ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சமஸ்கிருதம் பேசுவோர் எத்தனைப் பேர்
August 8, 2020 • Viduthalai • தலையங்கம்

சமஸ்கிருதம் பேசுவோர் எத்தனைப் பேர்?

தேசிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் குறித்து வரிந்து வரிந்து எழுதித் தள்ளப்பட்டுள்ளதே - அதன்  மகாத்மியம் குறித்து கொட்டிக் கொட்டி அளக்கப்படுகிறதே!

ஆடலரசன் நடராஜப் பெருமான் உடுக்கின் ஓசையிலிருந்து ஜனனம் எடுத்ததாகவெல்லாம் பெரியவாள் முதல் குட்டிவாள்வரை கொட்டி முழக்குகிறார்களே அவர்களைப் பார்த்து ஒரே ஒரு சிறிய கேள்வி.

தெய்வத்தின் உடுக்கிலிருந்து உண்டான அந்தத் தெய்வமொழி செத்த மொழியானது ஏன்? பதில் சொல்லட்டும் பார்க்கலாம். (மொழியின் பிறப்பு என்பது இந்த வகையில் அமையும் என்று ஒரே ஒரு மொழியியல் அறிஞராவது ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்விக்கு விடை தேவை)

இன்னும் சொல்லப் போனால் அதனைச் சாக அடித்தவர்களே - இந்தப் பிர்மா முகத்துப் புத்திரர்களான பார்ப்பனர்கள்தானே0ஸ

இந்நாட்டின் பெரும்பாலான மக்களான ‘சூத்திரர்கள்’, ‘பஞ்சமர்கள்’ சமஸ்கிருதம் படிக்கக் கூடாது-படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; காதால் கேட்கக் கூடாது - கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். படித்து வைத்திருந்தால்- அவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று எழுதி வைத்ததோடு, அப்படியும் செய்து வந்த காரணத்தால்தானே சமஸ்கிருதம் குறிப்பிட்டவர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டும்-கல்யாணம், கருமாதி, கோயில்களின் காரியங்களுக்கு மட்டும் என சுருங்கிப் போய் விட்டது.

இந்த நிலையில் காலம் கடந்து ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் போடுவதால் யாருக்கு பயன்? விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைக்காத நிலைதானே!

நாடோடி மொழிகள் என்று கூறப்படும் அய்ந்து மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழிதானே சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்றால் பலதும் ஒன்று சேர்ந்து கலக்கப்பட்டது என்று பொருள். இதன் யோக்கியதை இதற்கு மேல் ஒன்றும் இல்லை. கடவுள் மொழி என்பது எல்லாம் பொய்க்கூற்றே!

இந்திய மொழிகளில் சமஸ்கிருதம் பேசுவோர் 24,829 பேர்கள்தான். இந்த எண்ணிக்கைக்கூட அன்றாடப் பேச்சு வழக்கில் புழக்கத்தில் கிடையாது.

தமிழை எடுத்துக் கொண்டால் எழுத்துப்பூர்வமாகவும், பேச்சுப் பூர்வமாகவும், தொடர்பு மொழியாகவும் விளங்குகிறது. பள்ளி, மொழிப் பயன்பாடு, கலந்துரையாடல், வீடு மற்றும் பொதுவிடத்தில் தமிழ்ப் பேசப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமல்ல, சிறீலங்கா, சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் பெரும்பான்மையாகவும், மொரீசியஸ், மாலத்தீவு, சீசல்ஸ் போன்ற தீவுகளிலும் பரவலாகவும், இந்தியத் துணைக் கண்டத்தில் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் அன்றாடப் பேசு மொழியாகவும் வளமுடன் வழங்கப்படுகிறது. உலகில் 12 கோடி மக்களால் பேசப்படும் மொழியாக தமிழ் ஒளிவீசுகிறது.

ஆனால், சமஸ்கிருதத்தின் நிலை என்ன? எழுத்துப்பூர்வமாகவோ, தொடர்பு மொழியாகவோ, ஆவணங்களில் பயன்படுத்தப்படும் மொழியாகவோ இவற்றில் இடம் பெறாத மொழிக்குப் பெயர்தானே சமஸ்கிருதம்.

கருநாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள பொங்கலஹில்லி ஊராட்சியில் உள்ள மட்டூர் என்ற குக்கிராமத்தில் பேசுகிறார்கள். 14 ஆயிரம் பேர் பேசுகிறார்கள். அங்கே எத்தனைப் பேர் வசிக்கிறார்கள்? 3,500பேர் மட்டுமே! 3,500 பேர் உள்ள ஊரில் எப்படி 14 ஆயிரம் பேர் பேச முடியும் என்று கேட்டால், பாதிபேர் உள்ளூரிலிருந்து வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். சரி, வெளியூர் சென்ற அவர்களாவது சமஸ்கிருதம் பேசுகிறார்களா? அதுதான் இல்லை.

வீட்டில் அவர்கள் படிக்கும் பத்திரிக்கைகள், பார்க்கும் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் எல்லாம் மற்ற மொழிகளில்தான். இந்தச் சூழ்நிலைகளில் எதை வைத்து சமஸ்கிருதம் தாய்மொழியாம்?

ஆசை வெட்கம் அறியாது என்பார்களே - அது இதுதான். இந்த சமஸ்கிருதத்துக்குத்தான் கோடிக்கணக்கான மக்கள் பணம் கொட்டிப் பாழாக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களில் ஆய்வுத் துறைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், படிப்போர் எத்தனை பேர் - பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

ஏதோ இலக்கிய வளம் கொட்டிக் கிடக்கிறதாம், விஞ்ஞான விளைச்சல் சக்கைப்போடு போடுகிறதாம்! அப்படி என்றால் சமஸ்கிருதம் படித்து அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனைகள் - சாதனங்கள் என்னென்ன? பட்டியலிட்டுச் சொல்லட்டும் பார்க்கலாம்.

வேதங்களும், உபநிஷத்துக்களும், இதிகாசங்களும், புராணங்களும் கொட்டிக் கிடக்கின்றன என்பது ஒப்புக் கொள்ளலாம். இவற்றால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்ன?

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது - வருணாசிரம தர்மம் பேணுவது, பெண்களை இழி பிறவிகளாக சித்தரிப்பது, ஒரு குலத்துக்கொரு நீதி பேசுவது என்னும் சமூக அநீதிக்கும், சமத்துவமின்மைக்கும் காரணக் காரியமாக இருப்பதைத் தவிர காதொடிந்த ஊசியளவுக்காகவாவது மக்களுக்குப் பயன்படக் கூடியதா?

“மதச்சண்டைக்கும், ஜாதி வேற்றுமைக் கலகங்கள் பல்குவதற்கும் ஒரு பெருங்கருவியாகவும் இருந்ததும், இருப்பதும் - சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இந்தப் போராட்டங்களும் தொலைந்துபோகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்” என்று தமிழ்க்கடல் மறைமலை அடிகள் குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது (‘தமிழர் மதம்‘ பக்கம் 24) சாலப் பொருத்தமாகும்.

பார்ப்பனர்களே, பதவி, அதிகாரம் கையில் இருக்கிறது என்ற காரணத்தால், மற்ற மொழிகளைப் புறந்தள்ளி செத்த மொழியைப் சிங்காரிக்கலாம் என்று நினைத்தால், அது பகற்கனவே!