ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
November 12, 2020 • Viduthalai • மற்றவை

நுழைய விடாத தேர்வு

தமிழகக் கல்லூரிகளில் உள்ள எம்.சி.ஏ., படிப்புக்கான இடங்களுக்கு டான்செட் நுழைவுத் தேர்வில்

60,000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளும் வெளிவந்தன. 813 மாணவர்கள் மட்டுமே தங்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். 41,149 இடங்கள் காலியாகவே உள்ளன.

பி.ஏ. படிப்புக்குக்கூட நுழைவுத் தேர்வு என்கிற தேசிய கல்விக் கொள்கை. கல்லூரிகளில் நுழைய விடாமல் தடுப்பதற்கே நுழைவுத் தேர்வு என்பது விளங்கவில்லையா?

தகுதி - திறமையை வளர்த்துக் கொள்ளத்தானே கல்லூரி படிப்பு. அந்தக் கல்லூரியில் நுழைவதற்கே தகுதி - திறமை வேண்டும் என்பது எப்படி சரி என்று கேட்கிறார் தந்தை பெரியார்.

இதற்குப் பதில் என்ன?

பகோடா விற்கலாமே!

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி! சென்னை போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கைது.

இதுபோன்ற செய்திகள் அதிகம் வந்துகொண்டுள்ளன. வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்வதும் ஒரு வேலை வாய்ப்பாக அமைந்துவிட்டதோ! காரணம், வேலை வாய்ப்பின்மை என்பது தலைவிரித்தாடுகிறது. பகோடா விற்பதும் ஒரு வேலைதான் என்று பிரதமரே கூறிவிட்டாரே!

தேர்தல் வழக்கு - தீர்ப்பு அடுத்த தேர்தல் வரும்வரை!

ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்பட தேர்தல்கள் நியாயமாக நடுநிலையுடன் நடக்கவேண்டும்: - தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

நடுநிலை பிறழ்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால், அடுத்த தேர்தல் வரை தீர்ப்புக் கிடைக்காத நிலை இருந்தால் தேர்தல்கள் எப்படி நடுநிலையாக, நியாயமாக நடக்கும்? வாக்குகள் எண்ணப்படுமாம் - முடிவு அறிவிக்கக் கூடாதாம் - இப்படியும் தீர்ப்பு உண்டே!

பரிதாபத்திற்குரிய

‘முருகன்!'

டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூர் வேல் யாத்திரை நிறைவு விழாவில் பி.ஜே.பி. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்பு: - தமிழக பி.ஜே.பி. மாநில செயலாளர் பேட்டி.

ஓ, சட்ட ஒழுங்குப் பிரச்சினையை மாநில பி.ஜே.பி. மட்டுமல்ல - அகில இந்திய பி.ஜே.பி.யும் சேர்ந்து ஏற்படுத்துகிறதோ - அந்தோ, பரிதாபம் 'முருகன்!'

தில்லு முல்லு திருவிளையாடல்!

சிராஜ்பஸ்வானுக்கு (லோக் ஜனசக்தி) பா.ஜ.க. இரகசிய சலுகைகள் அளித்ததே தங்கள் தோல்விக்கு முக்கிய காரணம்: - பீகார் மாநில அய்க்கிய ஜனதா தலைவர் கே.சி.தியாகி.

இது மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனை தில்லுமுல்லு திருவிளையாடல்களை பி.ஜே.பி. செய்தது என்பது போகப் போகப் புரியும்.

விரைவில் ரிலீஸ்?

முஸ்லிம் நாடான அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஹிந்து கோவில் வரைபடம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மசூதியை இடித்துவிட்டுக் கட்டப்படும் ராமன் கோவில் வரைபடத்தை விரைவில்  எதிர்பாருங்கள்!

மங்காத்தா

கோவிலிலா?

கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்கிறது: - எல்.முருகன், தலைவர், தமிழக பா.ஜ.க. தலைவர்.

மதுரை வீரன், மங்காத்தா கோவில்களிலா? மயிலாப்பூர் கபாலீஸ்வரன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழில்தான் அர்ச்சனை நடக்கிறதா?