ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
November 19, 2020 • Viduthalai • மற்றவை

சீர்திருத்தம் தொடங்க வேண்டிய இடம்!

தேர்தல் விதிகளில் சீர்திருத்தங்கள் தேவை: - தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் குரேஷி.

முதலில் தேர்தல் ஆணையத்தைச் சீர்திருத்த வேண்டும் - சொந்தக் காலில் அது நிற்க வழி காணப்படவேண்டும்.

ஏலம் விடப்படாதது எது?

பாரத் பெட்ரோலியம் நான்காவது முறையாக ஏலம்.

ஏலம் விடப்படாத பொதுத் துறை நிறுவனங்கள் என்னென்ன என்று சொல்லுவதுதான் சுலபம்!

ஜி.எஸ்.டி. வரியை....

2020-21 ஆம் ஆண்டுக்கு மத்திய வரியில் 41 விழுக்காடு அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்கிட மத்திய அரசுக்கு நிதிக் குழுத் தலைவர் என்.கே.சிங் பரிந்துரை.

முதலில் ஜி.எஸ்.டி. வரி பிரச்சினையை மாநிலங்களுக்குக் கொடுக்க வழி செய்யப்படட்டும்!

நெடுஞ்சாண் கிடையா?

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிக்கிடையே பேரம் இருக்காது என்ற முடிவுக்குத் 'தினமலர்' கொடுத்த தலைப்பு ''நெடுஞ்சாண் கிடை!'' என்பதாகும்.

அ.தி.மு.க.வுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நிலை பா.ஜ.க.வுக்குத் தமிழ்நாட்டில் ஏற்படும்.

இறுதிச் சடங்கு?

ஒசூரையடுத்த பூனப்பள்ளியில் காளை மாட்டுக்கு இறுதிச் சடங்கு.

இந்த மூடநம்பிக்கைகளுக்கு 'இறுதிச் சடங்கு' எப்போது?

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது!

தி.மு.க.வின் போலி முகத்தைக் காட்டவே வேல் யாத்திரை: - எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.

ஆக, முருகனுக்காகவோ, இந்து மதத்துக்காகவோ, பக்திக்காகவோ அல்ல இந்த யாத்திரை - பச்சையான அரசியல் நோக்கம் கொண்ட யாத்திரை!

இப்படி ஒரு மனு நீதியா?

கணவரின் வருமானம் அறிய மனைவிக்கு உரிமை உள்ளது: - மத்திய தகவல் ஆணையம்.

இப்படி சொல்லவேண்டிய நிலையே அருவருப்பானதே! மனைவி சம்பாதித்தால் மட்டும் அதைக் கணவன் கையில் பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமா?

திறந்த கதவு!

எம்.பி.பி.எஸ். தகுதிப் பட்டியல் - வெளி மாநிலத்தவர்களின் பெண்களும் தமிழ்நாட்டில் இடம்பெற்றது எப்படி?

இதில் என்ன ஆச்சரியம்? வெளிநாட்டவர்களும் 'நீட்'டில் கலந்து கொள்ளலாம் என்று 'நீட்' கதவு திறந்து விட்டுள்ளதே!

ஆடிய ஆட்டமென்ன?

குடியரசுத் தலைவர் தேர்தலில் முறைகேடு இல்லை என்று சொன்ன அமெரிக்கத் தேர்தல் பாதுகாப்பு இயக்குநர் பதவி நீக்கம் - டிரம்ப் அதிரடி!

ஆட்டம் முடிந்தும் அதிகார வெறி தணியவில்லையோ!

பொம்மை விளையாட்டு!

இலண்டனிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சாமி சிலைகள் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைப்பு.

அடேயப்பா, இந்த சாமிகளைப்பற்றி எப்படி எப்படியெல்லாம் ஸ்தல புராணம் பாடி அவற்றின் ரத கஜ பராக்கிரமத்தை அள்ளி விடுகின்றனர். கடைசியில் பார்த்தால், இந்த சாமிகள் திருடர்களால் அபகரிக்கப்படும் விலை மதிப்புள்ள பொம்மைகள்தான் என்பது விளங்கவில்லையா?

அற்புதம் பாட அடியெடுத்துக் கொடுக்கும் வேலைப்பாடு!

ராம நவமி நாளில் சூரியன் ஒளி ராமன் சிலை மீது விழுமாறு கோவில் கட்ட பிரதமர் மோடி உத்தரவு.

ஆக, ராமன் சிலைக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்க ஒரு செயற்கையான ஏற்பாடு - பல்லாண்டுகளுக்குப் பிறகு இது அதிசயம், அற்புதம், ராமன் சக்தியே சக்தி என்று பல்லாண்டுப் பாட ஆரம்பித்து விடுவார்கள். கடவுள் சக்தி இல்லை-எல்லாம் மனித சக்தியே!

குல்லூகப்பட்டர் செல்வாக்கு?

1967 இல் ராஜாஜியோடு கூட்டு சேர்ந்ததால்தான் தி.மு.க. வெற்றி பெற்றது: - 'தினமலர்'

அப்படியா? 1971 இல் காமராஜர் (ஸ்தாபன காங்கிரஸ்) ராஜாஜியோடு (சுதந்திரா கட்சி) கூட்டு சேர்ந்தாரே - ஏன் இந்தக் கூட்டணி வெற்றி பெறவில்லை?

இதுவரை என்ன செய்ததாம்?

தமிழ்மொழியை காப்பது நம் கடமை: - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசு பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தை ஏனோ தானோ என்ற வகையில் கற்பிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உருப்படியாக அ.தி.மு.க. அரசு இதுவரை என்ன செய்ததாம்?