ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
October 14, 2020 • Viduthalai • மற்றவை

நிஜமா - நிழலா?

குட்கா விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ். தனி நீதிபதியின் தடையை நீக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு.

பிரச்சினை நாட்டில் 'குட்கா' மக்களிடத்தில் அதிகம் நடமாடுகிறது என்ற குற்றச்சாட்டா? அல்லது அந்தக் குட்காவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து எதிர்க்கட்சி காட்டியதா? நிஜத்தை விட்டு நிழலோடு சண்டையா? நல்ல 'வினோத அரசியல்!'

வெட்கப்படும் நிலையே!

பாலியல் வன்முறையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு - தமிழக அரசு ஆணை வெளியீடு.

ஒரு வகையில் வரவேற்கலாம் என்று தோன்றினாலும், இப்படியொரு நிலை சமூகத்தில் இருக்கிறதே என்பதை எண்ணி வெட்கப்படவேண்டும். பக்தி பரவுகிறது - நாத்திகம் தோற்கிறது என்று எழுதும் மே(ல்)தாவிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களாம்?

‘ஆன்லைனை'க் கண்டுபிடித்தது கடவுளா?

மயிலை, திருவொற்றியூர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பு.

பக்தியைப் பகுத்தறிவு விஞ்ஞான வழியில் பரப்பலாமா? ஆகமம் அனுமதிக்கிறதா என்று இதற்கெல்லாம் குரல் எழுப்பமாட்டார்கள்.

இந்த 'ஆன்லைன்' விஞ்ஞானத்தை எந்தக் கடவுள் கண்டுபிடித்துக் கொடுத்ததாம்? பக்தி பிசினஸ் ஆகிவிட்டது என்று சொன்ன மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி - அவர் உயிரோடு இருந்திருந்தால், அவர் வாயில் ஒரு கிலோ சர்க்கரையை அள்ளிப் போடலாம்!

காலில் விழும் கலாச்சாரம்!

கயத்தாறு அருகே தொழிலாளியைக் காலில் விழச் செய்து, அதனை வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பிய ஏழு பேர் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் கைது.

முதலில் இந்தக் காலில் விழும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

தீபாவளியும் - ‘புஷ்வாணமும்!'

கேரளாவில் ஓணம் பண்டிகையால் கரோனா அதிகரித்தது; தீபாவளியின் போது கூடுதல் கவனம் தேவை: - தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்.

தீபாவளி - கடவுள் கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது என்று நம்பி வாண வேடிக்கையில் - தடபுடலில் ஈடுபட்டால், மக்கள் உயிர் 'புஷ்வாணம்'தான்!

வார்த்தை ஜாலங்கள்!

வேளாண் துறை சட்டங்கள் விவசாயிகளை தொழில் முனைவோராக உயர்த்தும்: - பிரதமர் மோடி

ஓ, அப்படியா! முதலில் அவர்கள் வயலில் என்ன உற்பத்தி செய்வது என்று முடிவு எடுக்கும் உரிமை நிலை நிறுத்தப்படட்டும்!

அண்ணா - ஞாபகம் இருக்கட்டும்!

அ.தி.மு.க. 49 ஆவது ஆண்டு தொடக்க விழா வரும் 17 ஆம் தேதி.

மிக்க மகிழ்ச்சியே - வாழ்த்துகள்!  அண்ணா தி.மு.க. அல்லவா! கொஞ்சம் அண்ணாவின் கொள்கையும் ஞாபகத்தில் இருந்தால் சரி.

ஆச்சரியம்!

இந்திய பொருளாதாரம் 10.3 சதவிகிதம் சரிவடையும்: பன்னாட்டு நிதியம் அறிவிப்பு.

சரியாமல் இருந்தால்தான் ஆச்சரியம்!