ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சிங்கப்பூர் - மலேயா மக்களிடையே தந்தை பெரியாரின் அறிவுரை:
October 9, 2020 • Viduthalai • கழகம்

இந்தியாவிற்குத் திரும்ப வரவேண்டும் என்ற ஆசையையே அழித்துவிடுங்கள்

சிங்கப்பூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவனின் 142 ஆம் பிறந்த நாள் விழாவில் காணொலியில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, அக்.9- சீனர்களுக்கு இணையாக வாழ நாட்டுக் குடிமை பெறுவதே இங்கு சிறப்பாக முடியும். குடியும், குடித்தனமுமாக நிரந்தரமாக நிலைப்பதே அறிவுடைமை என்று, பெரியார் சந்தேகத்திற்கு இடமின்றி அழுத்தந்திருத் தமாக சொன்னார். இந்தியாவிற்குத் திரும்ப வரவேண்டும் என்ற ஆசையையே அழித்துவிடுங்கள் என்று தந்தை பெரியார் அறிவுறுத்தினார் என்பதை எடுத்துக்காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 27.9.2020 இந்திய நேரப்படி காலை 8.30 மணியளவில்  சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அடித்தளமிட்டவர் தந்தை பெரியார்!

எனவே, இன்றைக்குச் சிங்கப்பூர் நாட்டில் பெருமை யோடு வாழ்கிறோம், குடிமக்களாக வாழ்கிறோம், சிறப்பாக வாழ்கிறோம் - தன்னார்வத்தோடும், தன்னிறைவோடும் வாழ்கிறோம் என்ற பெருமை இருக்கிறது என்றால், அந்தப் பெருமைக்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

அதனை செயல்படுத்தியவர்கள் பெரியார் பெருந் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள், சுயமரியாதைக்காரர்கள்.

அதனுடைய விளைவாகத்தான் நண்பர்களே, நன்றித் திருவிழாவாக - பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழாவினை, 1940 இல், 62 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தொடங்கி - 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வினை நடத்தக் கூடிய அளவிற்கு இன்றைக்குச் சிறப்பாக வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாருடைய பெருமைகள் என்பது இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல. பெரியாருடைய தாக்கம், அறிவியல் மனப்பான்மையாகும்.

அண்ணா அவர்கள் சொன்னார்!

இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால், அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, எந்தவொரு உலகப் புரட்சியாளரும், சீர்திருத்தவாதியும், எப்பேர்ப்பட்ட வர்களாக இருந்தாலும், தன்னுடைய கொள்கையினுடைய வெற்றியை - அது பூத்துக் காய்த்து, கனிந்ததை - நேரிலே அந்த சுவையை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்ற பெருமை ஒரே ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர்க ளையே சாரும்.

1929இல் முதன் முறையாக அன்னை நாகம்மையாரோடு சென்றார்; நாகம்மையார் இறந்ததற்குப் பிறகு இரண்டாவது முறை அன்னை மணியம்மையாரோடு சென்றார் (1955).

பெரியார் பேசுகிறார்!

அப்போதும்  மக்கள் மத்தியில், அதே அறிவுரையைச் சொன்னார்கள்.

"நீங்கள் கவனமாக இருங்கள்; வாழ்க்கையில் சம்பாதிப் பதை வீணாகச் செலவழித்துவிடாதீர்கள். ஆடம்பரம் வேண்டாம் - எளிமையாக வாழுங்கள் - சிக்கனமாக வாழுங்கள் - பகுத்தறிவோடு வாழுங்கள் - மூடநம்பிக்கை களுக்கு இடம் கொடுக்காதீர்கள். எங்கே மூடநம்பிக்கை இருக்கிறதோ, அங்கு தன்னம்பிக்கைக்கு ஆபத்து ஏற் படும். உங்களால் முடியும் என்று சொல்லுங்கள் - உங்களால் உயர முடியும் - உழைப்பின் வாரா உறுதி உளவோ  - வெறும் தலையெழுத்து என்று நம்பிக் கொண்டிருக்காதீர்கள் - மாற்ற முடியாதது என்று நினைக்காதீர்கள் - எல்லாவற் றையும் மாற்றலாம்" என்று தன்னம்பிக்கையை அவர்கள் உருவாக்கினார்கள். அதனுடைய விளைவுதான் நண்பர் களே, இன்றைக்குப் பல தலைமுறையினர் படித்து படித்து, ஏராளமான ஆசிரியர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் உருவானார்கள். ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்திருக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களுடைய பிள்ளைகள் அமைச்சர்களாக வந்திருக்கிறார்கள் என்ற வரலாறெல்லாம்கூட இந்த நாட்டில் உண்டு. மலாய் நாட்டிலும் சரி, சிங்கப்பூர் நாட்டிலும் சரி.

