ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சனாதனத்தின்மீது விழுந்த சவுக்கடி!
August 15, 2020 • Viduthalai • தலையங்கம்

இந்த வருட ஆகஸ்டு 15 - 'சுதந்திர நாள்' ஒரு முக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்புடன் வந்து சேர்ந்திருக்கிறது.

இந்துக் குடும்பத்தில் பாரம்பரிய சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புதான் அது. அதுவும் 1956 முன் தேதியிட்டு வந்து சேர்ந்துள்ளது - கூடுதல் சிறப்பாகும்.

செங்கற்பட்டில் 1929ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமையை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அதற்கு முதல் ஆண்டில் 1928இல் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டிலேயே அத்தகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.

அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசின் அமைச்சராக இருந்தபொழுது இந்துத் திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயற்சி செய்தார். அதில் பெண்களுக்குச் சொத்துரிமை என்பதும் அடக்கம்தான்.

ஆனால், சனாதனவாதிகளான ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் போட்ட முட்டுக்கட்டையின் காரணமாக பிரதமர் நேருவுக்கு மனமிருந்தும், அம்பேத்கர் முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுக்காத காரணத்தால், பதவி முக்கியமல்ல - கொள்கைதான் முக்கியம் என்று அமைச்சரவையிலிருந்து அண்ணல் அம்பேத்கர் வெளியேறியதையும் இந்த நேரத்தில் கட்டாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தத் தீர்ப்பு ஒரு வகையில் அண்ணல் அம்பேத்கருக்கும், தந்தை பெரியாருக்கும் சமர்ப்பணம் என்றே சொல்லப்பட வேண்டும்.

பாரம்பரியமான குடும்பச் சொத்தில் பெண்களுக்கு இடமில்லை என்ற நிலையை இடித்துக் காட்டிய உச்சநீதிமன்றம் இந்து சனாதன மதத்தின் கோட்பாட் டையும் குத்திக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மையைச் சொல்லப் போனால் -  உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்து சனாதன மதத்தின் மண்டையில் கொடுக்கப்பட்ட மரண அடியே என்பதில் அய்யமில்லை.

பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறும் கீதையை நார் நாராகக் கிழித்து எறிந்த தீர்ப்பு. பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் ஸ்திரீகள் இருக்க வேண்டியதல்லாமல், தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது என்று சொல்லும் மனுதர்மத்தை மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்தெறிந்த தீர்ப்பாகும்.

உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்தி போல் பார்ப்பன சனாதன சங்கிக் கூட்டம் பதுங்கிக் கிடக்கிறது.

யாராக இருந்தாலும் ஒன்றை இந்த நேரத்தில் எண்ணவும், உணரவும் வேண்டும். மதம் மக்களைப் பின்னோக்கி இழுக்கும் பிற்போக்குத்தனமானது. பகுத்தறிவும் சுயமரியாதையும்தான் முன்னேற்றப் பாதையில் முடுக்கி விடக் கூடியது என்பதைக் காலந்தாழ்ந்தாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.

இன்னும் பல தளங்களில் பெண்களுக்கான உரிமைகள் வந்து சேர்ந்தாக வேண்டும். கல்வி வேலை வாய்ப்புகளில் ஆண்களுக்கு நிகராக 50 விழுக்காடு இடம் கிடைத்தாக வேண்டும்.

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இடங்கள் என்பது 25 ஆண்டுகளாக ஊறுகாய் ஜாடியில் கிடக்கிறது. கட்சிகளைக் கடந்து இதில் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். இதற்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும். உள்ஒதுக்கீட்டுடன் கூடிய 33 விழுக்காடு இடஒதுக்கீடு முதற்கட்டமானது. அடுத்த கட்டம் அது 50 விழுக்காடாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இந்து ராஜ்யத்தை அமைக்கப் போகிறோம் என்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதை வரவேற்கிறோம்.