ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்...!
August 28, 2020 • Viduthalai • மற்றவை

ஆச்சரியம் என்ன?

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முன்னிலையில் இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.யில் ராமன் கோவில் கட்டப் போகிறார்கள் அல்லவா! பெண்ணாகிய சீதையை ராமன் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தான்?

கருப்புச் சட்டை கூறினால் வேறு அர்த்தம் சொல்லுவார்கள்.

ராஜாஜியைச் சாட்சிக்கு அழைக்க வேண்டியதுதான்.

சந்தானம் அய்யங்கார் ''உத்தர ராம சரிதம்'' என்று வடமொழி நாடக நூல் ஒன்றை எழுதினார். அந்நூலுக்கு ராஜாஜி எழுதிய முன்னுரை:

''நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன். ஸ்ரீராமன் உலகத்திற்கு வழிகாட்ட அவதரித்த கடவுள். சீதையை அரும்பாடுபட்டு இலங்¬யிலிருந்து கொண்டு வந்த பின், ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டு, சீதையைக் காட்டுக்கு அனுப்பிவிட்டார் என்ற  கொடுஞ்செயலை என் மனதிற்குள் சமாதானம் படுத்திக் கொள்ளவே முடியவில்லை'' என்று எழுதினார்.

உ.பி.யில் நடக்கும் ராமராஜ்ஜியத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதில் ஆச்சரியம் என்ன?

நடையைக் கட்டவேண்டியதுதான்!

தமிழகத்தில் பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்களே! - தமிழக பி.ஜே.பி. பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டி.

எல்லா வைத்தியமும் முடிந்துவிட்டது. உங்களைக் காப்பாற்ற எங்களால் முடியாது. இனி ஆண்டவன் கையில்தான் என்று சில டாக்டர்கள் கூறித் தப்பிப்பதுண்டு.

ஓ, தமிழக பா.ஜ.க. அந்தக் கட்டத்திற்கு வந்துவிட்டதோ? மக்கள் காப்பாற்ற மாட்டார்கள் - இனி கடவுள் முருகன் கையில்தான் இருக்கிறது என்கிறார் முரளிதரராவ்.

ஓ, பா.ஜ.க. தலைவரின் பெயர் முருகன் என்பதால், அப்படி சொல்லியிருப்பாரோ!

1971 இல் ராமன் காப்பாற்றவில்லை. அதுபோல் இப்போது கடை விரித்தோம் கொள்வாரில்லை - கட்டிக் கொண்டோம் என்று நடையைக் கட்ட வேண்டியதுதான் பா.ஜ.க.வுக்குப் பாக்கி!

ஊரடங்கு

நீடிக்க, நீடிக்க...

சிறீபெரும்புதூரில் இருந்து லாரியில் கொண்டு சென்ற

ரூ.12 கோடி மதிப்புள்ள செல்போன்கள் ஆந்திராவில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சொன்னதுபோல, ஊரடங்கு நீடிக்க நீடிக்க கொள்ளைகளும், கொலைகளும் பெருகும் என்று சொன்னது சரியாகிப் போய்விட்டது.

தமிழக அரசே கொண்டுவரலாம்!

'நீட்' தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். - தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சபாஷ்! சரியான கோரிக்கை. தமிழ்நாடு அரசே ஓர் அவசர சட்டத்தைப் போடலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியுள்ளாரே - அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாமே - செயல்படலாமே!

உயிரோடு விளையாடுவதா?

சந்தையில் விற்பனையாகும் முகக்கவசங்கள் எப்படி? அணியும் சட்டைக்கு ஏற்ப 'மேட்ச்' பார்க்கிறார்களாம். இந்தக் கவசங்கள் கோவிட் -19 வைரசைத் தடுக்க உதவாது.

அணியும் உடைக்கு ஏற்ப கால் செருப்புவரை மேட்ச் பார்க்கும் (அ) நாகரிகம் உருவாகிவிட்டதே (விளம்பரங்கள் உபயம்!)

ஆனால், உயிரோடு விளையாடும் அளவுக்கு இது போக வேண்டுமா?