...

ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான வட்டி மீதான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது: - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தகவல்.

கரோனாவைவிட கொடூர முடிவு இது! கந்து வட்டிக்காரராக ஓர் அரசு நடந்துகொள்ளலாமா? 'மன் கீ பாத்' என்ற பேச்சுக் கச்சேரியைத் தவிர, மத்திய அரசு பாராட்டும் வகையில் நேரடியாக மக்களுக்குச் செய்த உதவி??.

தேசிய விரோதம்?

சி.பி.எஸ்.இ. 7 ஆம் வகுப்புப் பாடத்தை ஆராயும்போது, நாட்டின் வரலாறு அடிப்படையில் வடமாநிலங்களும், தென் மாநிலங்களும் வேறுபட்டு நிற்கின்றன: - கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

இப்படிப் பேசினால் கூட பிரிவினைவாதம் என்று முற்றிப்போன தேசியவாதிகள் சொல்லக் கூடும். ஆனால், சொல்பவர் ஒரு மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ஆயிற்றே!

இந்தியா ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பதைவிட பெரிய மோசடி வேறு ஒன்றும் இல்லை.