மானுடம் வளரவேண்டும் -

மானுடத்தில் பேதம் இருக்கக்கூடாது

எனவேதான், பெரியாருடைய தொலைநோக்கு என் பது இருக்கிறதே, மானுடத்தைப் பொருத்தது - மானுடத் தின் எதிர்காலத்தைப் பொருத்தது. மானுடம் வளரவேண் டும் - மானுடத்தில் பேதம் இருக்கக்கூடாது என்பது!

அதுமட்டுமல்ல, தன்னம்பிக்கையோடு அவர்கள் வளரவேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்தில், உங்களுக் கெல்லாம் தெளிவாகத் தெரியும்.

‘தமிழ்முரசு‘ நாளிதழின்

துணை ஆசிரியர் வை.திருநாவுக்கரசு

எப்படி தமிழவேள் சாரங்கபாணி அவர்கள், 'தமிழ் முரசு' பத்திரிகையின்  நிறுவன ஆசிரியராக இருந்து நடத்தினார்களோ, அதேபோல, இன்றைக்கும் 'தமிழ்முரசு' சிங்கப்பூர் தமிழர்கள் கைகளில் தவழுகிறது என்று சொன் னால், அதற்குக் காரணமாக அமைந்தவர், போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய அருமை நண்பர் வை.திரு நாவுக்கரசு அவர்களாவார்கள்.

அவர்கள் அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்து, பிறகு ஓய்வு பெற்ற நிலையில், 'தமிழ்முரசு' நாளிதழில் துணை ஆசிரியாக இருந்தவர். அவர் முன்பு துணையாசிரியராக இருந்தபோது தந்தை பெரியார் அவர்களுடைய சுற்றுப் பயணத்தைப்பற்றி எழுதுகின்ற நேரத்தில், ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

அந்தக் கருத்து எவ்வளவு ஆழமானதாக, பயனுள்ள தாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். பெரியார் பிறந்த நாள் விழாவினை - பெரியார் சமூக சேவை மன்றத்தினர் மட்டுமல்ல, எல்லோருமே கொண் டாடவேண்டும். யார் யாரெல்லாம் இந்த நாட்டிலே வாய்ப்புப் பெற்றார்களோ, அவர்கள் எல்லாம் நன்றி உணர்ச்சியை மறக்காமல் கொண்டாடவேண்டும் என்ப தற்கு அடையாளமாக ஒரு செய்தியை, நம்முடைய வை.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய கட்டுரையில் சிறப்பாக சொல்லியிருக்கிறார்.

இந்தியாவிற்குத் திரும்ப வரவேண்டும் என்ற ஆசையையே அழித்துவிடுங்கள்

''பெரியார், இங்கே வந்து நமக்கு அறிவுரை சொன்னார். சீனர்களுக்கு இணையாக வாழ நாட்டுக் குடிமை பெறு வதே இங்கு சிறப்பாக முடியும். குடியும், குடித்தனமுமாக நிரந்தரமாக நிலைப்பதே அறிவுடைமை என்று, பெரியார் சந்தேகத்திற்கு இடமின்றி அழுத்தந்திருத்தமாக சொன்னார்.

இந்தியாவிற்குத் திரும்ப வரவேண்டும் என்ற ஆசையையே அழித்துவிடுங்கள் என்று சொன்னார்.

