ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கேரள முதல் அமைச்சரின் நியாயமான கோபம்
August 27, 2020 • Viduthalai • தலையங்கம்

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் உள்பட 3 விமான நிலையங்களைப் பொதுத்துறை - தனியார் கூட்டு முயற்சியில் குத்தகை விடும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை, பொதுத்துறை-தனியார் கூட்டு முயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய விமான நிலைய ஆணையம் நடத்திய ஏலத்தை கைப்பற்றியுள்ள, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த 3 விமான நிலையங்களைக் குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதானி நிறுவனத் தலைவர் கவுதம் அதானி பிரதமர் மோடியின் நண்பர் என்பதும், அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கெனவே பல துறைமுகங்களைக் கைப்பற்றி உள்ளதும் அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட இந்த 3 விமான நிலையங்கள், விமான நிலையச் சேவைத் தரத்திற்கான, பன்னாட்டு விமான நிலையங்கள் கவுன்சில் பட்டியலில் முதல்

5 இடங்களைத் தொடர்ந்து பிடித்து வந்துள்ளன. இந்த நிலையில், விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய விமான நிலைய ஆணையம், 14.12.2018 அன்று கருத்துரு வெளியிட்டது. பயணிகள் கட்டண அடிப்படையில் பன்னாட்டு ஏலப்போட்டி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, அது தொடர்பாக தொழில்நுட்ப ஏல விண்ணப்பங்கள் 16.2.2019- இல் திறக்கப்பட்டன. தகுதிபெற்ற போட்டியாளர்களின் நிதி விண்ணப்பங்கள் 25.2.2019/26.2.2019 தேதிகளில் திறக்கப்பட்டன. அதில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களுக்குமான அனைத்து ஏலப்போட்டிகளிலும் பயணிகள் கட்டண விகிதத்தின் அடிப்படையில் அதிகத் தொகை குறிப்பிட்டு வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மோடி அரசின் முடிவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார். அதில், திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். கடந்த 2003ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தை மீறும் வகையில் மத்திய அரசின் முடிவு இருக்கிறது. மாநில அரசுத் தரப்பின் வாதங்களைக் கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஒருதலைப்பட்சமானதாகும். கேரள மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவைச் செயல்படுத்தினால், மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும்.

எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநில முதல் அமைச்சரின் கடிதம் நியாயமான கோபத்தின் அடிப்படையில் சீறி எழுந்த ஒன்றாகும்.

சமூகநீதிக்கு எதிர்ப்பு, மதவாத அரசியல் என்பவை ஒரு பக்கம் இருக்க, மற்றொருபுறம் கார்ப்பரேட்டுகளின் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவது இந்நாட்டின் கில்லி விளையாடும் சிறுவர்களுக்கும் தெரிந்த ஒன்றே!

பிரதமர் ஆவதற்கு முன்பேகூட அதானியின் விமானத்தில் மூலம் பயணம் செய்துதான் தன் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வந்தவர் நரேந்திர மோடி என்பது எதைக் காட்டுகிறது? அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இவற்றையும் நோக்க வேண்டும்.

குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தைத் தனியாருக்கு வார்க்கும்போது- சம்பந்தப்பட்ட மாநில முதல் அமைச்சருடன் கலந்து பேசுவதில் என்ன கவுரவக் குறைச்சல்? இன்றைய பிரதமர் மோடி ஒரு கால கட்டத்தில் ஒரு மாநில முதல் அமைச்சர்தானே!

குஜராத் மாநில முதல் அமைச்சர் மோடியல்ல இப்பொழுதுள்ள பிரதமர் மோடி என்பதுகூட உண்மைதான்.

குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது 'நீட்டை' எதிர்த்தவர்தானே; அறிமுக நிலையில் ஜி.எஸ்.டி.யையும் கடுமையாக எதிர்த்தவர்தானே, அந்நிய முதலீடு குறித்தும்  எவ்வளவு காரசாரமாக பேசினார்? நாட்டை விலை பேசப்போகிறீர்களா என்று விளாசித் தள்ளவில்லையா? பிரதமர் ஆனவுடன் எல்லாம் தலை கீழாய் விட்டதா?

இதையெல்லாம் நாட்டு மக்கள் எங்கே நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று கருதுகிறார் போலும்.

சிறுகச் சிறுக சேரும் நஞ்சுபோல் ஒரு கட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.