ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சீனாவின் முதலீடுகளும் இந்தியாவும்
August 19, 2020 • Viduthalai • தலையங்கம்

 இந்திய லடாக் எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் சீன வீரர்களின் தாக்குதலில் மரணமடைந்தனர். இதனை அடுத்து நாடு முழுவதும் கடுமையான சீன எதிர்ப்பு தோன்றிய நிலையில் மோடி சீனா குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

ஆனால் சீனாவின் மீதான நடவடிக்கை என்ற பெயரில் சில அலைப்பேசிச் செயலிகளைத் தடை செய்தார். இதனால் சீனாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. இது தெரிந்தே செய்த மோடியின் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் சீனாவின் முதலீடுகள் குறித்து நிதித் துறை சில தடைகளை விதித்திருப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. சீனாவின் முதலீடுகள் இந்தியாவில் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பது தற்போது வெளியாகியுள்ளது.

சீன-இந்தியா எல்லைப் பிரச்சினை கடுமையாக இருந்த காலத்திலேயே, சீன-இந்திய வங்கியான எச்.டி.எஃப்.சி.யின் பங்குகளை வாங்கியது. இது குறித்து இதுவரை நிதித்துறை அமைச்சரகமோ அல்லது வெளி யுறவுத் துறையோ கருத்துக் கூறாத நிலையில் தற்போது அய்.சி.அய்.சிஅய். வங்கியின் பங்குகளையும் சீனா வாங்கியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, சீனா தனது முதலீடுகளை அமெரிக்கா மற்றும் அய்ரோப்பா தவிர மற்ற மூன்றாம் உலக நாடுகளில் குவித்து வருகிறது. இந்திய எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சீனாவுக்கு எதிராக உள்நாட்டில் குரலெழுந் ததைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களில் சீனா முதலீடு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அய்.சி.அய்.சி.அய். வங்கி தனது மூலதனத்தை உயர்த்த ரூ. 15,000 கோடி நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. கடந்த வாரம் முடிவடைந்த இந்த நிதி திரட்டும் முயற்சியில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவன முதலீடுகள் பிரிவில் (Institutional Investors) உள்நாட்டு பரஸ்பர நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உல களாவிய நிறுவனங்கள் என 357 நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன.

பீப்பிள்ஸ் பாங்க் ஆஃப் சீனா ரூ. 15 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தடை தளர்த்தப்பட்டிருப்பதாகவும், இந்த முதலீடு சொற்ப அளவு என்பதாலும், இது அய்.சி.அய்.சி.அய். வங்கியின் செயல்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், 5 சதவீதம் அல்லது அதற்கு மேலான சீன முதலீடுகளுக்கு மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி அவசியம் என்றும் கூறினார்கள்.

மேலும், வங்கி நிறுவனத்தில் 15 சதவீதத்திற்கும் அதிக மான பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு மட் டுமே வாக்களிக்கும் உரிமை இருப்பதால், அய்.சி.அய். சி.அய். வங்கியில் சீன முதலீடு குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மோடியின் இரட்டை வேடம் இதிலும் வெளிப்படுகிறது. சீன-இந்தியா எல்லைப்பிரச்சினை உச்சத்தில் இருக்கும் போது பைசாவிற்குப் பயன்பெறாத அலைப்பேசி செயலி களைத் தடை செய்தார். இதனால் ஏதோ சீனாவிற்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று பா.ஜ.க.வினரால் பேசப்பட்டது மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது "சீனாவின் அலைப்பேசிச் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இனி சீனா இந்தியாவில் எங்கும் முதலீடுகள் செய்யாதவாறு அடுத்த நடவடிக்கை அமையும்" என்றார். ஆனால் அவர் அவ்வாறு சொல்லிக் கொண்டு இருந்தபோது தான் எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகளை சீனாவின் நிறுவனம் ஒன்று வாங்கிக் குவித்தது.

இந்த நிலையில் தற்போது அய்.சி.அய்.சி.அய். வங்கியின் பங்குகளையும் சீனா வாங்கியுள்ளது. இதற்கு வங்கி நிர்வாகமோ, குறைவாக வாங்கும் பங்குகளால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.  இதன்படி சீனா இந்தியாவில் முதலீடு செய்ய எந்தத் தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை என்பது உண்மையாகியுள்ளது. 

அப்படி என்றால் சீனா பற்றியும், அதிக முதலீடுகள் பற்றியும், இறக்குமதிகள் குறித்தும் பிரதமர் சொன்னது எல்லாம் என்னாயிற்று?

அதுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் முன்கூட்டியே கூறிவிட்டாரே - “சுதேசி" என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்று!

இவர்கள் என்ன சொன்னாலும் நாட்டு மக்கள் நம்பித் தொலைக்க வேண்டும் போலும்!