ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சென்னை - பெரியார் திடலில் பகுஜன் திராவிட கட்சியின் 'கான்சிராம் டைம்ஸ்' ஆங்கில ஏட்டினை தமிழர் தலைவர் வெளியிட்டார்
October 9, 2020 • Viduthalai • கழகம்

பகுஜன் திராவிடக் கட்சியின்  'கான்சிராம் டைம்ஸ்'  (Kanshiram Times) ஆங்கில ஏட்டின் வெளியீட்டு நிகழ்வு சென்னை - பெரியார் திடலில் நடைபெற்றது. 'கான்சிராம் டைம்ஸ்'   ஏட்டினை காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார்.

ஒடுக்கப்பட்ட சமூகப் பணியாளர்களை 'பாம்செப்' (Bamsef)  அமைப்பின் மூலம் நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைத்து சமூக மாற்றத்திற்குப் பாடுபட்ட போராளியான கான்சிராம் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளில் (அக்டோபர் 8) சென்னை - பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நினைவக வளாகத்தில் 8.10.2020 அன்று 'கான்சிராம் டைம்ஸ்' ஏட்டின் வெளியீட்டு விழா நடைபெற்றது. பகுஜன் திராவிட கட்சியின் (Bahujan Dravida Party - BDP) தலைவரும், 'கான்சிராம் டைம்ஸ்' ஏட்டின் முதன்மை ஆசிரியருமான ஜீவன்குமார் அவர்கள் நிகழ்வில் அறிமுகவுரையினை ஆற்றி வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

அடுத்து தமிழர் தலைவர் அவர்கள் 'கான்சிராம் டைம்ஸ்' ஏட்டின் முதல் பிரதியினை வெளியிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை, ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியம்பற்றிய ஆழ்ந்தஉரையினை ஆங்கிலத்தில் வழங்கினார். திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் 'கான்சிராம் டைம்ஸ்' ஏட்டின் இணைய வழிப் பதிப்பினை வெளியிட்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில்  பிஎன்டி (BNT) அமைப்பின் தலைவர் எம். சதாசிவம், உலக தமிழர் அவையின் பாலாசிங், பத்திரி கையாளரும், சென்னை - உயர்நீதிமன்ற வழக்குரைஞரு மான  சுசில்ராஜ்குமார், கேரள பகுஜன் திராவிடக் கட்சியின் மாநிலத் தலைவர் வயலார் ராஜீவன், கடல்சார் மக்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் பீரவீன்குமார், 'கடலார்' ஏட்டின் ஆசிரியர் கே. வேலாயுதம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தலைவரின் உரை

'கான்சிராம் டைம்ஸ்' ஆங்கில ஏட்டினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆற்றிய ஆங்கில உரையின் சுருக்கம் பின்வருமாறு:

இந்த நாட்டின் பூர்வீக மக்களான திராவிட இன மக்களின் அடையாளத்துடன்,வெகுஜன மக்களான ஒடுக்கப்பட்ட திராவிட இன மக்களின் விடுதலைக்குப் பாடுபடக் கூடிய  'பகுஜன் திராவிடக் கட்சி' எனும்அரசியல் அமைப்பின்  அதிகாரப் பூர்வ, ஏடாக 'கான்சிராம் டைம்ஸ்' ஆங்கில ஏட்டினை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட அடையாளமாக பரவலாகப் பரப்பிய, திராவிட இன அடையாளத்தையும், பாபாசாகேப் பி.ஆர். அம்பேத்கர் வரலாற்று ஆய்வுப் பூர்வமாக கண்டறிந்த - இந்த நாடு முழுவதும் ஒரு காலத்தில் முழுவதுமாக நிறைந்திருந்த இந்த மண்ணின் மக்கள் திராவிடர்கள்தான் என்ற உண்மையினையும் சரியாகப் புரிந்துகொண்டு இன்றைய தினம் பகுஜன் திராவிடக் கட்சி தனது கொள்கை பரப்பு ஏட்டினை கொண்டு வந்துள்ளது பெரிதும் பாராட்டுதலுக்குரியது. இந்த மண்ணில் நிலவிவரும் சமுதாயப் பிரச்சினையும் பன்னெடுங்காலமாக நிலவி வரும் பெரும்பான்மை மக்களின் ஒடுக்கப்பட்ட நிலைமையும் சரியானபடி புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பிற நாடுகளிளெல்லாம் பெரும்பான்மையினர், எண் ணிக்கை அளவில் உள்ள சிறுபான்மையினரை அடக்கி ஆளுவது பரவலாக நிலவிடும் நிலைமை.  ஆனால் இந்நாட்டில் நிலவிவருவது அதற்கு முற்றிலும் எதிரான நிலைமை ஆகும். எண்ணிக்கையில் சிறுபான்மையிலும் மிகச் சிறுபான்மை (Microscopic minority) மக்கள் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அடக்கி ஆண்டு வருகின்றனர். இந்த சமூகத்தைப் பீடித்துள்ள நோய் முதலில் சரியாக  அறிந்து கொள்ளப்பட வேண்டும்; புரிந்து கொள்ளப்பட வேண்டும். 3 விழுக்காடு எண்ணிக்கைக்கும் குறைவாக உள்ள பார்ப்பனர்கள் 97 விழுக்காடு உள்ள மக்களை மூளையில் விலங்கிட்டு அடிமைப்படுத்தி ஆண்டு வருகின்றனர். இது உலகில் எந்த நாட்டிலும் காண முடியாத சமூக முரண்பாட்டு நிலையாகும்.

