ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
October 28, 2020 • Viduthalai • மற்றவை

இடியாப்பச் சிக்கலா?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் - பாடத் திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்: கல்வித் துறை அதிகாரிகள் தகவல்.

தொடக்க முதலே கல்வித் துறை சம்பந்தமான அறிவிப்புகள் குளறுபடியாகவே இருந்து வருகின்றன. காணொலிமூலம் கல்வி என்பதுகூட எல்லோராலும் பயன்படுத்திக் கொள்ள முடியாத பொருளாதாரச் சிக்கல். உலகம் முழுவதும்தான் கரோனா பிடித்து ஆட்டுகிறது; அந்நாடுகளில் இந்தப் பிரச்சினையை எப்படி தீர்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் சிக்கலுக்கும், குழப்பத்துக்கும் இடம் இருக்க முடியாதே!

போராட்டம் யார்மீது?

திருமாவளவனுக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்.

உண்மையில் பெண்கள் உரிமை, அவர்களின்மீதான மதிப்பின்மீது பா.ஜ.க.வினருக்கு அக்கறை இருக்குமானால், திருமாவளவன் எடுத்துக்காட்டிய பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாத்திர நூலை எரிக்கும் போராட்டத்தில் அல்லவா ஈடுபடவேண்டும். டாக்டர் அம்பேத்கரும், தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் மனுதர்ம நூலை எரித்த வரலாறு இவர்களுக்குத் தெரியுமா?

நிஜத்தை விட்டு நிழலோடு சண்டை போடலாமா?

சேர்ந்த இடம் அப்படி?

ஆண் குழந்தைக்காக எட்டு, ஒன்பது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பீகாரின் மனநிலை மாறவேண்டும்: - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

லாலுபிரசாத் - ராப்ரிதேவிக்கு அதிகக் குழந்தைகள் - அதில் ஒருவர்தான் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் வேட்பாளர் தேஜஸ்வி. அவரைக் குறி வைத்துத்தான் இப்படிப் பேசி இருக்கிறார் என்ற சர்ச்சை பீகார் மாநிலத் தேர்தல் களத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது.

ஏனிந்த தனி நபர் தாக்குதல்?

நிதிஷ்குமார் - பி.ஜே.பி.யோடு கூட்டு சேர்ந்த நிலைதான் இந்தக் கீழிறக்கத்துக்குக் காரணமோ!

பிரதமர் மோடியுடன் பிறந்தவர்கள் அறுவர் என்பதை லாலுவின் மகன் தேஜஸ்வி பதிலடியாகக் கொடுத்துள்ளார்.

ஆளுநரா கொக்கா?

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு: - புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு.

சபாஷ்! சரியான திசையில் முதலமைச்சர் நாராயணசாமி; அதேநேரத்தில், தமிழ்நாடு ஆளுநரைவிட 'மோசமான' அணுகுமுறையைக் கொண்டவராயிற்றே புதுச்சேரி ஆளுநர்.

பித்தா பிறை சூடிய பெருமானின் நிலை என்ன?

நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு!

பிறை சூடிய பெருமானான சிவன் தண்ணீரில் தத்தளிக்கிறானோ!