ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சமூக ஊடகங்களில் சமூகநீதிக்கான நன்றிப் பெருக்கு!
August 8, 2020 • Viduthalai • மற்றவை

அடுத்த தலைமுறைக்குமான ஆசிரியர் வீரமணி!

அன்புள்ள தம்பிக்கு,

WhatsAppல் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைத் திட்டியிருந்த சங்கி வீடியோவை நீ forwardசெய்திருந்ததைப் பார்த்தேன்.

நாம் ஊரில் இருந்த வரை, நீ பெரிதாக அரசியல் பேசிப் பார்த்ததில்லை. என் அப்பா தி.மு.க. என்றால், உன் அப்பா அ.தி.மு.க. ஆனால் நீ எப்படி ஒரு சங்கி ஆதரவாளராக மாறினாய் என்று அறிய விரும்புகிறேன். உன்னைப் போன்ற எண்ணற்ற தம்பிகள், வெளிநாடுகளில் இருக்கும்போது பார்க்கும் தொடர் YouTube வீடியோக்களால் இந்த மாற்றமா? இல்லை மீடியாக்களால் ஏற்பட்ட பிம்பமா? என்று அறிய ஆவல். ஏனென்றால், தமிழகம் முழுவதும் இப்படி எண்ணற்ற தம்பிகள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இன்று தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மற்றும் பட்டியல் இனத்தவருக்கு மொத்தமாக 69% இட ஒதுக்கீடு அரசியல் சட்டப் பாதுகாப்போடு இருக்கிறது என்றால், அதற்கு ஆசிரியர் வீரமணி அவர்கள், மிக முக்கியமான காரணம்.

தமிழகத்தில் 30% இருந்த பிற்படுத்தப்பட்டோர் + மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான இட ஒதுக்கீட்டை 50% மாற்றியதில் திராவிடர் கழகத்தின் பங்கு மிக முக்கியமானது.

மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்பில், ஓ.பி.சி வகுப்பினருக்கு (பி.சி + எம்.பி.சி) 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தாமல், 20 ஆண்டுகாலமாக பரணில் போட்டுவைத்ததை எதிர்த்து, தொடர் போராட்டங்கள் & கருத்தரங்குகள் நடத்தி, வட இந்திய ஓ.பி.சி அரசியல்வாதிகளின் கவனத்தை இதன் பக்கம் திருப்பி, பின்னர் வி.பி. சிங் தலைமையில் திமுக ஆதரவோடு ஆட்சி அமைந்தபோது, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, ஓ.பி.சி பிரிவு மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதில் ஆசிரியர் வீரமணியின் பங்கு மிகப்பெரியது..

இப்படி பார்ப்பனிய சக்திகளின் ஏகபோகமாக விளங்கிய கல்வி வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் போராடி பெற்றுக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பார்ப்பனிய கும்பல், அவரை ஓசி சோறு என்றெல்லாம் சொல்லி இழிவு படுத்துகிறார்கள்.. ஆனால் அந்த இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறும் சாதிகளைச் சேர்ந்தவர்கள், இந்தச் சூழ்ச்சி புரியாமல் அவர்களோடு சேர்ந்து விமர்சிப்பது தவறு..

நாளை உன் குழந்தை, ஓரளவிற்குப் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தால், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பெரிய கல்லூரிகளில் பொறியியல் படிப்போ அல்லது மருத்துவக் கல்லூரிகளில் இடமோ கிடைக்க வாய்ப்பு இருக்க வேண்டுமென்றால் அல்லது அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால், அய்.ஏ.எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு போகவேண்டுமென்றால், அதற்கு இந்த இட ஒதுக்கீடுகள் கட்டாயம் தேவை! தேவை!

கிராமத்து மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக, கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து பிரச்சாரம், மாநாடு என்று இயங்கிக் கொண்டிருக்கிறார். புதிய கல்வி கொள்கை என்னும் சூழ்ச்சியின் மூலம், பி.சி., எம்.பி.சி. மற்றும் பட்டியல் பிரிவு உள்ளிட்ட பிராமணரல்லாத மாணவர்கள் தங்களின் குலத் தொழிலுக்குத் தள்ளப்படும் சூழ்நிலையைத் தடுக்க,  புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்.. நாளை உன் குழந்தைக்கும், மருத்துவக் கல்வியோ, அரசு வேலையோ கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்தனை ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டு வாழ்க்கையில், சங்கிகள் அனுப்பும் தொடர் WhatsApp புரளிகளைப் பார்த்து, ஆசிரியரின் மீது நீ வன்மத்தைக் கொட்டுவதைப் பார்க்கும்பொழுது, எனக்கு உண்மையில் பரிதாபமாக இருக்கிறது.

இந்த விளக்கம் கூட, நான் ஏதோ தி.மு.க.காரன், திராவிடக் கொள்கை ஆதரவாளன்! அதனால் நீ ஆசிரியரைத் திட்டுவதைப் பொறுக்காமல் எழுதவில்லை.

இது உன் மீதுள்ள அக்கறையில் எழுதுவது. நம் தாத்தாக்கள் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகள். அதற்குப் பிறகு, வாழ்நாள் கடின உழைப்பின் மூலம் சில ஏக்கர் நிலங்களையே வாங்கினார்கள். நம் தலைமுறையில்தான் முதல்முறை பட்டதாரிகளானோம். தமிழகத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகள் இருக்கின்றன. இருந்தும் நம் குடும்பத்திலோ, நம் உறவினர்களிலோ நம் தலைமுறைக்கு முன்பு ஒருவர் கூட பட்டப்படிப்பு படித்ததில்லை. நாமே முதல் படிக்கட்டில்தான் அடியெடுத்து வைக்கிறோம். நம் குழந்தைகள் காலத்திலாவது அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்.

அதற்கு நமக்கு நல்லது செய்வது யார், நமக்கு கெடுதல் செய்வது யார்  என்கிற அடிப்படை புரிதல் வேண்டும். நம் குழந்தைகளின் படிப்பைக் கெடுக்கிறான்! நம் வேலையைப் பறிக்கிறான்! என்று கோபப்பட்டால் அது நாம், நமக்காக, நம் குழந்தைகளுக்காகப் பேசுகிறோம் என்று பெருமைப்படலாம்.

நமக்காக, நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பாடுபடும் இயக்கங்களின்  மீது, தலைவர்களின் மீது வன்மத்தைக்  காட்டுவதின் மூலம், நீ, உன் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது மண்ணை அள்ளிப்போடுகிறாய்.

திராவிடர் கழகம், எனக்கு பணம் தரப்போவதில்லை, நான் ஆசிரியர் வீரமணி அவர்களை ஒருமுறை கூட நேரில் பார்த்தில்லை.

உன்னை எனக்குப் பிறந்ததில் இருந்தே தெரியும். அவருக்காக உன்னிடம் சண்டை போடவில்லை.

நம் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்திற்காக, புரியவைக்க முயற்சிக்கிறேன்.

- கார்த்திக் ராமசாமி (பேஸ்புக்-கில்)