ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கூட்டாட்சியின்மீது தாக்குதல் மம்தா கண்டனம்!
July 23, 2020 • Viduthalai • தலையங்கம்

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கியுள்ளது,  தனது முதல் தேர்தல் பரப்புரையின்போது பேசிய  முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.க.மீது விமர்சனங்களை வைத்துள்ளார். 

இந்தியா என்பது கூட்டாட்சியின்கீழ் உள்ள ஒரு நாடு ஆகும். இங்கு ஒரே தேசம், ஒரே கட்சி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் பா.ஜ.க.வின் நோக்கம் ஆபத்தை விளைவிக்கும். மேற்கு வங்க அரசு தொடர்ந்து மேற்கு வங்க மக்களால் ஆளப்படும் என்றும், வெளி மாநிலத்தவர்கள் அல்லது குஜராத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்படாது என்றும் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகவே கூறினார்.

மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2021-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. ஏற்கெனவே பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டது.

தமிழகத்தில் மறைமுகமாக ஊடகங்களை மிரட்டியும், ஜாதி அமைப்பு, மதவாத அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுத்தும், எதிர்க்கட்சிகளுக்குச் செல்லும் வாக்குகளை சிதறடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஆனாலும், அது பகற்கனவே! காரணம் இது பெரியார் மண்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தியாகிகள் தின கூட்டம் மேற்கு வங்கத்தில் நடைபெற்றபோது பேசிய மம்தா பானர்ஜி, இந்த மத்திய அரசு வங்காளத்தின் வளங்களை அபகரித்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும், மாநிலத்திற்கு நடந்த அநீதிக்காக பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த அவமானத்திற்கு நாங்கள் பழி தீர்ப்போம்! வெளியாட்கள் வங்காளத்தை ஆள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்கான காரணத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது எங்களுக்குத் தெரியும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதாக நினைக்க வேண்டாம். வங்காளம் ஒரு வங்காளியால் ஆளப்படும் என்று கூறினார்.

ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்தியப் பிரதேசத்தில் ஏற் பட்ட மாற்றங்களைக் குறிப்பிட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைச் சாடினார். பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் - மத்திய அரசின் முகவர்களையும், பண அதிகாரத்தையும் பயன்படுத்தி, எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கங்களை கவிழ்க்க முயற்சித்து சதித்திட்டம் தீட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க.  இதுவரை நாடு கண்டிராத மிகவும் அராஜகமான பாசிசக் கட்சி. கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நாடு மும்முரமாக இருக்கும்போது, மத்தியப் பிரதேசத்திற்குப் பிறகு ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கலைக்கும் முயற் சியில் பா.ஜ.க. இறங்குவதுதான் ஜனநாயகமா? என்ற வினாக் கணையை  ஏவினார் மம்தா.

பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கிய மம்தா பானர்ஜி, குஜராத் ஏன் அனைத்து மாநிலங்களையும் ஆட்சி செய்ய வேண்டும்? கூட்டாட்சி கட்டமைப்பின் தேவை என்ன? ஒரு தேசம், ஒரு கட்சி அமைப்பை உருவாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இந்துக்கள், முஸ்லிம்களிடையே கலவரத்தைத் தூண்ட பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றார். அகதி முதல் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வரை அனைவரும் எனக்குச் சமம். ஆனால், பா.ஜ.க.வோ வகுப்புவாதத்தையும், இந்து-முஸ்லீம் கலவரத்தையும் தூண்டும் வேலைகளில் இறங்கிவிட்டது என்று குறிப்பிட்டார்.

கோவிட்-19 மற்றும் ஆம்பன் புயலால் வங்காளத்தின் சில பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்க உதவி கிடைக்கும். கவலைப்பட வேண்டாம், அனைவருக்கும் நிவாரண நிதி கிடைக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம், 10 கோடி மக்களுக்கு ரேஷன் வழங்கப்படுகிறது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் ரேஷன் பெறுவார்கள் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.

ஜூலை 21, 1993 அன்று கொல்கத்தாவில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களின் நினைவாக இந்தக் கூட்டம் - வழக்கமாக கொல்கத்தாவின் மய்யப்பகுதியில் உள்ள எஸ்பிளனேடில் நடத்தப்படும். இருப்பினும், இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மம்தா பானர்ஜி தனது அலுவலகத்திலிருந்து காணொலிமூலம் சமூக ஊடகங்களில் மக்களிடம் உரையாற்றினார்.

பா.ஜ.க. குறிவைக்கும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இடதுசாரிகளும், காங்கிரசும் திரிணாமூல் காங்கிரசும் பொது எதிரியைக் கவனத்தில் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படுதல் அவசியமாகும்.