ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செப்டம்பர் 17 - இடையில் எட்டே நாட்கள்!
September 8, 2020 • Viduthalai • தலையங்கம்

தந்தை பெரியாரின் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவுக்கு இடையில் எட்டே நாள் அவகாசம் தான் இருக்கிறது.

வேறு எந்த ஆண்டையும்விட வெகு நேர்த்தியாக அய்யா விழா எங்கெங்கும் நடைபெற வேண்டும் என்று கழகத் தலைவர் விடுத்த வேண்டுகோள் மிக முக்கியமானது.

மாவட்டங்களிலிருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. எங்கெங்கும் சுவர் எழுத்துப் பணி ஓகோ என்று நடைபெற்று வருவது மிகவும் சிறப்பானது.

கரோனாவால் ஊரடங்கி இருக்கலாம். ஆனால் கருஞ்சட்டைத் தோழர்கள் கருத்துகளால் எப்பொழுதும் எழுச்சி கொண்டவர்கள். அவர்களை அடக்க எந்த சக்தியாலும் முடியாது.

ஊரடங்கு கால கட்டத்திலும் நம்முடைய பணிகள், தெருவில் இறங்கி நடக்க முடியாவிட்டாலும், அன்றாடம் ஒவ்வொரு வகையில் இயக்கப் பணிகள் எழுச்சியுடன் நடந்து கொண்டு தான் உள்ளன.

பெரும்பாலான நாட்களில் கழகத் தலைவர் காணொலிமூலம் கழகத் தோழர்களையும், தமிழின உணர்வாளர்களையும், சமூகநீதி யாளர்களையும் கருத்து ரீதியில், கொள்கை ரீதியாகச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றார்.

"விடுதலை'யில் ஒவ்வொரு நாளும், அன்றாடப் பிரச்சினைகள் குறித்து அலசும், எச்சரிக்கும் அறிக்கைகளை விடுத்த வண்ணமே உள்ளார்.

அச்சிடப்பட்ட 'விடுதலை'யைப் படிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் இணையதளம் மூலம் வாசிக்கும்  அறிவியல் தடத்தில் நமது தோழர்களும் பயிற்சி பெற்று விட்டனர். கழகத்துக்கு அப் பாற்பட்ட வாசகர்கள். 'விடுதலை'க்கு அதிகரித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.

காணொலி மூலம் கழகத்தின் பல்வேறு அணியினரும் கருத்துப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டே உள்ளனர். பகுத்தறிவாளர் கழகமும் தன் பங்குக்கு இத்திசையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டேஇருக்கிறது.

சமூகநீதிக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அதுகுறித்த தரவுகள் குறித்து அடங்கிய கழகத் தலைவரின் அறிக்கை துண்டு அறிக்கையாக, இந்த ஊரடங்குக் காலத்திலும், பொது விதி முறைகளைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணி அசாதாரணமானது - வேறு எந்த ஓர் அமைப்பும் செய்யாத - செய்ய முடியாத இத்தகைய அறிவுப் பூர்வமான பணியை நமது தோழர்கள் மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

பிரச்சாரம் - போராட்டம் - என்பது ஒரு கடிகாரத்தின் பெண்டுலம் இரு பக்கமும் அசைவது போன்றது என்று நமது கழகத் தலைவர் ஆசிரியர் அழகாக கூறுவதுண்டு:

பெரிய அளவு வீதியில் இறங்கி மக்களைத் திரட்டிப் போராட் டங்களை நடத்தும் வாய்ப்பு இல்லை என்றாலும், வீடுகளுக்கு முன் நின்று, கழகக் கோரிக்கைகளின் அட்டைகளைத் தாங்கிக் கொள்கை முழக்கமிடும் அறவழிப் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன.

இயக்கம் என்பது வேறு - கட்சி என்பது வேறு; நம்முடையது ஓர் இயக்கம் என்கிற முறையில் எந்த ஒரு நொடியிலும் கண் மூட முடியாது; விழிப்பாக இருந்தாக வேண்டும். பகற்கொள்ளை என்று சொல்லும் வகைகளில் மத்தியில் உள்ள மதவாத ஆட்சி தேசிய கல்விக் கொள்கை என்னும் பெயரில் பழைய குலக்கல்வித் திட்டத்தை ஒப்பணை செய்து திணிக்கும் ஒரு வேலையில் அதிகாரத் திமிர்த்தனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் மண்ணையும், விண்ணையும் அளந்து எழுந்து நிற்கும் எதிர்ப்புச் சுனாமியால் தேசியக் கல்வித் திட்டக் கப்பல் தள்ளாடிக் கொண்டுள்ளது.

எந்த ஒரு மக்கள் நாயக மாண்பையும் கடைப்பிடிக்காமல், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற போக்கில் ஆர்.எஸ்.எஸ். காட்டும் திசையில் மத்திய பிஜேபி அரசு - பதவிப்போதை ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டுள்ளது.

குறைந்தபட்சம் மிக முக்கியமான கல்வித் தொடர்பான ஒரு திட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயக ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூட தயாராக இல்லாத - விரும்பாத பாசிசம் தலைக்கொழுத்துத் தாண்டவ மாடுகிறது.

'கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை' என்பதுபோல கரோனா தீயால் மக்கள் கருகிக் கொண்டு இருக்கும் ஒரு நிலையில், ஊரடங்கை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு, ஒரு மதச் சார்பற்ற அரசின் பிரதமர் ராமன் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார் - சாஷ்டாங்கமாக விழுந்து, இந்து மதவாதம் என்ற கோயிலுக்குக் குட முழக்கு நடத்துகிறார் என்றால் - நாடு எத்திசையில் சென்று கொண்டு இருக்கிறது?

இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பிரதமர் மோடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு மதக் கண்ணோட்டம் இல்லாத வரை இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இடித்துச் சொன்னாரே; பயணத்தை முடித்து அமெரிக்கா சென்ற நிலையிலும் காந்தியார் இப்பொழுது உயிரோடு இருந் தால் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பார் என்று மனம் நொந்து பேச வில்லையா?

இந்த நிலையில் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிடித்து ஆட்டும் மதவாதப் 'பேயை' விரட்டியடிக்கும் மிகப் பெரிய சக்தி, நிவாரணம் என்பது ஈரோட்டு மூலிகையால்தான்.

இவ்வாண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாள் எழுச்சி இந்தியா முழுவதும் எட்டட்டும். எங்கெங்கும் கழகக் கொடி வீடுகள் உட்படப் பறக்கட்டும் - பறக்கட்டும்!! பகுத்தறிவுத் தகவல் பலகைகள் அமையட்டும் - அமையட்டும்!

ஊர் கண் மூடலாம் - ஊர்க் காவல் படையினராகிய நாம் மூடலாமா, மூடத்தான் முடியுமா?

தந்தை பெரியார் பிறந்த நாள் அவரின் கொள்கைச் சங்கநாதம் இந்தியா முழுமையும், ஒலிப்பதற்கான ஓர் உந்து சக்தியாக அமையட்டும், அமையட்டும்! இன்னும் சுவர் எழுத்து எழுதப்படாத பகுதிகளில்இன்றே அப்பணிகள் தொடங்கட்டும் - தொடங்கட்டும்! இனிவரும் உலகம் என்பது தந்தை பெரியார் மாட்டே என்பதை நினைவில் வையுங்கள் - பகுத்தறிவுப் பகலவன் ஒளி எங்கெங்கும் பரவட்டும் - பரவட்டும்! 

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!