ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
குளியலறையில் பூதம் - டாக்டர் ஆப்ரகாம் கோவூர்
September 26, 2020 • Viduthalai • மற்றவை

பெற்றோரின் கண்மணியாய் விளங்கிய நூனியாவுக்கு வயது பன்னிரண்டு. அழகு, அறிவு. ஆரோக்கியம் நிரம்பியவள், உல்லா சமான பழக்கம்; மற்றச் சிறுமியருடன், விளையாட்டிலும் படிப்பிலும் தாராளம் களிப்புடன் ஆடிப்பாடிப் பிரபலமாய்த் திகழ்ந்தாள். வுல் ஃபென்தல் மகளிர் பள்ளி யில், அவள் தேர்வில் தோல்வியுறாமல், 35 மாணவியரில் 5 ஆம் இடம் பெற்றவளாய்க், கணிதம், உரையாற்றல் இவற்றில் முதலாம வளாய்ப் பயின்றவள். கொழும்பு, மெசஞ்சர் தெருவிலுள்ள அவள் இல்லம், 1964 ஜூலை 31 வரையில் மகிழ்ச்சியில் ததும் பியது.

அதன் பிறகு ஒரு பயங்கர மாறுதல் நூனியாவிடத்திலும் அவள் குடும்பத்தா ரிடமும் காணப்பட்டது. நூனியாவின் மகிழ்ச்சி மறைந்தது. கண்கள் பெரிதாகி, முன்னால் துருத்தியும், பனிபடர்ந்தது போலவும் காணப்பட்டன. பகல் மறைவதுதான் தாமதம்; அவள் உரக்கக் கூச்சலிட்டு, உடலை முறுக்கி வளைத்துப் போராடிடத் தொடங்குவாள்! பெற்றோரால் அவளைக் கட்டுப் படுத்த இயலவில்லை. பல முறை வீட்டை விட்டு ஓடிப்போக முயன்றாள். ஏன் கூச்சலிடுகிறாள் என்று கேட்டபோது, யாரோ தன்னைத் தாக்கு வதாக மட்டுமே கூற முடிந்தது, பயத்தினால் தொடர்பின்றிப் பேசினாள். சிலநேரம் தன்னை மறந்த பரவச நிலையில் ஆழ்வ தும், சில மாதம் முன்பு இறந்துபோன தன் உறவுப் பெண் ஒருத்தி போலப் பேசுவ துமாயிருந்து கடைசியாகக், களைப்பால் சக்தியிழந்து உறங்கிப் போவாள் !

இப்படியாக அவதிப்படும் பெண்மீது இரக்கங் கொண்டோரும், வேடிக்கை பாக்க வந்தவர்களும், வழக்கமாக ஆளுக்கொரு கருத்துச் சொல்வார் களல்லவா? அதன்படி முதலில் அனைவருக்கும் தோன்றுவது மந் திரம் செய்வது தானே! படித்தவர்களுங்கூட அப்படித்தான் பரிந்துரை (சிபாரிசு) செய் தனர்!  மூன்று வெவ்வேறு மந்திரவாதிகள் தருவிக்கப்பட்டனர்; எவ்விதப் பயனும் நூனியாவுக்கு ஏற்படாமல், முதலில் வெள் ளக்குருவி என்பவர் ஏதோ மந்திர உச் சாடனம் செய்து அப் பெண்ணின் தலையில் அய்ந்து முடிபோட்டு, ஒரு காவி துணியைத் திரித்து அவளது வலது மணிக்கட்டில் கட்டி, தன் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, கம்பி நீட்டினார். மறுநாளே நூனியா வழக்கம்போல் கஷ்டப்பட்டாள். அண்டை அயலார் பரிந்துரையில், மலாயா முஸ்லிம் ஒருவர் வந்து, கறுப்புக் கயிற்றில் 21 முடிச்சு களுடன் தாயத்தையும் கட்டி, கழுத்தில் அணிவித்துத் தன்காணிக்கை பெற்று நழு வினார். பெண் கதறுவதை நிறுத்திய பாடில்லை! மூன்றாமவர் கொழும்பைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர். இவர் கழுதைச் சாணத்தை நெருப்பிலிட்டுத் துர்க்கந்தப் புகை கிளப்பி, நூனியாவைத் திக்குமுக் காடச் செய்து, அராபியில் மந்திரம் ஓதி, பேயை விரட்டி விட்டதற்காகக் கூலி பெற்றுச் சென்றார் -  குணமடையவில்லை நோயாளி!

