ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்...!
August 24, 2020 • Viduthalai • மற்றவை

வீரம் என்னாச்சு?

விநாயகர் சதுர்த்தி: தடையை மீறியதாக மூன்று இடங்களில் வழக்குப் பதிவு!

ஒன்றரை லட்சம் விநாயகர் பொம்மைகள் வைத்து விளையாடப் போவதாகப் பேசிய 'வீரம்' என்னாச்சு?

ஆணை கோவில்களுக்குக் கிடையாதா?

விதிகளை மீறி குப்பைக் கொட்டுவதைத் தடுக்கவேண்டும் - பேரூராட்சி நிர்வாகத்திற்குப் பசுமைத் தீர்ப்பாயம் ஆணை.

விதிகளை மீறி வீதிகளில் கோவில்களைக் கட்டி உண்டியல் வைத்திருப்பதால் ஏற்படும் சுற்றுப்புற சுகாதாரக் கேடுகளுக்கு முடிவு எப்போது? இதற்கெல்லாம் ஆணை கிடையாதா?

அன்றே சொன்னாரே, பெரியார்!

நீதித்துறைக்குத் தேவை சகிப்புத் தன்மை; விமர்சனங்களைச் சகித்துக் கொள்ளும் தன்மை நீதித்துறைக்கு இல்லை - ஓர் ஏடு தலையங்கம்.

எவ்வளவோ காலத்திற்கு முன்பு தந்தை பெரியார் சொன்னதுதான். நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி - நீதிபதிகள் முன்னிலையிலே முகத்துக்கு முகம் சொன்னவர் தந்தை பெரியார் என்பது தெரியுமா?

மனுதர்மப் புத்தி!

பெண்கள்மீதான குடும்ப வன்முறையால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது - சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.விமலா வேதனை.

மக்கள் மனப்பான்மையிலே கூட பெண்ணென்றால் ஓர் அஃறிணைப் பொருள் என்ற மனுதர்ம எண்ணம் இருக்கிறதே. 30 சதவிகிதப் பெண்கள்தான் பெண்மையோடு இருக்கிறார்கள் என்று ஒரு மே(ல்)தாவி கூறுவதும், வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்களே என்று ஒரு லோகக் குரு கூறுவதும் இந்தப் புண்ணிய பூமியில்தானே!

மங்கி பாத்!

மாணவர்களின் மனதின் குரலை மத்திய அரசு கேட்கவேண்டும் - ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடமான நாக்பூரிலிருந்து வரும் குரலைக் கேட்கவே பிரதமருக்கு நேரம் போதவில்லை. மாணவர்களாவது - மண்ணாங்கட்டியாவது! மேலும் 'மங்கிபாத்'துதான் இருக்கவே இருக்கிறதே!

எல்லாம் சடங்குதான்!

புதிய தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து ஆசிரியர்கள் யோசனைகள் தெரிவிக்கலாம். - மத்திய கல்வி அமைச்சரகம்.

மாநில அரசுகளும், பல்வேறு சமூக, அரசியல் கட்சிகளும் சொன்ன யோசனைகள் எல்லாம் என்னாச்சு? இவையெல்லாம் சம்பிரதாய சடங்குதானே!

வில்லும் -

கோடரியும்!

ராமர் - பரசுராமர் வேறுபாடு இல்லை - உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் கருத்து.

அப்படிப் போடுங்கள்; ஆக, உ.பி.யில் இந்தப் பிரச்சினை ஆட்சிக்கு நெரி கட்டி விட்டதாகத் தெரிகிறது - பரசுராமன் கையில் கோடரி - ராமன் கையில் வில் - அம்பு. எது ஜெயிக்கும்?

மயிலா? மக்களா?

மயில்களுக்குப் பிரதமர் உணவளிக்கும் வீடியோ அதிகம் பரவல்.

வித்தைகள் காட்டுவதில் பிரதமர் மோடிக்கு இணை அவரேதான் - மயிலுக்குத்தான் உணவு போடுவார்கள் - மக்களுக்கல்ல!

குடியும் குடித்தனமும்!

நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை.

'குடி'யும் 'குடி'த்தனமுமாக வாழச் சொன்னது இதனைத்தானோ!

எங்களப்பன் குதிருக்குள்?

பிகாரில் பா.ஜ.க. கூட்டணியில் பிளவு இல்லை - பி.ஜே.பி. தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா உறுதி.

எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுதான்!