ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
October 10, 2020 • Viduthalai • மற்றவை

கையால் ஆகாதவர்களுக்கு...

கோவில்களில் சிறப்புப் பூஜைக்கு ரஜினி குடும்பத்தினர் ஏற்பாடு.

இப்பொழுதெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் சாதனைகளைக் கூறுவதற்கு ஒன்றும் இல்லாத நிலையில், அவர்களுக்குக் கிடைத்த மக்களை ஏமாற்றும் மயக்கச் சொல். 'எல்லாம் கடவுள் செயல்!' என்பது. கடவுளுக்கே மனுசன்தான் படி அளக்கிறான் என்பதுதான் உண்மை.

''கையாலாகாதவர்களுக்குக் கடவுள் துணை'' என்ற பழமொழி உண்டு.

யார் தயார்?

பா.ஜ.க. கூட்டணி யாருடன் என்பதுபற்றி தமிழக பா.ஜ.க.வினர் பலரும் கருத்து.

பா.ஜ.க. கூட்டணிபற்றிப் பேசுவது புரிகிறது. ஆனால், அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள யார் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கிய கேள்வி.

தெரியுமா?

பா.ஜ.க. ஆட்சி 35 ஆண்டுகள் நீடிக்க - ஒவ்வொருவர் வீட்டிலும் விவேகானந்தர் படம் அவசியம்: - திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார்.

பார்ப்பனர்கள் கக்கியது எல்லாம் விஷம் - பூணூல் என்பது அரைஞாண் கயிறு - பார்ப்பனர் கல்விக்காக அரசாங்கம் செலவு செய்யக் கூடாது என்று கூட விவேகானந்தர் கூறியுள்ளது இவர்களுக்கெல்லாம் தெரியுமா?

‘மிஸ்டு காலில்' அல்ல!

18 நாள்களில் தி.மு.க.வில் 10 லட்சம் பேர் இணைந்தனர். இதில் 53 சதவிகிதத்தினர் இளைஞர்கள்.

இவர்கள் எல்லாம் 'மிஸ்டு காலில்' இணைந்தவர்கள் அல்லர்!

எல்லாம்

அவன் செயல்!

மருத்துவ ஆராய்ச்சிக்கு அரசின் ஆதரவு இல்லாதது வேதனை அளிக்கிறது: - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.

அதனால் என்ன - தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தனும், மருந்தீஸ்வரர்களும்தான் இருக்கவே இருக்கிறார்களே - போதும் போதாதற்கு ராமன் கோவிலுக்கு அடிக்கல்லையும் பிரதமர் நட்டுவிட்டார். எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையால்தான் ஆட்சியாளர்கள் இப்பொழுது எல்லாம் 'கடவுள் செயல்' என்ற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனரே!

இராமாயண

எதிர்ப்பு வீரர்!

லோக் ஜன்சக்தி தலைவர் - மத்திய அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான் நேற்றுமுன்தினம் காலமானார்.

காரைக்குடியில் திராவிடர் கழகம் நடத்திய 'இராமாயண எதிர்ப்பு மாநாட்டிலும்' கலந்துகொண்டு கர்ச்சித்தவர் பஸ்வான் என்பது ரொம்பப் பேருக்குத் தெரியாது.

யார் சொன்னது?

கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை: - ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏ.டி.ஆர்.).

யார் சொன்னது? பா.ஜ.க.வுக்கு டாட்டா குழுமம் ரூ.356 கோடி நன்கொடை தந்தது. ஏர் இந்தியாவை டாடா குழுமத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசு கொடுக்கிறது - இதை சொல்லியிருப்பவர் சுப்பிரமணியசாமி எம்.பி. இவையெல்லாம் 'வெளிப்படையான' தன்மையானதுதானோ?

விஞ்ஞானமும் -

அஞ்ஞானமும்!

மதுரையில் இருந்து இரண்டரை மணிநேரத்தில் கன்னியாகுமரிக்குக் கொண்டு வரப்பட்ட மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் விவசாயி ஒருவருக்குப் பொருத்தப்பட்டது.

இதெல்லாம் ஒரு சாதனையா? பத்திரிகைகளை விரித்துப்  பாருங்கள். முக்காலமாகி நிற்கும் திரிகாலலேஸ்வரர், போர்க் கோலத்தில் நமது கடவுள் ஈஸ்வரன் என்று எல்லாம் பக்கம் பக்கமாக வரிந்து வரிந்து தள்ளுகிறார்களே - படிக்கவில்லையா?

கோவில் கர்ப்பக்கிரகத்துக்கே ஏ.சி. வசதி... ஆம், விஞ்ஞானத்தின்மூலம் அஞ்ஞானம்.