நூனியா தன் வீட்டுச் சமையல் அறைக்கு அருகேயுள்ள குளியலறைக்குப் பக்கமாகச் செல்லும்போதுதான், பயந்து-கூக்குரலிடுதல் அதிகமாகக் கண்டு, இட மாற்றம் செய்தால் நல்லதென நண்பரொரு வர் சொல்ல, அது ஓரளவு பயனளித்தது. ஆயினும் தன் வீடு திரும்பிடவே விழைந் தாள் நூனியா!

மும்முரமாகிவிட்டது துன்பம். திரும்ப வந்தபின், இறந்துபோன தன் உறவுப் பெண்ணின் பேய், தன்னோடு வந்துவிடு மாறு அழைப்பதாகப் புதிதாகச் சொன்னாள் நூனியா. பேய், பூதம் என்று சொன்னதால் மிகவும் அஞ்சிய பெற்றோர், அதிகச் சக்தி படைத்த மந்திரவாதிகளை நாடினார். இப்போதும், ஒருவர் பின் ஒருவராக மூவர் படையெடுத்தனர் பிரயோசனம் ஏதுமின்றி! கயிறு கட்டினார் ஒருவர். எலுமிச்சம்பழம் மந்திர பூசை வைத்தார் இன்னொருவர். மலையாள மாந்திரீகம், தாயத்து செய்து, அவளறியாமல் தலையணைக்கடியில் வைக்கச் சொன்னார். எதிலுமே நூனியா வுக்குக் குணம் காணவில்லை. எனவே, நீண்ட நாள்களாகவே இதெல்லாம் வேண் டாம் என்று சொல்லி வந்த படித்த நண்ப ரொருவர், மனநோய்தான் இது அதனால் டாக்டர் கோவூரைப் பாருங்கள் என்றாராம்.

ஓர் ஆங்கிலச் செய்தித்தாளின் துணை யாசிரியர் திரு.எம்.எம்.கவுஃபிக் அவர் களின் அறிமுகக் கடிதத்துடன், நூனியாவின் தந்தை அகமது, சிறிய தந்தை அமீது இருவரும் என்னிடம் வந்து நடந்தவை அனைத்தையும் நவின்றனர். 24-8-1964 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு அப் பெண்ணை அழைத்து வரச் சொன்னேன், மூன்று மகளிரும் இரு சிறுவர்களும் நூனியாக அழைத்து வந்தனர். நூனியா தன்னினைவற்ற நிலையில் இரு பெண் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டாள் என் இல்லத்துக்கு.

உடன் வந்தோரை அமரச் சொல்லி: நூனியாவை மட்டும் என் துணைவியார், மேலே நோயாளரைக் கவனிக்கும் அறைக்கு அழைத்தார். முதலில் தயங்கினாள். கொஞ்சம் அன்புடன் தாஜா செய்து அழைக்கவே, நூனியா என் துணைவியாரைப்பின் தொடர்ந்தாள்.. மேலே படுக்கையில்   ஓய்வாகப் படுக்கச் செய்து முதல் வேலை யாக, அவள் கைகள் - கழுத்தில் கட்டப் பட்டிருந்த ஆறுபேரின் மந்திர மாயக் கயிறுகள் - தாயத்துகளை  கத்தரிக்கோலால் நறுக்கி எறிந்தேன் வெளியே!

