ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சமூகநீதி என்பதில் - நீதிமன்றங்கள் விலக்காக இருக்க முடியாது!
July 24, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான  போதிய நீதிபதிகள் இடம்பெற

அங்கும் இட ஒதுக்கீடு முறை அவசியம் தேவையே!

நாடாளுமன்றத்தில் இந்த வகையில் சமூகநீதிக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

தனது நீதித் துறை பணியில் சாதனை படைத்து உச்சநீதிமன்ற   நீதிபதியாக ஓய்வு பெற்ற பானுமதி அவர்களுக்குப் பாராட்டு  - வாழ்த்து!

மக்களாட்சி, ஜனநாயகம் என்பது மக்களின் பிரதிநிதிகள் - அனைவருக்கும் அனைத்தும் என்ற தத்துவத்தின் செயல் பாடாக அமையவேண்டும்; அந்த வகையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங் குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் அனைவருக்கும் உரிய பிரதி நிதித்துவம் அளிக்கப்படுவதே உண்மையான சமூக நீதியும், ஜனநாயகமும் ஆகும். இந்த நிலை உருவாக நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் தேவையே! இதற்கான உரிமைக் குரலை நாடாளுமன்றத்தில் உறுப்பி னர்கள் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மக்களாட்சி - ஜனநாயகம் என்பது மக்களின் பிரதிநிதிகள் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்ற தத்துவத்தின் செயல் பாடாகவே அமைதல் வேண்டும்.

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் பலமுறை குறிப்பிட் டுள்ளதுபோல, ‘‘அதிகாரம் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.'' (‘‘Power sharing is real Democracy'').

அவ்வகையில் மிக முக்கியமான அமைப்பாக ஆட்சியின் மூன்று அங்கங் களில் ஒன்றாக நீதிமன்றங்களும் உள்ளன.

சமூகநீதி கடைபிடிக்கப்படுவது

மிகவும் இன்றியமையாதது

அவற்றில் நாட்டின் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற அமைப்புகளில் சமூகநீதி கடைப் பிடிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

சமூகநீதிக்கே அரசமைப்புச்

சட்டம் முதலிடமும், முன்னுரிமையும் தந்துள்ளது.

நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்க ளின் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன் றங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள்பற்றிய வழக்குகளில் சரியான பார்வையோடு தீர்ப்பு வழங்கிட வேண்டிய மிக முக்கிய பொறுப்பான அமைப்புகளாக உயர்நீதி மன்றங்களும், உச்சநீதிமன்றமும் உள்ளன.

அதோடு, தேவைப்படின் முக்கிய ஆலோசனைகளை அரசுக்குத் தரும் உயர்ந்த இடத்திலும் உச்சநீதிமன்றம் உள்ளது.

இந்நிலையில், சமூகநீதி உணர்வுக்கு உண்மையான செயல்வடிவம் நீதித்துறை யிலும் கடைபிடித்தொழுகுவதன்மூலமே உண்மையான - அதிகாரப் பரவல் நிறைந்த ஜனநாயகக் குடியரசாக ஓர் ஆட்சி அமைய முடியும்.

பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை

நாட்டின் உயர்நீதிமன்றங்களில் பல வற்றிலும், உச்சநீதிமன்றத்திலும் ஒடுக்கப் பட்ட சமூக மக்களைச் சார்ந்த நீதிபதிகளை பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் காண்பது மிகவும் அரிதினும் அரிதாகவே  இன்று இருக்கிற கொடுமைக்குப் பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை.

பல உயர்நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.,  சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் நீதிபதிகளாக இல்லை. அது மட்டுமல்ல, பெண்கள் நீதிபதிகளாக வந் தால்கூட அவர்கள் முன்னேறிய, உயர் ஜாதிப் பெண்களாகவேதான் இருக்கிறார்கள் என்பதே யதார்த்த நடைமுறை!

உச்சநீதிமன்றத்தில் மிகவும் பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதியாக வந்து, ‘‘கொலிஜியம்'' என்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவான அய்வரில் ஒருவர் (மூத்த நீதிபதி) என்ற அளவுக்கு உயர்ந்தவர் மாண்பமை ஜஸ்டீஸ் ஆர்.பானுமதி அவர்களாவார்கள்!

வரலாற்றுச் சாதனை படைத்த

பெருமைக்குரியவர்

நீதித்துறையில் அவர் நுழைந்த பிறகு, மாவட்டங்களிலும் சரி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத்தில் அமர்ந்த நிலையிலும், ‘ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து' நீதி வழங்குவதில் அவர் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்த பெருமைக்குரியவர் ஆவார்!

எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத் தாலும்கூட, அதில் சென்று கலந்து கொள் ளாமல், தனது நீதித்துறைப் பணிகளில்  மட்டுமே கவனம் செலுத்தித் தனி முத்திரை பதித்தவர்.

