ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சமூக நீதியின் விளைச்சல் - தமிழினத்தின் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதா
July 17, 2020 • Viduthalai • தமிழகம்

சமூக நீதியின் விளைச்சல் - தமிழினத்தின் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதா?

தமிழகத் தலைவர்கள் கண்டனம்

கோவை, ஜூலை 17 கோவையில் தந்தைபெரியார் சிலை அவமதிப்புக்கு  தமிழகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தந்தை பெரியார் சிலையின்மீது காவிச் சாயத்தை ஊற்றி அவமதித்ததற்குக் கடுங் கண்டனம் தெரிவித்தும், விஷமிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகமெங் கும் கண்டனஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திராவிடர் கழகம், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியாரிய உணர்வாளர்கள் என கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் டுவிட் டர் பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது:

என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்!  சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வைகோ கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டள்ளதாவது

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி, சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடி துடித்துப்போனேன்.

நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதி கா ரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த அநியாயச் செயலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மைக் காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப் படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் - பார்

அவர்தாம் பெரியார்

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர் பெரியார்!

அய்க்கிய நாடுகள் நிறுவனத்தின் யுனெஸ்கோ மன்றம் அமைப்பு 27.6.1970 அன்று

புத்துலகச் சிற்பி என்றும், தொலைநோக்குச் சிந்தனையாளர்;

தென் கிழக்கு ஆசியாவின்; சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை;

மூடநம்பிக்கை, அறியாமை, அர்த்தமற்ற சம் பரதாயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி

என்றும் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது அளித்து, பெரியார் அவர்களை உலகத் தலைவராக உயர்த்தி வைத்தது.

1919 ஆம் ஆண்டிலேயே தாம் வகித்துவந்த பதவி களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டவர் பெரியார். உத்தமர் காந்தியடிகள் ஈரோட்டில் பெரி யாரின் மாளிகைக்கே வந்து தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறப்பும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கையான மது ஒழிப்புப் போராட்டத்திற்கு தனது மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியவர்களையும் இணைத்துக்கொண்டு போராடி, காந்தியாரின் பாராட்டுகளையும் பெற்றவர் பெரியார்.

காங்கிரஸ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் தந்தை பெரியார் அவர்கள் செய்திட்ட அரும்பணிகளின் காரணமாக தமிழ் மொழியும், தமிழ் மக்களும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரும் உன்னதமான நிலையை எட்ட முடிந்தது.

பெரியாரின் பெருமைகளை உணர்ந்துகொண்ட தனால்தான் இந்திய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்புச் செய்தது. தமிழக அரசையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கினார் அறிஞர் அண்ணா. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுமே பெரியாரால் பயிற்றுவிக் கப்பட்டவர்கள். பெரியாரின் புகழ் சிதறல்கள் என்று பெருமைபட பேசினார் அண்ணா.

சமூக நீதி, மதநல்லிணக்கம், பெண் உரிமை, மதச் சார்பற்ற தன்மை, சாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் ஆகிய முற்போக்குக் கொள்கைகளுக்கு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து, இந்தியத் துணைக் கண்டத் திற்கே தமிழகம் வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்பதற்குத் தந்தை பெரியார் அவர்களின் ஓய்வறியாத உழைப்புதான் காரணம் என்பதை அவரது எதிரிகளும் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு பல வகைகளிலும் பெருமையும், சிறப்பும், புகழும் கொண்ட தந்தை பெரியார் அவர் களின் சிலை தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப் படுகிறது என்பதை தமிழக அரசு இனியாவது உணர்ந்து தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். இனியும் இப்படிப்பட்ட வன்செயல்கள் நடைபெறாமல் தமிழக அரசு கடுமையான நடவ டிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், அனைத்துத் தலைவர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் ஆகி யவைகளை காப்பாற்றிடவும் பொறுப்புணர்ச்சியுடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சமூக விரோதிகளை கைது செய்க!

தோழர் இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு,

கோவை மாவட்டம், சுந்தராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக் கப்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் இருக்கும் தந்தை பெரியார் சிலைமீது சில சமூக விரோதிகள் இன்று (17.07.2020) அதிகாலை காவிச் சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர்.

பெரியார் சிலையை அவமதிப்பதன் மூலம் அவர் முன்னெடுத்த கொள்கை வழிப் பயணத்தை ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.

கொடிய கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். இந்த நோய் பெருந்தொற்றை மத்திய, மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வருவதில் படுதோல்வியை சந்தித்து வருகின்றன.

கடந்த நான்கு மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்க்கை பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலேயே சிலை அவமதிப்பு செயல் நடந்துள்ளது.

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது எதேச்சையானது அல்ல. மதவெறி, ஜாதி வெறிக் கும் பல்கள் மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கிக் கிடப்ப வர்கள் திட்டமிட்டு மேற்கொள்கிற தாக்குதலாகும்.

