ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சட்டமன்றச் செய்திகள் - தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள் 'நீட்' ரத்து கோரி  ‘BAN NEET’ என்ற முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்
September 14, 2020 • Viduthalai • தமிழகம்

*  தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது

* பிரணாப்முகர்ஜி, ஜெ.அன்பழகன், எச். வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை, செப்.14 தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (14.9.2020) தொடங்கியதும் மறைவுற்ற மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்ளிட்ட மேலும் 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவைக் கூட்டம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவையின் கூட்டம் இன்று (14.9.2020) காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கின் மூன்றாம் மாடியில் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் ப. தனபால் அவர்கள் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கற் குறிப்புகள் வாசிக்கத் தொடங்கும் முன்பு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் இன்று இரங்கல் தீர்மானம் மட்டும்தான் என தெரிவித்தார்.

 பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 'நீட்' தேர்வை ரத்து செய் என்ற முகக்கவசம் அணிந்து வந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இரங்கல் குறிப்புகள்

இதையடுத்து பேரவைத் தலைவர் ப. தனபால் அவர்கள் சட்டமன்றப் பேரவையின் மறைவுற்ற முன்னாள் உறுப் பினர்கள் ஆர்.டி.கோபாலன், கு. லாரன்ஸ், ஜெமினி கே. ராமச்சந்திரன், கே.என். இலட்சுமணன், மு.ஜான் வின்சென்ட், ஜி.காளன், எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் (என்கிற) சுப்பிரமணியன், பூ. கிருஷ்ணன், ஆர்.சுந்தர்ராஜன், குழந்தை தமிழரசன், மு. அம்பிகாபதி, எஸ்.ராஜம்மாள், அ. அஸ்லம் பாஷா, பே. மாரிஅய்யா, வ. பாலகிருஷ்ணன், ஓ.எஸ். வேலுச்சாமி, அ.இரகுமான்கான், வ. சுப்பையா, கோ.நயினா முகம்மது, தொ.ப. சீனிவாசன், ரா.அய்யாச்சாமி, நா. சண்முகம், கே. தங்கவேல் ஆகியோர் குறித்த இரங்கற் குறிப்புகள் வாசித்தும், அவர்தம் குடும்பத்தாருக்கு இப் பேரவைச் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் விதமாக அனைத்து உறுப்பினர்களும் எழுத்து நின்று இரண்டு மணி துளிகள் அமைதி காக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படி அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

பிரணாப்முகர்ஜி, ஜெ. அன்பழகன், வசந்தகுமாருக்கு மரியாதை செலுத்தினர்

இதைத் தொடர்ந்து இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி, சட்டமன்றப் பேரவை (தி.மு.க.) உறுப்பினர்

ஜெ. அன்பழகன், நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர் எச்.வசந்தகுமார் ஆகியோர் மறைவு குறித்து பேரவைத் தலைவர் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார்.

மேலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டு மணி துளிகள் மரியாதை செலுத்தினர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணியில் பல்வேறு துறையினரின் சேவையை பாராட்டுக்குரியது என பேரவைத் தலைவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மறைவுற்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்துடன் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் கூட்டம் நாளை காலை தொடங்கும் என பேரவைத் தலைவர் ப. தனபால் அறிவித்தார்.

‘BAN NEET’ என முகக் கவசத்துடன் போராட்டம்

இதற்கிடையே, நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தற்கொலையானது தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் சுமார் 3 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்  ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்‘, ‘தமிழக மாணவர்களை காக்க வேண்டும்‘ என தெரிவித்து ‘BAN  NEET’  என்ற முகக்கவசமும் அணிந்து சட்டமன்ற கூட்ட தொடரில் பங்கேற்றனர். முன்னதாக, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்  ‘BAN  NEET’ என்ற முகக் கவசத்தை அணிந்து கலைவாணர் அரங்கிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.