இதுபோன்று ஒரு அறிவுரை சொன்ன தலைவரை வேறு எங்கும் பார்க்க முடியாது.

திக்குத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த தமிழர் பலருக்கு இதுதான் வழி என்று திட்டமாகச் சுட்டிக் காட்டினார் பெரியார்.

இதுதான் வழியென்று தெரிந்தும், மதில்மேல் பூனை யாக அமர்ந்திருந்த பலரை தங்கள் வழியைத் தீர்மானிக்கச் செய்தது பெரியாரின் பேச்சு.

தொண்டு செய்யும் திறனும், தலைமை ஏற்கும் தகுதி இருந்தும், தயங்கி, ஒதுங்கி நின்றோரை, அந்தத் தள்ளாத கிழவனின் உதாரணம் சிந்திக்க வைத்திருக்கிறது; தொண்டு செய்யும் ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது என்று சொன்னார்.

தனக்கென வாழா பிறருக்குரியராக மக்களை ஆக்கக் கூடிய அளவிற்கு.

இல்லறத்தையெல்லாம் விட தொண்டறம் மிக முக்கியம். எனவே, இல்லறத்தில் இருந்துகொண்டு தொண்டறத்தையும் செய்யுங்கள் என்றார்.

சந்ததியினரான அவர்களைப் படிக்க வைத்தார்கள்; வாழ வைத்தார்கள்; சிக்கனமாக வாழ வைத்தார்கள்; சேமிப்புப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். பேதத் தைக் காட்டாதீர்கள்; மனிதர்கள் எல்லோரும் சமம் என்று அறிவுரை கூறினார்" என்று அந்தக் கட்டுரையில் கூறுகிறார்.

பெண்களுக்கு சமத்துவம் என்பதற்காக மட்டும் போராடவில்லை தந்தை பெரியார்

இங்கே ஆசிரியை திருமதி லீலாராணி அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல,  பெண்களுக்கு சமத்துவம் என்பதற்காக மட்டும் போராடவில்லை தந்தை பெரியார். அதற்கடுத்த கட்டத்திற்கும் சென்றார்.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவம், உலகம் முழுவதும் பொருந்தக் கூடிய தத்துவமாகும். சமத்துவம் என்பது இருக்கிறதே, அது ஈக்குவாலிட்டி. அதற்கு அடுத்த கட்டம் - எம்பவர்மெண்ட் என்பதும் மிகவும் முக்கியம்.

சமத்துவத்தை (Equality) உருவாக்குவது மட்டுமல்ல, பெண்கள் சுதந்திரமாக இருக்கவேண்டுமானால், அவர்க ளுக்கு அதிகாரப் பங்களிப்பு (Empowerment) அளிக்க வேண்டும். அதிகாரப் பங்களிப்புக்கு அவர்களுக்குப் படிப்பு கொடுத்து, அவர்கள் முதல் படியை எட்டச் செய்தார். அதற்கடுத்து பெண்களின் சொத்துரிமைக்காகப் போராடினார்.

இங்கே அழகாக சொன்னார் ஆசிரியர் லீலாராணி அவர்கள், அவருடைய பெற்றோருக்கு அய்ந்தாவது பெண் என்று.  தமிழ்நாட்டில், தமிழ் மொழியிலேயே ஒரு பழமொழி  என்ன தெரியுமா? ''அய்ந்து பெண் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்'' என்று.

பெண்களுக்கு படிப்புரிமை, சொத்துரிமை

இரண்டும் இருந்துவிட்டால்...

பெரியாருடைய சிந்தனைக்கு முன்பாக, பெண்களைப் பற்றி பழமொழி உண்டு. எவ்வளவு பிற்போக்குத்தனமாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்; ஓரவஞ்சணையாக பாலின வேற்றுமை இருந்தது. நண்பர்களே நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி - பெண்களுக்கு சொத்துரிமை தேவை என்றார் தந்தை பெரியார். படிப்புரிமை, சொத்து ரிமை இரண்டும் இருந்துவிட்டால், பெண்களுக்கு அதி காரப் பங்களிப்பு, தானே வந்துவிடுகிறது அல்லவா?