தந்தை பெரியார் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல, உலக அளவிலான சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடித் தலைவர் ஆவார். பகுத்தறிவு சமுதாயம் அவரது சிந்தனைகளை, செயல் அனுபவங்களை கைவிளக்காக பயன்படுத்தி இயங்கி வருகின்றது என்பதனை அறிவு சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கான முறையில் சுந்தராபுரம் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்க

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், வன்முறையைத் தூண்டும் நோக்கத்தோடும் கோவையில் பெரியார் சிலை மீது காவிச் சாயத்தை ஊற்றி  அவமதித் துள்ளனர். அந்த சனாதனப் பயங்கரவாதிகளைப் பயங்கர வாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கோவை பகுதியில் கடந்த பல மாதங்களாகவே மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும்,  சமூகப் பதற்றத்தை  உண்டுபண்ணும் நோக்கத்தோடும் தொடர்ந்து சனாதனப் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த மே மாதத்தில் இந்து வழிபாட்டுத் தலங்களின் முன்பு பன்றி மாமிசத்தை வீசி சிறுபான்மையினருக்கு எதிராகக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்த ஹரி என்ற ராம்பிரகாஷ் என்பவர் பிடிபட்டார்.   ஆனால் அவர் எந்த மத அமைப்பையும் சேர்ந்தவரல்ல என போலிஸ் நற்சான்றிதழ் வழங்கி அவருக்குப் பின்னால் இருந்த சனாதனப் பயங்கரவாத அமைப்பைக் காப்பாற்றிவிட்டது. அத்தகையோர்மீது  கடுமையாக நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. அதனால் ஊக்கம் பெற்ற சனாதன பயங்கரவாதக் கும்பல் இப்பொழுது தந்தை பெரியார் சிலையை அவமதித்துள்ளது. திருக்குறளைப் படிக்கச் சொன்னதற்காக அவசர அவசரமாக பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர்,  இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட  சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தலைநிமிர்ந்து வாழ வழி வகுத்த தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து இதுவரை வாய் திறக்காதது வியப்பும் வேதனையும் அளிக்கிறது. பாஜக காரர்கள் புகார் சொன்னால் பாய்ந்து சென்று நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, பெரியார் சிலையை அவமதித்தவர்களை இதுவரைக் கண்டு பிடித்து கைது செய்யாதது காவல்துறையின்மீதும் காவி சாயம் ஊற்றப்பட்டிருக்கிறதோ என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்சினையில் வழக்கம்போல அலட்சி யமும் அமைதியும் காக்காமல் உடனடியாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளைப் பயங்கரவாதிகளாகக் கருதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

கோழைகளின் செயல்

தோழர் கே.பாலகிருஷ்ணன்

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் காவிச் சாயம்  ஊற்றி சென்றுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது வன் மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.  கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கோழைகள் தான்  இக்காரியத்தை செய் வார்கள். மதவெறி சக்திகளும். சங்பரிவார் போன்ற அமைப்புகளும் இத்தகைய பிற்போக்குத்தனமான காரியத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன.

பெரியார் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க.வின் எச்.ராஜா  பேசியது, பெரியார் சிந்தனைகள் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருப் பதன் நீட்சியும் தொடர்ச்சியுமே இந்த இழிசெயல்.

கருத்துக்களை கருத்துக்களால் மோத வேண்டுமே தவிர, இத்தகைய இழி செயல்கள் மூலம் பெரியாரின் கருத்துக்களை மறைத்துவிட முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.

இதற்கு காரணமானவர்களை காவல்துறை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

சுயமரியாதை வேண்டாமா?

கனிமொழி எம்.பி.

தி.மு.க. மக்களவைக் குழுத் துணைத்தலைவரும், மக ளிரணிச் செயலாளருமான கனிமொழியும் இந்த சம்ப வத்தைக் கண்டித்து டூவிட் டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலை களை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

மான உணர்வும், சுயமரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதைப் பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியைக் கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நச்சுக்கிருமிகள்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவிச் சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக் கத்தக்கது. இதற்குக் காரண மான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும்!

தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது  என்றால், அவரது கொள் கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுரு வியுள்ள  நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை  அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்!

கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத  கரோனாவை விட மோசமான இந்த நச்சுக் கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்;  சமுதாயத்தில் நஞ்சைப் பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும்  தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!  கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும்,  சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும்!

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

சமூகநீதி எதிர்ப்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில், திருட் டுத்தனமாகக் காவிச் சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி  வன்மையாகக் கண்டிக்கிறது. இன்று தமிழகத்தில் ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறியிருக்கிறார்கள் என்றால் அதற்கு தந்தை பெரியாரின் சமூக நீதிக் கான அறப்போராட்டமே வித்தாக விருட்சமாக அமைந்திருந்தது. தமிழகத்தின் முன்னேற்றம் தந்தை பெரியாரின் கடும் உழைப்பின் விளைவாக உருவாகிய திராவிட கட்சி களின் ஆட்சியால் உருவாக்கப் பட்டது. சமூக நீதியின் கொள்கையால் சாமானிய மக்கள் முன்னேற் றம் அடைந்ததை விரும்பாத வர்கள் தான் பெரியாரின் எதிரிகளாக இருக்கிறார்கள் என்பது எதார்த்தமான உண் மையாகும். சமீப காலமாகத் தமிழகத்தில்  தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.  பெரியார் சிலைகளை இழிவு படுத்துபவர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் கூறி கடந்த காலங்களில் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப விட்டதின் விளை வாகவே தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெரியார் சிலையை இழிவுபடுத்தும் செயல் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த தொடர் வஞ்சகச் செயலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இச்செயலில் ஈடுபட்டுள்ள கயவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பெரியாரின் அரும் பெரும் தொண்டினால் விளைந்த சமூக நீதி கொள்கைக்கு விரோதமானவர்களின் இந்த இழிச் செயலை தீர விசாரித்து அவர்களை முழுமை யாக அடையாளம் கண்டு கடுமையாகத் தண்டிப்பது தான் அதிமுக அரசுக்கு, பெரியாரின் பெயரைச் சொல்லுவதற்குத் தகுதியான அரசு என்ற நிலையை ஏற்படுத்தும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சமூக அமைதியைச் சீர்குலைப்பதா?

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் டூவிட்டரில் குறிப்பிட் டுள்ளதாவது,

கோவை  சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித் திருப்பது  கடும் கண்டனத்திற் குரியது.

மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம் சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.