ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சபாஷ் சரியான சண்டை!
October 17, 2020 • Viduthalai • தலையங்கம்

கரோனா பாதிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மகாராட்டிரா மாநிலம், கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பேருந்து, ரயில்  போக்குவரத்து உள்பட உள்ளிட்ட சில பொழுதுபோக்கு  தளர்வுகளையும் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளோடு  அனுமதித்துள்ளது. ஆனால் கோயில்களைத் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.  மாநில பாஜகவினர்   கோவில்களைத் திறக்கச்சொல்லி போராடிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் மாநிலத் தலைவர் போல செயல்பட்டு வரும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி 'இந்துவாக இருந்து கோயில்களைத் திறக்காமல் இருப்பது சரியல்ல' என்று மராட்டிய  முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் சித்திவினாயக் மந்திர் மற்றும் சீரடி சாய் கோயில் உள்ளிட்ட கோயில்களை மீண்டும் திறக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் தனக்கு சில உரிமைகள் உள்ளன; அந்த உரிமைகளின்படி கேள்வி கேட்கும் நிலையும் உண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்ட ஆளுநர் “நீங்கள் திடீரென்று மதச்சார்பற்றவராக மாறிவிட்டீர்களா,  இந்துவாக இருந்துகொண்டு கோவில்களைத் திறக்காமல் இருப்பது ஏன்?'' என்றும் ஆளுநர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

  அத்துடன்,  “மீண்டும் திறப்பதைத் தள்ளிவைக்க கடவுள் உங்களிடம் வந்து பேசியிருக்கிறாரா?" என்று கிண்டலடிக்கும் தொனியில் விமர்சித்த அவர், "பொழுது போக்கு நிலையங்களைத் திறக்க அரசாங்கம் அனுமதித்திருக்கும் நிலையில், மறுபுறம் நாங்கள் வணங்கும் தெய்வங்களும், அதற்கான  இடங்களும் மூடப்பட்டுள்ளனவே, இது முரண்பாடாக உள்ளது" என்றும் ஆளுநர் தமது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்தக் கடிதம், உத்தவ்தாக்கரேவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ஆளுநரின் கடிதத்துக்குப் பதில் தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே,   “எனது இந்துத்துவா  குறித்து, உங்கள் சரிபார்ப்பு தேவையில்லை, உங்களின் இந்துத்வா சான்றிதழ் எனக்குத் தேவையில்லை,   மதச்சார்பின்மை என்பது அரசமைப்பின் ஒரு முக்கிய அங்கம் என்பதை, மாநில ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபோது நீங்கள் சத்தியம் செய்தீர்கள்” என்று தாக்கரே கூறியுள்ளார்.

மகாராட்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து, மாநில அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியதற்காக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் கோவா மாநிலத்திற்கு ஆளுநராக உள்ள பி.எஸ்.கோஷ்யாரி, அங்கு கோவில்களை திறக்க ஏன் கடிதம் எழுதவில்லை எனக் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் கூறியதாவது: "மதசார்பின்மை விவகாரம் குறித்து ஆளுநர் கூறியிருக்கும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது சரியல்ல என நாங்கள் நினைக்கிறோம். ஆளுநர் கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பாரா?" என்று தெரிவித்துள்ளார்.

கரோனாவை கட்டுப்படுத்த உத்தவ் தாக்கரே அதிக கவனம் செலுத்துகிறார். கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு எடுக்கும் முயற்சிகளை ஆளுநர் பாராட்ட வேண்டும். கோவாவில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு ஏன் ஆளுநர் தலையிடவில்லை?

கோயிலைத் திறக்க வேண்டாம் என்று கடவுள் நேரில் வந்து சொன்னாரா என்று கேட்கும் ஆளுநரை நோக்கி ஒரு கேள்வியும் உண்டு; முதல் அமைச்சரிடம் கோவிலைத் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடவுள் வந்து கேட்டுக் கொண்டாரா? என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுள் என்றைக்குப் பேசி இருக்கிறார்? நல்ல தமாஷ்!

இந்துத்துவா கொள்கையை உடைய சிவசேனா கரோனா காலத்தில் கோயில்களைத் திறக்க தயங்குவதும் அல்லது மறுப்பதும், அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மையை  காப்பாற்ற வேண்டிய ஆளுநர்  இந்து மதவாதம் பேசுவதும் முரண் நகைதான்.

ஆனால் ஒன்று எந்த மதத்தாலும், எந்த கடவுளாலும் கரோனாவைத் தடுக்கவோ, ஒழிக்கவோ முடியவில்லை -  மாறாக - தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பதாகக் கூறும் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகரே கரோனாவால் மாண்டார் என்பதுதான் எதார்த்தம். மக்கள் புத்தி கொள் முதல் பெறுவதுதான் முக்கியம்.