செயற்கை முறையால் ஏற்படுத்திய மயக்க நிலையில் அவளுடைய உள்ளு ணர்வுகளுக்கு அரை விழிப்பு உண்டாக்கி, அவளை மனம் விட்டுப் பேசச் செய்தேன். அவள் பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்ட செய்தி விவரம்: - ஜாரினா என்று தன் ஒன்று விட்ட தங்கையிடம் வற்றாத பாசங் கொண்டவள் நூனியா. 14-5-1964 அன்று முழுநாளும் இரு தோழிகளும் எல்லையற்ற, மகிழ்ச்சியுடன் ஒன்றாக விளையாடிக் களிப்பில் மூழ்கியி ருந்தனர். மாலையில் ஜாரினா தனக்குப் பொறுக்க வொண்ணாத தலைவலி என்று துடித்தாள். குடும்ப மருத்துவர் ஆலோசனையில், நரம்பியல் நிபுணர் இருவர் பரிசோதித்து, மூளையில் கட்டி என்று கூறி, உடனடியாகப் பொது மருத்துவமனையில் சேர்த்து, வெற் றிகரமாக அறுவை சிகிச்சையும் முடித்தனர். ஆயினும் மருத்துவ வல்லுநர்கள் நினைத்த வாறே, அந்த ஜாரினா இரு நாள் மயங்கிய நிலையில் கிடந்து, மாண்டுபோனாள் 18-4-1964 அன்று!

ஜாரினாவின் அகால மரணம் எல்லா உறவினர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியது எனினும், உயிர்த்தோழியான நூனியா மிக வும் அதிர்ச்சியுற்றாள். ஜாரினாவின் உடலை வெண்துகிலால் போர்த்தி, முகத்தை மூடாமல், வீட்டுக்குக் கொண்டு வந்து, புதை குழிக்கு எடுத்தேகு முன், இரகசியமாகத் தான் மட்டும், பார்த்துவிட்டாள் நூனியா. மற்றவர்கள் காலப்போக்கில் மறந்தாலும், நூனியாவும் சகோதரர்களும் ஜாரினா வுடன் விளையாடி மகிழ்ந்ததை மறக்க இயலவில்லை, நூனியாவால்!

15-7-1964 அன்று நள்ளிரவு, நல்ல உறக்கத்தில் நூனியாவின் தம்பி நயினா திடுக்கிட்டு விழித்து, ஜாரினாவின் பேய் வீட்டு மூலையில் நிற்பதாக அலறினான். அவன் தாய் விளக்கேற்றிப் பார்க்க, கொடி யில் தொங்கிக் கொண்டிருந்த பெண்கள ணியும் உள்ளாடை அங்கிதான் அந்தப் பூதம் என்று புரிந்துவிட்டது. மறுநாள் பகலில் இதுபற்றிப் பேசி கேலியாக நகைத் தனர் எல்லாரும். ஆனால் நானியா மட்டும் சோகத்தில் மூழ்கிவிட்டாள். 31-7-1964 அன்று நள்ளிரவில் குளியலறைக்குச் சென்ற போது, வெள்ளைத் துணியால் உடலைப் போர்த்திய ஜாரினாவின் பேயைக்கண்டு, அலறியவாறே, வெளியே ஓடினாள். தனியே அதன் பிறகு அவளால் தூங்க முடியவில்லை. தூங்கினாலும் ஜாரினாவின் பூதம் வந்து தன்னுடன் வருமாறு அழைப் பதாகவும், மறுத்தால் தாக்குவதாகவும் அரற்றினாள்! அதிலிருந்து, வீட்டுக்குள் எங்காவது இருண்ட மூலைமுடுக்குகள் கண்ணில் தென்பட்டால், அங்கெல்லாம் ஜாரினாவின் முகம் அடிக்கடி காணப்பட்டது இதுதான் அவள் சொன்ன கதை.  இம் மாதிரி பேய், பூதம், பிசாசு, அடவி என ஒன்றுமே கிடையாது என நான் பலவகை மருத்துவ, மனோதத்துவ, செயல் விளக்க உபாயங் களால் அவள் உள்ளுணர்வில் நன்றாக உறைக்கச் செய்தேன். அவள் தன் அரை மயக்க நிலையினின்று விடுபட்டு, விழிப் புற்றுப், புன்னகையுடன் எழுந்தாள். பிறகு குதூகலத்துடன் படிகளில் இறங்கித் தன் பெற்றோரை நாடி ஓடினாள். 24 நாள்களாகக் காணப்பெறாத களிப்பை மகளிடம் காண வும், மட்டிலா மகிழ்வுற்றனர் உற்றாரும் பெற்றோரும். என்னைத் தங்கள் வீட்டிற்கு ஒரு நாள் அழைத்தாள் நூனியா. கனத்த, சோகமான நெஞ்சத்தோடு வந்தவர்கள் இலேசான மகிழ்வான மனத்துடன் திரும் பினர் அனைவரும்.