அவர் பதவிக் காலத்தில் வழங்கிய பல தீர்ப்புகள் சமூகக் கண்ணோட்டமும், சட்ட இணைப்பும் சரியாக இணைந்து வழங்கப் பட்ட சரித்திரப் புகழ்வாய்ந்த தீர்ப்புகளே! அவர் பதவிப் பொறுப்புகளில் இருந்தபோது, எதிர்நீச்சலுடன்தான் ஒவ்வொரு கட்டத் தையும் தாண்டி, உச்சநீதிமன்ற நீதிபதியாகி ‘தன் கடன் பணி செய்வதே' என்ற தத்துவத்தின் உருவமாகக் கடமையாற்றி உயர்ந்துள்ளார்!

மக்கள் வாழ்த்துகள், என்றும் அவருக்கு உண்டு!

சமூகநீதிக்குரிய

அடையாளமாக...

அவர் ஓய்வு பெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் இருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நீதிபதியாக - சமூகநீதிக்குரிய அடையாளமாக (உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் - தற்போது நிரப் பப்பட்டது 32 - இவர் ஓய்வின்மூலம் தற் போது 31). ஒரே ஒருவர் தவிர, பிற்படுத்தப் பட்டவர் அங்கு நீதிபதியாக இல்லை என்ற நிலைதான் உள்ளது!

எஸ்.சி., சமூகத்தினைச் சார்ந்த நீதிபதி பல ஆண்டுகாலமாய் இல்லாமல் இருந்து, சில மாதங்களுக்குமுன் மும்பையைச் சேர்ந்த ஒருவர் நியமனமாகி கடமை யாற்றுகிறார்!

அதுபோல, சிறுபான்மைச் சமூகங் களைச் சேர்ந்த கிறித்துவர் ஒருவர்; இஸ்லாமியர் ஒருவர் என்ற அளவில்தான் சமூக அதிகாரப் பகிர்வு தத்துவம் அங்கே இருக்கும் நிலை உள்ளது!

எஞ்சிய 27 நீதிபதிகளும் உச்சநீதி மன்றத்தில் உயர்ஜாதி - முன்னேறிய வகுப்பினர்தான் என்ற நிலைதான் உள்ளது!

மேனாள் தலைமை நீதிபதியின் கருத்து!

மேனாள் தலைமை நீதிபதியான ஜஸ்டீஸ் கஜேந்திர கட்கர் ஒருமுறை கூறினார்:  ‘‘நீதிபதிகளும், வகுப்பு உணர்ச் சிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூக அமைப்பின் காரணமாக அப்படிப்பட்ட நிலை இருக்கவே செய்கிறது'' என்றார்.

உச்சநீதிமன்றம்தான் ஜனநாயகத்தி னைக் காக்கும் பலமான பாதுகாப்பு அரண். மக்களின் கடைசி நம்பிக்கை. அங்கே சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்க வேண்டாமா? சமூகநீதிப்படி அதிகாரப் பகிர்வு, அனைத்து மக்களுக்கும் அளிக்கப் படவேண்டாமா?

ஒடுக்கப்பட்ட மக்களின்

உரிமைக் குரலை

ஒலிக்கத் தவறக்கூடாது!

இதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர் களும், நாடாளுமன்றக் குழுக்களும், அவர்களின் உரிமைப் பாதுகாப்புக்கான தேசியக் கமிஷன்களும் முழு கவனஞ்செலுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை அங்கே ஒலிக்கத் தவறக்கூடாது!

அத்திபூத்ததுபோல் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தவர்கள் எண் ணிக்கை இப்படி குறைந்துவிட்ட நிலைதான் இப்போது. (தற்போது கருநாடகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூக நீதிபதியாக உள்ளார்).

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த  அனுபவமும், பணிமூப்பும் இருந்தும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மூத்த தலைமை நீதிபதி போன்ற வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்கள், இப்போதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்,  நியாயம் கிடைக்க வேண்டி செய்வது, சமூகநீதிக் கண் ணோட்டத்தில் மிக முக்கியம்!

மேலும், தகுதியுள்ளவர்களாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், தாழ்த் தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை சமூகத் தையும் சேர்ந்த நீதிபதிகளை மேலும் நியமித்து, உச்சநீதிமன்றத்தில் சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும். இது பெரும் பாலான மக்களின் நியாயமான கோரிக் கையாகும்!

கடமையை மறக்கவேண்டாம்!

சமூகநீதிக்கான இந்தக் குரலை அனைத்துக் கட்சிகளும், தலைவர்களும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங் களிலிருந்தும் குரல் கொடுக்க ஆயத்தமாக வேண்டிய முக்கிய தருணம் இது. கடமையைத் துறக்கவேண்டாம்!

 

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

24.7.2020