நான் சுதந்திரமானவள்; என்னால் சொந்தக் காலில் நிற்க முடியும்; யாருடைய தயவிலும் நான் நிலைக்க வேண்டிய அவசியமில்லை. கணவனுக்கு, மனைவி அடி மையல்ல. நாங்கள் இருவரும் வாழ்விணையர்கள். நாங்கள் இருவரும் தோழமை கொண்டவர்கள். ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். இதுதான் பெரியாருடைய  சுயமரியாதைத் திருமணத்தினுடைய தத்துவமாகும்.

பெரியாரின் தத்துவத்தின்மீது ஏன் சிலருக்குக் கோபம் தெரியுமா?

‘அவர் பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கிறார்' என்று மேலெழுந்தவாரியாக பேசுகின்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பழைய இலக்கியத்திலே, தத்துவத்திலே, பழைய பண்பாட்டிலே திருமணம் என்ற சொல் கிடையாது. "கன்னிகாதானம் - தாராமுகூர்த்தம் - பாணிக்கிரகணம்" என்ற வடமொழிச் சொற்களில்தான் குறிக்கப்பட்டது. இது வெறும் மொழி வெறுப்பு மட்டும் இருக்கிறது என்று தயவு செய்து நினைக்காதீர்கள்.

ஏன் எதிர்த்தார் பெரியார்? தத்துவ ரீதியாகப் பார்த் தீர்களேயானால், "கன்னிகாதானம்" என்றால், தானம் கொடுத்துவிடுவது. ஒரு பெண்ணை தானமாகக் கொடுப் பது. பொருளை தானமாகக் கொடுக்கலாம்;  ஆனால், மனித ஜீவனை தானமாகக் கொடுத்தால், தானம் வாங்கி யவன் அதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத் தலாம்; அதை அவன் பயன்படுத்தலாம், பிறருக்குக் கொடுக்கலாம்; அடமானம் வைக்கலாம்; வேறு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

நண்பர்களாக இருங்கள்;

வாழ்விணையர்களாக இருங்கள்

பெண்ணை மனித ஜீவனாகக் கருதாமல், ஒரு பொரு ளாக (Chattel) அஃறிணையாக கருதக்கூடிய தத்துவம் அதில் இருக்கிறது. எனவேதான், மனிதநேயத்தை விரும் பிய மனிதாபிமானியான தந்தை பெரியார் அவர்கள் - மனிதம் என்று சொல்லுகின்ற நேரத்தில், அது ஆணுக்கும் சரி - பெண்ணுக்கும் சரி - சமவாய்ப்பு வரவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில், தெளிவாகத் தந்தை பெரியார் அவர்கள் வற்புறுத்தியது என்னவென்றால்,

நண்பர்களாக இருங்கள்; வாழ்விணையர்களாக இருங் கள் - அப்போதுதான் இரண்டு பேரும் மனிதர்கள். இதில் ஜாதிக்கு என்ன வேலை? மனங்களால் ஒன்றுபடவேண்டும். மற்ற குறுக்கீடுகள் தேவையில்லை என்று அவர் அழகாகச் சொன்னார்.

கன்னிகாதானம் என்று சொல்லும்பொழுது, அது ஒரு மொழிப் பிரச்சினை என்பது மட்டுமல்ல நண்பர்களே, அதைவிட மிகப்பெரிய கேடாக, அது வெறும் பொருள்; உயிரற்ற ஜடம் - சந்தையில் விற்கலாம் - அடமானம் போடலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆகும் போது, மனிதம் அங்கே மறைந்துவிடுகிறது - பொருளாக ஆக்கப்படுகிறது- உயர்திணையாக இருப்பது அஃறிணை யாக ஆக்கப்படுகிறது என்பதுதான் மிக முக்கியமான தத்துவமாகும்.