தந்தை பெரியார் குறிப்பிட்ட பார்ப்பன நாயகம்

இந்த நாட்டில் நிலவிய, இன்றும் தொடர்ந்து வரும் பார்ப்பன மேலாதிக்கத்தை தந்தை  பெரியார் அவர்கள் 1920களிலேயே எடுத்துக்காட்டி எச்சரித்தார். அன்றைய நாளில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்று வந்தது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினைக்கு பிரிட்டிஷ் ஆட்சியிலேயே தீர்வு காணப்பட வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி நீங்கிவிட்டால் இந்த நாட்டுப் பெரும்பான்மை மக் களுக்கு சமூகநீதி கிடைக்காது. ஜனநாயகத்தைக் காப்பது பெயரளவில் தான் இருக்கும். மக்களால் மக்களுக்காக  மக்களே நடத்திடும் ஆட்சி முறைக்குப் பெயர்தான் ஜனநாயகம். ஆனால் பிரிட்டிஷார் சென்றுவிட்டால், உண்மையான ஜனநாயகம் இருக்காது. பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்காக, பார்ப்பனர்களே  நடந்திடும். அரசியல் ஆட்சிமுறையான பார்ப்பன நாயகம் (Brahminocracy)  தான்  'ஜனநாயகம்' எனும் பெயரில் நடைபெறும். இதைத்தான் அன்று  சேலத்தில்  நடைபெற்ற ஒரு கூட்டத்தில்பேசும் பொழுது தந்தை பெரியார் குறிப்பிட்டு எச்சரித்தார். தந்தை பெரியார் அன்று எச்சரித்தது இன்று எதார்த்தமான  நிலைமையாக உள்ளது.  கண் கூடாகத் தெரிகிறது. அத்தகைய பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்கின்ற வகையில், அமைதி வழியில் கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று பகுஜன் திராவிடக் கட்சியின் ஆங்கில ஏடு தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவரும், 'கான்சிராம் டைம்ஸ்' ஆங்கில ஏட்டின் ஆசிரியருமான ஜீவன்குமார் அவர்களை மிகவும் பாராட்டுகிறோம்.

