ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கொரோனா பாசிட்டிவ் என்ன செய்யலாம்
July 25, 2020 • Viduthalai • மற்றவை

கொரோனா பாசிட்டிவ் என்ன செய்யலாம்?

மருத்துவர் அரவிந்த ராஜ்

இதுவரை கொரோனா தொற்று நம்மைத் தாக்காமல் இருப்பது எப்படி என்பதையே பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நடைமுறையில், நமக்கு நன்கு பரிச்சயமான யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற நிலை உள்ளது.

இந்தப் பதிவின் நோக்கமும், அப்படியாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தே!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருமே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதில்லை என்று நாம் அறிவோம்.

Asymptomatic, Mild, Moderate, Severe  என்று நோயின் வீரியத்தைப் பொறுத்தும், அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் ஆணையின் பெயரிலும், அவர்கள் வீட்டில் இருத்தல் போதுமா அல்லது கொரோனா சிறப்பு முகாம்களுக்கு செல்ல வேண்டுமா அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும்.

ஒருவேளை வீட்டியிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டால், அவர்கள் செய்ய வேண்டியது என்ன?

1) கூடுமானவரையில் தனி அறையில் தங்கியிருங்கள். அந்த அறைக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம். தனிக் கழிப்பறையைப் பயன்படுத்துதல் மேலும் சிறப்பு. ஒருவேளை பொதுக் கழிப்பறை என்றால் ஒவ்வொரு முறை நீங்கள் உபயோகித்த பின்பும் நன்கு கிருமி நாசினி (Lysol போன்றவை) கொண்டு சுத்தம் செய்யவும்.

2) உங்களுக்கென தனித் தட்டு, டம்ளர் போன்றவற்றை பயன்படுத்தவும்.

3) வீட்டிலிருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் எக்காரணம் கொண்டும் செல்லக் கூடாது.

4) கொரோனா பாதித்தவர்கள் மெல்லிய அறிகுறிகளான லேசான காய்ச்சல் இருக்கும் பொழுது எக்காரணம் கொண்டும் கடுமையான வேலையோ அல்லது அதிகப் பளுத் தூக்குவது போன்ற செயல்களோ செய்யக் கூடாது. கொரோனா நோய்க்கிருமி நுரையீரலைத் தாக்கும். நாம் அதிக வேலை செய்கையில் நமக்கு ஆக்சிஜன் (O2) தேவை அதிகரிக்கும். அது நுரையீரலுக்கு அதிக வேலையைக் கொடுக்கும். ஆகவே நல்ல தூக்கமும், ஓய்வும் அவசியம்.

5) குப்புறப்படுத்துத் (Prone) தூங்குதல் நலம். அப்படியாகத் தூங்கும் பொழுது நுரையீரல் நன்கு விரிவடையும். இதை Prone Ventilation என்று கூறுவர்.

6) நல்ல புரதச் சத்துக் கொண்ட உணவை உட்கொள்ளவும். இவை நம்மை நோயிலிருந்து விரைவில் விடுபட உதவும். கஞ்சி, ரசம் என்ற சத்தற்ற உணவுகளைத் திணிக்க வேண்டாம். (மரக்கறி புரத உணவுகள் - சுண்டல், கொட்டை வகைகள், பாதாம்/ புலால் புரத உணவுகள் - இறைச்சி, முட்டை)

7) காய்ச்சல் ஏற்படும் பொழுது உடலில் நீரிழப்பு ஏற்படும். நன்கு நீர் பருகுங்கள். அதோடு உங்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளையும் தவறாமல் உட்கொள்ளுங்கள். சுய மருத்துவம் கூடாது.

8) கொரோனா பாதித்த இரண்டாம் வாரத்தில் தீவிர Pneumonia போன்ற நுரையீரல் தொற்று ஏற்படலாம். ஆகவே அந்தச் சமயத்தில் ஒருவேளை உங்களுக்கு மூச்சு வாங்குவதில் சிரமம் ஏற்பட்டால், நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மருத்துவனையைத் தொடர்பு கொள்ளவும்.

9) கொரோனா குறித்த செய்திகளைப் பார்ப்பதை தவிர்க்கவும். நல்ல இசை, திரைப்படம் போன்றவற்றைத் தனியே கண்டு மனஅமைதியைப் பேணவும்.

10) ஒருவேளை நீங்கள் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட வேண்டும்; முகாமிற்கு தான் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறினால், தயவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும். ஒரு வார காலத்தில் நீங்கள் நலம் பெற்று வீடு திரும்பி பழைய வாழ்வை மேற்கொள்ளலாம்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொரோனா பாதித்த நபரையும், அவரது குடும்பத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். அவரும் நம்மைப் போன்றவர் என்ற மனிதம் கொண்டு செயல்படுங்கள்.

சமூக ஒத்துழைப்பு இங்கு மிக அவசியம். தீண்டாமையைப் போன்ற கொடிய நோய் வேறொன்றுமில்லை!