ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சென்னையில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது!
August 18, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

அல்லற்பட்டு ஆற்றாது அழுதிடும் தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்காவிட்டால்,

அதுவே நாளைக்கு ஆட்சிக்கு எதிராக  ‘பேருரு' (விஸ்வரூபம்) எடுப்பது உறுதி!

இ-பாஸ் முறையை அறவே ரத்து செய்க!!

சென்னையில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதித்திருக்கும் முடிவினை மறுபரி சீலனை செய்யவேண்டும்; மேலும் இ-பாஸ் முறையை அறவே  ரத்து செய்யவேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கரோனா தொற்று (கோவிட் 19) குறைந்தபாடில்லை. இந்தியா முழுமையிலும்கூட கரோனா தொற்று நாளும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதைப் பரவாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகளின் உத்திகளும், கையாண்ட வழிமுறைகளும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

மத்திய - மாநில அரசுகளை

அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன!

இந்தியாவில் நேற்று (17.8.2020) காலை எட்டு மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மொத்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்து 921 ஆக உயர்ந்துள்ளது.

சுமார் 5 மாதங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இந்தக் குறையாத தொற்றும், குன்றாத மரணங்களும், மத்திய - மாநில அரசுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன!

அதைவிட அதிகமாக பொதுமக்களின் அச்சம் அதிகமாகி வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் உயிர் பலியில் இரண்டாவது இடத்திற்கு வந்து நிற்கிறது என்பது மிகவும் வேதனை மிகுந்த செய்தி. முதலாவது மகாராட்டிரம் 20,037 பேர் கரோனாவினால் மரணமடைந்தவர்கள் பட்டியலில் உள்ளனர் என்றால், அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது 5,766 பேர்.

மனித உயிர்கள்  ஒவ்வொன்றும்

முக்கியம்!

இந்தியாவின் இறப்பு விகிதம் 1.92 சதவிகிதம்தான்; தமிழ்நாட்டின் இறப்பு விகிதமும் குறைவுதான் என்று கூறி ‘விகிதக் கணக்கில்' ஆறுதல் அடைவது சரியானதல்ல; காரணம், மனித உயிர்கள்  ஒவ்வொன்றும் முக்கியம். இவர்களைக் காப்பாற்றுவதற்குப் போதிய ஒத்துழைப்பை நல்கிட மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.

கிராமங்களில் தொற்று பரவும் பேராபத்து தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது; இது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடக் கூடிய ஆபத்து உள்ளது.

சென்னையில் நேற்றுகூட 1,185 பாதிக்கப்பட்டவர்கள். ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற பிறகும்கூட!

தாய்மார்களின் கதறல்

 தமிழக அரசின் காதுகளில் விழவில்லை?

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அதன் வருவாய்ப் பெருக்கத்திற்காக, டாஸ்மாக் மது விற்பனைக்கடைகளை சென்னையில் திறக்க அனுமதித்திருப்பது கண்டனத் திற்குரிய வேதனையான ஒன்றாகும்!

‘‘சில மாதங்களாக நாங்கள் குடும்பத்தில் சண்டைச் சச்சரவின்றி அமைதியாகக் கழித்தோம்; மீண்டும் மதுக்கடைகள் திறப்பு அந்த சூழ்நிலையை அறவே மாற்றிவிடும்; எங்களது குடிகாரக் கணவர்கள் குடித்துப் பணத்தையும், உடல்நலத்தையும் விரயம் செய்வதோடு, குடும்ப அமைதியையும் பறித்து விடுவார்கள்'' என்று தாய்மார்கள் ஆற்றாது அழுது கண்ணீர் விட்டுக் கதறு வது ஏனோ தமிழக அரசின் காதுகளில் விழவில்லை?

இ-பாஸ் முறையை ரத்து செய்க!

எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்னால் கேட்கக் கூடாது என்பது ஆளும் தலைமையில் உறுதியான ‘சூத்திரமாகவும்', பிறகு அதே முடிவினை சில நாள் கழித்து, ‘ஞானம்' பெற்று - கையாள்வது வேடிக்கையான வாடிக்கையாகவும் ஆகி வருகிறது!

அதுபோலவே, மக்கள் வெளியூர்களுக்குச் சென்று திரும்புதல் போன்றவற்றிற்கு அனுமதி என்ற இ-பாஸ் முறையை ரத்து செய்யவேண்டும் என்பது அநேகமாக மிகப்பெரும்பாலான மக்கள் - தலைவர்கள் - சமூகத் தொண்டர்களின் உறுதியான கருத்தாகும். காரணம், இதனால்  லஞ்ச லாவண்யம் பெருகுகிறது; அரசு ஊழிர்களின் பணிச்சுமையும் மேலும் சிக்கலுக்கும், தகராறுகளுக்கும் ஆளாகின்ற நிலை உள்ளது. இதனை ரத்து செய்யவேண்டும். இக்கட்டத்தில்! வெளியில் நடமாடுபவர்களுக்குத் ‘‘தேவையில்லாமல் சென்று, கரோனா  தொற்றுக்கு ஆளாகி உயிருக்கு உத்தரவாத மில்லாத நிலையை நீங்களே வரவழைத்துக் கொள் ளாதீர்கள்'' என்பது போன்ற வலிமையான பிரச்சாரத் தினை முடுக்கி விடவேண்டும். இ-பாஸ் முறை எதிர்பார்த்த பயனைத் தரவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, கைவிட முன்வரவேண்டும்.

மத்திய அரசே இந்த முடிவினை எடுத்து சில வாரங்கள் ஆகின்றன!

இந்நிலையில் தமிழ்நாட்டில் இ-பாஸ் ரத்து இல்லை; பெரும் அளவில் தளர்வு செய்து, இ-பாஸை எளிமை யாக்குகிறோம்; விண்ணப்பித்த எல்லோருக்கும் கொடுக் கிறோம் என்று கூறப்படுகிறது தமிழக அரசின் சார்பில்.

எல்லோருக்கும் கொடுத்த பிறகு, எதற்கு இந்த இ-பாஸ் முறை?

நமக்குப் புரியாத புதிராக உள்ளது!

கதவு முழுவதும் ஓட்டைகள் போட்ட பிறகு - கதவு எதற்கு? சிந்திக்கவேண்டாமா?

பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பணியை அகலப்படுத்தலாம்; ஆழப்படுத்தலாம்!

அவரவர் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பணியை அகலப் படுத்தலாம்; ஆழப்படுத்தலாம்.

கரோனா தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்; எச்சரிக்கையாக - முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுவோம் - வெல்லுவோம் என்பதுதான் இனி யதார்த்த நடைமுறையாக இருக்கவேண்டும்.

மதுக்கடைகளைத் திறந்து விடுவது சென்னையில் கரோனா தொற்று மேலும் வேகமாகப் பரவவே வழிவகுக்கும்!

எனவே, இதனை வெறும் வருவாய்க் கண் ணோட்டத்தில் மட்டும் தமிழக அரசு பார்க்காமல், மக்களின் உயிர்ப் பாதுகாப்பு முன்னுரிமை என்ற கண்ணோட்டத்திலும் அணுகுவது அதற்கும் நல்லது - நாட்டில் பொது அமைதி, பொது நலத்திற்கும் கூட முக்கியம்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதிடும் தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்காவிட்டால், அதுவே நாளை ஆட்சிக்கு எதிராக ‘பேருரு' (விஸ்வரூபம்) எடுப்பது உறுதி!

எனவே, செயத்தக்க செய்க; சரியான முடிவை, தயக்கமின்றி எடுத்து, சென்னையில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதித்திருக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்க! இ-பாஸ் முறையை அறவே ரத்து செய்க!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

18.8.2020