எனவேதான், அதைப் பெரியார் எதிர்த்தார். பெரியாரு டைய தத்துவம் என்பது ஆழமானது. மேலெழுந்தவாரி யாகப் பார்க்கக் கூடாது.

சம பலம் உள்ளவர்கள் போட்டியிட்டால்தான்,

அது சமப் போட்டி

சமத்துவம் என்று சொல்லுகின்ற நேரத்தில்கூட, இரண்டு பேரும் சம பலம் உள்ளவர்கள் போட்டியிட்டால்தான், அது சமப் போட்டியாகும். ஒருவர் நோஞ்சானாக இருந்து - மற்றவர் பலசாலியாக இருந்து இரண்டு பேரும் போட்டியிட்டால், அது சமப் போட்டியாகாது.

அதுபோல, பெண்ணை நீங்கள் வெறும் பலகீனமான பாலினம் என்று கருதாதீர்கள். பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால், அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வருவார்கள் என்று சொல்லி,

சமூகத்தில் யார் யார் ஒதுக்கப்பட்டவர்களோ, யார் யார் காலங்காலமாக அடக்கப்பட்டவர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் சுதந்திரம் கொடுத்தார்கள்.

‘பகுத்தறிவுப் பகலவன்' என்று தந்தை பெரியார் அவர்களை ஏன் நேசிக்கிறோம் - பெரியார் அவர்களுடைய மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது என்று இங்கே முன்பு பேசியவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் மொழி என்று சொன்னால், எதையும் பகுத்தறிவுக் கண்கொண்டு பெரியார் பார்த்தார். மக்களுக்கு சுலபமாகப் பயன்படக் கூடியதாகவும், எளிதாகவும் இருக்கவேண்டும்.

பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்!

மொழி என்பது, பயன்படக் கூடிய ஒன்று. அப்படி பயன்படக் கூடியது என்று சொன்னால், இந்த நாட்டில், இன்றைக்கு என்ன செய்யவேண்டும்? எழுத்துகள் சுருக்கப்படவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் ஏன் சொன்னார்?

பெரிய பெரிய மொழி அறிஞர்கள் எல்லாம் இல்லாத காலத்தில், அ.சி.சுப்பையா அவர்களிடம், வரி வடிவ ஆராய்ச்சியைப்பற்றி எழுதச் செய்து 'குடிஅரசு' ஏட்டில் வெளியிட்டார்கள். அதற்கு ஆயத்தப்படுத்தினார்கள்.

இங்கே திருமதி லீலாராணி அவர்கள் சுட்டிக்காட்டிய தைப்போல, தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை 1935 ஆம் ஆண்டிலேயே 'குடிஅரசு' இதழிலும், பிறகு 'விடுதலை' யிலும் கொண்டு வந்தார்கள்.

1978 இல் பெரியாருடைய நூற்றாண்டு பிறந்த நாள் விழாவினை எம்.ஜி.ஆர். அரசு தமிழகத்தில் கொண்டாடிய பொழுது, ''பெரியார் தமிழ் எழுத்து சீர்திருத்தம்'' என்று கொண்டு வந்தது, பெருமை மிகுந்த ஒன்றாகும். வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒன்றாகும்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை

வரவேற்ற நாடு சிங்கப்பூர்!

அதனை முதன்முறையாக, அப்படியே ஏற்றுக்கொண்டு பின்பற்றிய  ஒரு நாடு இருக்கிறது என்றால், தமிழர்களுக்கு அந்த எழுத்துச் சீர்திருத்தத்தைப் பயனுள்ள சீர்திருத்தம் என்று கருதி வரவேற்ற ஒரு நாடு இருக்கிறது என்றால், அது சிங்கப்பூராகும்.

அன்றைய அதிபர் போற்றுதலுக்குரிய நவீன சிங்கப்பூ ரின் தந்தை என்று போற்றப்படக்கூடிய லீகுவான் யூ அவர்கள் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தினார். அதன் காரணமாகத்தான், இன்றைக்குக் கணினியில் இவ்வளவு பெரிய வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

- தொடரும்