ஒரு மாதம் கழித்து நூனியாவின் வேண் டுகோளை நிறைவேற்ற அவளில்லம் சென்றோம், என் துணைவியாரும் நானும். பள்ளிக்குச் சொல்லியனுப்பியதும் துள்ளிக் குதித்தோடி வந்தாள் நூனியா, பத்தே நிமி டங்களில், ஒரு மணிநேரம் மகிழ்ச்சி நிலவிய அக் குடும்பத்தாருடன் அளவளாவி, மீண் டோம்; கள்ளமறியா ஓர் இளம் பெண்ணின் வாழ்வில் புத்தொளி நிலவிட உதவினோம் என்ற மனநிறைவுடனும் (திருப்தியுடனும்) நம்பிக்கையுடனும்!

வீட்டிலுள்ள பெற்றோரின் அறியாமை யால், சிறுவர்களுக்குப் பேய் பூதம் பிசாசு ஆவி முதலிய கதைகளைச் சொல்கிறார்கள். குழந்தைகள் அவற்றைக் கதைகளாக எண் ணாமல், உண்மை என நம்பிவிடுகிறார்கள். மனித உடலுக்கு அப்பால் வெளியில் இருந்துகொண்டு உயிர் தனியே வாழ்வது இயலாது, என்ற விஞ்ஞான மெய்ம்மை களைக் குழந்தைகள் பால் புகட்டியிருந்தால், நூனியாவுக்கு இந்தத் தொந்தரவே வந்தி ருக்காதல்லவா? அவளது மூளையில் மூட நம்பிக்கைக் கதைகளை ஏற்றி நிரப்பி விட்டதால், மூளைச் சலவை செய்யப்பட்ட அப்பெண், அதே சிந்தனையால், தன் மனத்தில் நிறைந்திருந்த ஜாரினாவின் முகத்தை மறக்க முடியாமல், தன் தம்பி கண்ட வெள்ளைச் சட்டைப் பேய்க்கதை யையும் இணைத்து, ஜாரினாவின் ஆவி, தன்னை அழைப்பதாக அடிப்பதாகக் கற் பித்துக்கொண்டு, பயந்து கதறித்துடித்தாள்! ஆவியே இல்லையென அடித்துச்சொல்லி விளக்கி, அவள் மூளையில் படிந்திருந்த துருவை அகற்றியதும், துல்லியமாய் உண்மை விளங்கிடவும், அவள் பறை மனநிலை பெற்று மகிழ்வுடன் வாழ்கிறாள்.

நூற்றுக்கு அய்ம்பது மனநோயாளிகள், அறியாமை நம்பிக்கை மடத்தனமாய்ச் சொல்லி வரும் பெற்றோர்களால் தான், ஆசிரியர்களால்தான், புரோகிதர்களால் தான், இப்படி மாறுகிறார்கள் என்பது மறுக்க வொண்ணாத என் புள்ளிவிவரக் கணக் காகும் எனத் துணிவுடன் உரைப்பேன்.