ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்!
September 13, 2020 • Viduthalai • மற்றவை

நவீன தீண்டாமையா?
மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. நவீன தீண்டாமை. - எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.  அது என்ன 'மாடர்ன்' தீண்டாமை. பி.ஜே.பி. ஆட்சியில் கோவில்களுக்குள் நுழையவிடாமல் குடியரசுத் தலைவரையே (தொட்டு) பிடித்துத் தள்ளினார்களே, ஒருக்கால் இதைத்தான் சொல்லுகிறாரோ!
முருகனுக்கு முன்பு ஒருமுறை டாக்டர் கிருபாநிதி தமிழக பா.ஜ.க. தலைவராக வந்தபோது பா.ஜ.க. அலுவலகத்தில் ஃபேக்ஸ் கருவியைப் பயன்படுத்தக் கூட அனுமதிக்கப்படவில்லை; வெளியில் சென்று அனுப்பிய நிலையைச் சொல்லிப் புலம்பினாரே, அதுவா?

செல்ஃபியாம் - செல்ஃபி!
தூக்கில் தொங்கியதுபோல செல்ஃபி எடுக்க முயன்ற காரைக்குடியை அடுத்த பொம்மி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த திராவிடம் (வயது 24) உண்மையிலேயே சாவு!
செல்போன் என்பது செய்தித் தொடர்புக்கு என்பது போய், நேரத்தையும், உயிரையும் கொல்லும் கொல்லியாக மாறிவிட்டதே - இதுபற்றி பள்ளிகள், பெற்றோர்கள், குடும்பத்தார் அக்கறை கொள்ள வேண்டாமா?

கோவிலுக்குள் கோப்புகளா?

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முக்கிய கோப்புகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.
பக்தி - அதிகமாக முற்றிவிட்டது போலும். அரசு கோப்புகளை வெளியில் கொண்டு சென்று, ஒரு கோவிலில் வைத்து வழிபடுவது எல்லாம் அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டதுதானா?

திராவிட இயக்க அடிப்படைக் கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அவல நிலையல்லவா ஏற்பட்டுவிட்டது. கொட்டையும் - பட்டையும்தான் மதச்சார்பற்ற அரசின் சின்னங்கள் போலும்!

புண்ணை மறைத்தால்...


இந்தியாவில் 2020 மே மாத தொடக்கத்திலேயே 64.5 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற அதிர்ச்சி தகவல். - அய்.சி.எம்.ஆர். சர்வே.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் தொற்று 45,62,414 மே மாதத்திலேயே 64.5 லட்சம் என்றால், இப்போதுள்ள எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்க முடியும்? எது சரி? புண்ணை மறைத்தால் புரையோடுமே!


சரிவோ சரிவு!
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 23.9 விழுக்காடாக வீழ்ந்தது.
இந்நிலை நடப்பாண்டில் ஜிடிபி விகிதம் 11.5 விழுக்காடாக சரியும் என்று அமெரிக்காவின் 'மூடிஸ்' பொருளாதார ஆய்வு கணித்துள்ளது.
அதனால் என்ன? எல்லாம் கடவுள் செயல் என்று காரணத்தைக் கண்டுபிடித்துள்ள நிபுணர் ஒருவர்தானே இந்தியாவின் நிதித்துறை அமைச்சர்?

பூக்கப் போவது புதிய இந்தியா!
தேசிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும் - பிரதமர் மோடி.
அதில் என்ன சந்தேகம்? கிராமங்கள் மேலும் நசிந்து போகும் - பெண்கள் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாடு சீரழியும்.
இத்தியாதி இத்தியாதிகளால் இப்பொழுதுள்ள இந்தியா மாறி 'புது இந்தியா' 'பூக்கத்'தானே செய்யும்?

பூசாரிகளே கொலையாம்!
கருநாடக மாநிலம் குட்டலு கிராமத்தில் உள்ள கோவில் பூசாரிகள் மூவர் கொலை செய்யப்பட்டு, கோவிலில் கொள்ளை.
பிரசித்தி பெற்ற கோவிலாம் அது. அந்தக் கோவில் பூசாரிகளும் கொலை - கோவில் சொத்துகளும் கொள்ளை - அடடே கடவுள் சக்தியே சக்தி! பூசாரிகளின் குடும்பத்தினருக்கு நமது இரங்கல்!