சமூக மாற்றப் போராளி கான்சிராம்

இன்று வெளிவந்துள்ள ஆங்கில ஏடு சமூக மாற்றத்திற்கு தொடர்ந்து போராடி வந்த மிகப் பெரிய போராளித் தலைவரான கான்சிராம் அவர்களின் பெயரால் தொடங்கப்பட்டுள்ளது வெகு பொருத்தமானதாகும். இந்த நாட்டின் சமூகப் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வையும் சரியாகப் புரிந்து செயல்பட்ட தலைவர் கான்சிராம் அவர்கள். சமூக மாற்றத்திற்குப் பாடுபட்ட புரட்சியாளர்கள் -  மகாத்மா ஜோதிராவ் புலே, தந்தை பெரியார், சிறீ நாராயணகுரு, சாகுமகராஜ், அண்ணல் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சமுதாயப் பணியினை புரிந்து கொண்டு அந்த வழியில் தொடர்ந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசின் சார்பாக 1995ஆம் ஆண்டில் 'பெரியார் மேளா' எனும் மாபெரும் நிகழ்வினை - ஒட்டு மொத்த நாட்டினரையே உற்று நோக்கிப் பார்க்க வைத்த விழாவினை நடத்திடுவதற்கு அடிப்படைக் காரணமாகவும் ஆக்கப்பூர்வமாக செயல் படுத்திக் காட்டியவர் கான்சிராம்  அவர்கள். எங்களுடன் கான்சிராம் அவர்கள் உரையாடும் பொழுது மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுவது ஒன்று. சமூகப் புரட்சியாளர்களிலேயே கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத (uncompromising) ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான் -  என்பதை அடிக்கடி கான்சிராம் குறிப்பிடுவார்.

கான்சிராம் அவர்கள் சமூகநீதி என்பதுநாம்சென்றடைய வேண்டிய இலக்கு அல்ல. சமூக மாற்றம்தான் நமது இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் சமூகநீதி (Social Justice)  என்பது சமூகப் பெரு மாற்றத்திற்கான (Social Transformation) ஒரு கருவி; வழிமுறை. மறுக்கப்பட்ட நீதியை வென்றெடுத்து சமூகத்தில் இன்று நிலவி வருகின்ற நிலையிலிருந்து பெரும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதையே நாமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆளும் பார்ப்பன ஆதிக்கம், ஒடுக்கப்பட்ட மக்களான தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மத சிறுபான்மையினர், எந்த வகைகளிலும் ஒற்றுமை ஆகிவிடக் கூடாது. அடக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைத்து விட்டால் அடக்குபவருக்கு ஆபத்து; காலப் போக்கில் ஆதிக்கம் தகர்க்கப்பட்டு விடும். அந்த நிலை வந்துவிடக் கூடாது என பார்ப்பன ஆதிக்கம் நம்மை - நம் மக்களை ஒடுக்கி வைத்திருக்கிறது. மதத்தைக் காரணம் காட்டி, கடவுளை துணைக்கழைத்து பிரித்து வந்துள்ளது நமது சமூக இழிவு ஒழிவது, நமது சமூக ஏற்றம் பெறுவது நமது கையில்தான் உள்ளது. நமக்குள் உள்ள சிறுசிறு வேறுபாடுகளை களைந்திட வேண்டும். எது நம்மைப் பிரிக்கிறதோ அதை ஆழப் புதைக்க வேண்டும்; எது நம்மை இணைக்கிறதோ அதை உயர்த்திப் பிடித்து ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்று, உரிமைக்காக ஒன்றிணைந்து போராடினால், நமக்கான 'விடியல்' வெகு விரைவில் வந்துவிடும். அந்த நாளை நோக்கிப் பயணிப்போம்; அந்தப் பணியில் நம்மை ஈடுபடுத்தி அதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம்.

வாழ்க தந்தை பெரியார்! வாழ்க கான்சிராம்!

ஓங்குக ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை!

வென்றெடுப்போம் நமக்கான உரிமைகளை! நன்றி.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

'கான்சிராம் டைம்ஸ்' ஏட்டின் வெளியீட்டு நிகழ்வில் காணொலி மூலம் அமெரிக்காவிலிருந்துவெளிவரும் அம்பேத்கர் டைம்ஸ் (Ambedkar Times) ஏட்டின் முதன்மை ஆசிரியர் பிரேம் சும்பர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முன் ஏற்பாடுகளையும் சென்னை - பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வுகளையும், தமிழர் தலைவரின் காணொலி உரையினையும் சிறப்பாக ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நடத்தினார். திராவிடர் மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பை வழங்கினார். நிகழ்ச்சிக்கான பிற ஏற்பாடுகள் பெரியார் சமூகக் காப்பு அணியின் அமைப்பாளர் சுரேஷ் மற்றும் பெரியார் திடல் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில்  பங்கேற்ற, நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பகுஜன் திராவிட கட்சியின் துணைத் தலைவர் ராஜகோபால் உரையாற்றி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.