ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கோயில் எனும் தொழில்
September 21, 2020 • Viduthalai • தலையங்கம்

"திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவில் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப்பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது.

நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி வரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. வேறு ஒரு பக்தரின் கனவில் அடுத்த பொருள் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்டபோது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி ஏற்பட்டு வெள்ளத்தால் ஏராளமானோர் மடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் ஏதாவது ஒருவகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, முத்தூர் வேலம்பாளையத்தை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 34) என்ற பக்தரின் கனவில் உத்தரவான நிறைநாழி படிஅரிசி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப் பட்டு வருகிறது. அப்போது, பக்தர்கள் தரப்பில் 'சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும். நிறைநாழி படிஅரிசி வைத்து பூஜிக்கப்படுவதால் விவசாயம் செழிக்கும். அதே சமயத்தில் சுப காரியங்கள் அதிகரிக்கும், விவசாயிகளுக்கு நிறைவானதாக இருக்கும்' என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.”

இப்படி ஒரு செய்தியை ஒரு நாளேடு கோவில் படத்தோடு பெரிய அளவில் வெளியிட்டுள்ளது.

கடவுள் உருவமற்றவர் - அரூபி - வேண்டுதல், வேண்டாமை என்ற நிலையில் உள்ளவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் தலபுராணம் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத வகையில் இப்படியெல்லாம் அள்ளி விடுகிறார்களே - இதற்காக உண்மையில் பக்தர்கள் தான் முதலில் வெட்கப்பட வேண்டும்.

கடவுளாம் - உத்தரவு பெட்டியாம். கடவுள் கனவில் தோன்று வாராம் - அவர் கூறும் பொருளைக் குறிப்பிட்ட இடத்தில் கோயிலுக்குள் கொண்டு போய் வைத்தால் அந்தப் பொருளைப் பொறுத்து நாட்டில் சில நிகழ்வுகள் நடக்குமாம்.

துப்பாக்கி வைத்துப் பூஜிக்கப்பட்ட போது கார்கில் யுத்தம் வந்ததாம். தண்ணீர் வைத்துப் பூஜிக்கப்பட்டபோது சுனாமி ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டதாம்.

நாட்டை அழிவு இல்லாமல் - நல்ல வகையில் காப்பாற்றிட கடவுளுக்கு நல்ல புத்தி கிடையாதா? யுத்தமும், சுனாமியும் வரும் என்று அந்த ஓர் கடவுளுக்குத் தெரிந்திருந்தால், அழிவைத் தடுத்திருந்தால் அதுதானே பூஜிக்கத்தக்க கடவுள்.

சுனாமியாலும், கார்கில் யுத்தத்தாலும் எத்தனை ஆயிரம் பேர் மாண்டனர் - மாண்டவர்களின் குடும்பத்தார் எவ்வளவுத் துன்பத்துக்கும், இழப்புக்கும் ஆளாகி இருப்பார்கள். இரக்கமுள்ள கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு இப்படி அழிவு வேலையில் ஈடுபடலாமா?

கடவுள் யார் கனவில் தோன்றினார்? அவரை அழைத்து விசாரணை நடத்தினார்களா? இப்படி ஆள் ஆளுக்கு கடவுள் என் கனவில் தோன்றினார் என்று கொட்டி அளக்க ஆரம்பித்தால், நிலைமை என்னாவது, சம்பந்தப்பட்ட ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அவர் கடவுளா? வெளியூர்களில் உள்ளவர்களின் கனவில் தோன்ற மாட்டாரா?

'பக்தி ஒரு வியாபாரம்' என்று சங்கராச்சாரியாரும், கிருபானந்தவாரியரும் சில நேரங்களில் உண்மைகளைச் சொல்லித் தொலைத்து விட்டார்கள்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே, அது என்ன செய்கிறது. இதுபோன்ற பொய்ப் புனைவுகளின்மீது விசாரணை நடத்த வேண்டாமா? பக்தி என்றால்  பரிகாசம் என்ற நிலையை பக்தர்களே உருவாக்குவது - பக்திக்கே அவமானம்தான்!

இப்படி செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கும் மக்கள் மீதான பொறுப்பு வேண்டாமா?