ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
October 23, 2020 • Viduthalai • மற்றவை

‘ஆம்' அல்லது ‘இல்லை' என்க!

7.5 சதவிகித இட ஒதுக்கீடு; முடிவு எடுக்க  மேலும் 3 அல்லது 4 வாரங்கள் தேவை: -தி.மு.க. தலைவருக்கு ஆளுநர் கடிதம்.

ஆம்; இல்லை என்று இரு சொற்களைக் கூற, ஏற்கெனவே ஒன்றரை மாதங்கள் - போதும் போதாதற்கு மேலும் 4 வாரங்களாம்.

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பயன் அடையப் போவது பார்ப்பனர்கள் கிடையாதே, அதனால்தான் இந்த ஆத்திரம்.

கையொப்பம் போடத் தெரியாத சரஸ்வதி பாட்டி

விஜயதசமி அன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்: தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு.

அப்படியா? மற்ற நாள்களில் சேர்த்தால் குழந்தைகளுக்குப் படிப்பு வராதா? கல்விக்கு ஒரு கடவுளாம் - அவள் சரஸ்வதியாம் - அதனால்தான் இந்த மூடநம்பிக்கை; சரஸ்வதி என்ற பெயர் தாங்கியுள்ள பாட்டிக்கு சரஸ்வதி என்று பெயர் எழுதத் தெரியாத நிலையும் உண்டே! மூடத்தனத்தை வளர்க்க ஒரு கல்வித் துறையா?

எதைத் தடுக்க...?

நாங்கள் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி: - பா.ஜ.க.வின் பீகார் தேர்தல் அறிக்கையில்...

இன்னும் தடுப்பூசியே வந்தபாடில்லை - அதற்குள் அறிவிப்பா? கரோனா தடுப்பு அல்ல - பீகார் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியின் தோல்வியைத் தடுக்கும் ஊசி இது!

புலி என்றால் கிலியா?

இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: -இலங்கை அரசு மேல்முறையீடு.

இல்லாத அமைப்புக்குத் தடை ஏன்? இன்னும் அச்சம் உலுக்குகிறதா?

எங்கே போய் முட்டிக்கொள்ள?

வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி 9 பேரின் சேமிப்புக் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் பண மோசடி!

இதுபோன்ற தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. வங்கிதான் பாதுகாப்பு என்று மக்கள் வங்கியில் பணத்தை சேமிக்கிறார்கள் - அங்கேயே பாதுகாப்பு இல்லை என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது? சக்தி வாய்ந்த காவல் துறை - நுண்ணறிவுத் துறைக்கு இது ஒரு சவாலா?

ஹிட்லர் இதோ!

திரிபுரா முதலமைச்சர் ஒரு குட்டி ஹிட்லர்: - கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்.

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை வீழ்த்தினால், லெனின் சிலை உடைபடும் - ஹிட்லர் ஆட்சி நடைபெறும்.

பரவாது!

செய்தித்தாள்மூலம் கரோனா பரவாது: - மத்திய அமைச்சர் அறிவிப்பு.

காற்றில் பரவும், ரூபாய் நோட்டுகள்மூலம் பரவும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, பத்திரிகைகள்மூலம் பரவாது என்று சொன்னால், அது எப்படி?

சரியான தகவலை அரசுகள் சொல்ல முயற்சிக்க வேண்டாமா?