ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கேரளமும் - தமிழகமும் ஒருங்கிணைந்து கடமையாற்றவேண்டும்!
August 8, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

கேரள மாநிலத்தில் இருபெரும் சோக நிகழ்வுகள்!

விமான விபத்திலும் - நிலச்சரிவிலும் மனித உயிர்கள் பலி!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

விபத்து, இயற்கைப் பேரிடர்கள் என்பவை எதிர்பாராதவை என் றாலும், மனித இதயங்களில் இரக்க மும், மனிதநேயமும் இயல்பாகவே, மொழி, இனம், நாடு எல்லை கடந்து மேலோங்குவது இயல்பான ஒன்று என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கேரளத்தில் நேற்று (7.8.2020) நடை பெற்ற இரண்டு பெரும் சோக நிகழ்வுகள் மிகுந்த துயரத்தையும், வேதனையையும் தரக்கூடியவையாகும்.

விமான விபத்து!

நேற்றிரவு 7.30 மணியளவில், துபாயி லிருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம், தரை யிறங்கும்போது இரண்டாக உடைந்தது; இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலியானார்கள்; நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட் டுள்ளனர்.

பயணிகள் அனைவரும் கரோனா தொற்று காரணமாக துபாயில் சிக்கிக் கொண்டு வர இயலாமல் தவித்த நிலை யில், அவர்களை மீட்பதற்காக அனுப்பப் பட்ட விமானம், அதுவும் தரையிறங் கும் நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியான விபத்து என்பது நெஞ்சை உலுக்கும் செய்தியாகும்.

விமானம் தரையிறங்கி, ஓடுபாதை யில் ஓடும்போது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டது.

பலத்த மழை பெய்த நிலையில், ஓடுபாதையில் சறுக்கிக் கொண்டு வேகமாக ஓடிய விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. மீட்புக் குழு விரைந்து தமது பணியின் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றியுள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்குப்

போதிய நிவாரணங்கள் தேவை!

நம்பிக்கையோடு தாயகம் திரும்பிய வர்களுக்கு இப்படி ஒரு கொடுமையா? என்ன செய்வது? எப்படி நிகழும், எப் போது நிகழும் என்று தெரியாததற்குப் பெயர்தான் ‘விபத்து' என்பதாகும்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வேண்டும். இறந்தவர்களின் குடும்பங் களுக்குப் போதிய நிவாரணங்கள் தேவை!

தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலி!

அதுபோலவே, நமது நெஞ்சங்களை உறைய வைக்கும் மற்றொரு துன்பச் செய்தி. அதேகேரளத்தில் மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 வீடுகள் இடிந்து நாசமாயின. அங்கு தூங்கிக் கொண்டிருந்த 22 தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலியா னது மிகப்பெரிய கொடுமை அல்லவா?

மூணாறிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலையை அடுத்த பெட்டிமூடி பஞ்சாயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக் கப்பட்ட தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இவர்கள். தூத்துக்குடி பகுதி யிலிருந்து இப்பகுதிக்கு வேலைக்குச் சென்ற தமிழர்களாக இவர்கள் இருக்கக் கூடும்!

மேலும் நிலச்சரிவில் சிக்கிய 42 பேரின் கதி என்ன என்பது தெரிய வில்லை.

மக்கள் நல அரசு

கேரள மாநிலம் தொடர்ந்து எத்த னையோ புயல், வெள்ளம், கரோனா மற்றும் இத்தகைய விபத்துகளைச் சந் தித்து வருவதும் - அதனைத் துணிவுடன் அவ்வரசு எதிர்கொண்டு ஒரு மக்கள் நல அரசாக நடந்துகொள்ளுவதும் ஆறுதல் அளிக்கத்தக்க நடவடிக்கையாகும்!

இயற்கைப் பேரிடர்கள் எதிர்பாரா தவை என்றாலும், மனித இதயங்களில் இரக்கமும், மனிதநேயமும் இயல்பாகவே, மொழி, இனம், நாடு எல்லை கடந்து மேலோங்குவது இயல்பான ஒன்று!

தமிழகமும் - கேரளமும் ஒருங்கிணைந்து

கடமையாற்ற வேண்டும்!

உயிர் இழந்த தமிழர்களின் குடும்பங் களுக்குத் தமிழ்நாடு அரசும் சரி, கேரள அரசும் சரி போதிய உதவிகள், நிவார ணம் தர ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு கடமையாற்ற வேண்டிய தருணம் இது!

மரணமடைந்த அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்! காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் விழைகிறோம்!

 

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

8.8.2020