ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
September 17, 2020 • Viduthalai • மற்றவை

சரிவு - சரிவு - சரிவுதானா?

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 9 சதவிகிதம் சரியும் - ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு.

மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் 'சரிவு' என்பதைத் தவிர நாடு என்னத்த கண்டது? ஏற்கெனவே மைனஸ் 23 சதவிகிதம் என்று வெளியானது - இப்பொழுது மேலும் 9 சதவிகிதமா - கிழிந்ததுபோ....

அது எப்படி?

கேள்வி: சிந்தனைச் சிற்பி சோவின் பதில்களுக்கும், அமைதியின் உருவமும், அறிவுப் புயலுமான குருமூர்த்தியின் பதிலுக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட்டான சிங்காரவேலரிடமிருந்து சி.பி.சிற்றரசுக்கு வழங்கிய திருட்டு 'சிந்தனைச் சிற்பி' பட்டத்தை வைத்து என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்று பதில் கூறுவார் சோ.

'துக்ளக்', 23.9.2020 (இன்று வெளிவந்துவிட்டது).

திராவிடர் கழகம் அப்படியொரு பட்டத்தைக் கொடுத்ததா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று கூறும் அப்பழுக்கற்ற மனிதகுல விரோதிக்கு 'மகா பெரியவாள்' என்றும், 'ஜெகத்குரு' என்றும் பட்டம் கொடுக்கப்பட்டது யாரால்?

மேலவைத் தலைவராக இருந்த சிந்தனைச் சிற்பி  சி.பி.சிற்றரசுதான் ஒருமுறை கூறினார்:

'நான் ஜப்பான் சென்றிருந்தேன். ஒரு டாக்சியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அந்த ஓட்டுநரிடம் கேட்டேன், 'இங்கே ஜெகத்குரு வந்தாரா?' என்று. யார் அந்த ஜெகத்குரு என்று ஓட்டுநர் என்னைத் திருப்பிக் கேட்டார். ஜெகத்குரு என்கிறார்கள் - அவர் ஜப்பானுக்குக்கூட வரவில்லையோ - என் று நினைத்துக் கொண்டேன் என்றார், சிற்றரசு! (ஆமாம், சமுத்திரத்தைத் தாண்டி செல்லக்கூடாது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, தங்களை ஜெகத்குரு என்று அழைத்துக் கொள்கிறார்களே, அது எப்படி?)

பக்தர்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் கோவிலுக்குச் சென்றபோது ஆற்றில் படகு கவிழ்ந்து 14 பக்தர்கள் உயிரிழப்பு.

எத்தனையோ முறை இப்படி நடந்தாலும், கடவுள் என்றும், அதற்குச் சக்தி இருக்கிறது என்றும் நம்பி, உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் என்று சொல்லியும், அனுபவத்தில் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுப் பக்திப் போதையில் சிக்கியவர்களுக்கு நல்ல புத்தி வரவில்லையே, என் செய்ய!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று சொன்னாரே பகுத்தறிவுப் பகலவன், அதுதான் நினைவிற்கு வருகிறது.

வெளிநடப்பு!

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாததால், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன் என்று ஆளும் தரப்பு நினைத்துவிட்டதோ என்னவோ! ஆனாலும், தமிழ்நாட்டின் நிலைப்பாடு - இந்தப் பிரச்சினையில் என்ன என்பதற்கும், மற்ற மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் இது பயன்படும் அல்லவா!

30 ஆம் தேதி தீர்ப்பு

அத்வானி, ஜோஷி உள்ளிட்டோர் மீதான - பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30 ஆம் தேதி தீர்ப்பு.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், அத்வானி நேரடியாக உத்தரவுப் பிறப்பித்ததற்கு வீடியோ சாட்சியங்கள் உண்டு; அவரின் பாதுகாப்பு அதிகாரி சாட்சியமும் கூறியுள்ளார். இதற்கு மேலும் தண்டனை அளிக்காவிட்டால்.... மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது முக்கியம்.

நடவடிக்கை

மருத்துவ உயர்கல்வியில் 50 சதவிகித இட ஒதுக்கீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

மருத்துவ இளங்கலை படிப்பில் 50 விழுக்காடு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் - கமிட்டியைப் போடுகிறாயோ - கிணற்றில் போடுகிறாயோ என்ற அனுபவ மொழிதான் நினைவிற்கு வருகிறது. முயற்சி செய்தால் இவ்வாண்டே அதனை செயலுக்குக் கொண்டு வந்திருக்கலாமே!