ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காவி - புனித சின்னமா
July 28, 2020 • Viduthalai • தலையங்கம்

காவி - புனித சின்னமா?

புதுவை மாநிலம் வில்லியனூரில் மேனாள் முதல் அமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டு அணிவித்ததுபற்றி சர்ச்சை வெடித்துக் கிளம்பியது. பா.ஜ.க.வைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டனக் குரலைக் கடுமையாக உயர்த்தின.

தொடர்ந்து இது போன்ற அநாகரிக இழி செயல்களைக் காவிக் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியிலும் நல்ல அளவுக்கு வாங்கிக் கட்டிக் கொண்ட போதிலும், அதைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் துடைத்துக் கொண்டு போகிறது; மறுபடியும் மறுபடியும், "முதலையும் மூடனும் கொண்டது விடான்" என்ற பழ மொழிக்கேற்ப செயல்பட்டு வருகிறது.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தால், அவன் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனநோயாளி என்று காவல்துறை தயாராக ஒரு பதிலைத் தன் கைப்பையில் வைத்துக் கொண்டு இருக்கிறது.

திரிபுராவில் பி.ஜே.பி. வெற்றி பெற்றது என்றவுடன் அங்கிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை இந்தக் கும்பல் உடைத்தது. அப்பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்த அகில இந்திய பிஜேபியின் தேசிய செயலாளர் ஒருவர் அடுத்து

ஈ.வெ.ரா. சிலையையும் உடைப்போம் என்றாரே - அவர்மீது காவல் துறை என்ன செய்தது - செல்லம் கொஞ்சியது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அந்தத் தைரியத்தில்தான் பல இடங்களிலும் தந்தை பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டன.

இப்பொழுது பா.ஜ.க.வுக்குக் கூட்டணிக் கட்சியாக அதிமுக இருந்தாலும், அதனைப்பற்றியெல்லாம் சிறிதும் கணக்கில் கொள்ளாமல், அ.தி.மு.க.தான் அடிபணிந்து கிடக்கிறதே என்ற Ôஉரிமை'யின் பெயரில் புதுச்சேரியில் காவியை அணிவித்து உள்ளனர்.

இந்த விடயத்திலாவது தமிழக முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சரும் கண்டித்துள்ளனர்.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய கோவையைச் சேர்ந்த ஒருவர், பா.ஜ.க. அரட்டைக் கச்சேரிக்காரர் ஒருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு Ôபா.ஜ.க. நாட்டில் நடமாட முடியாது ஜாக்கிரதை!' என்று எச்சரித்தார்.

கொள்கை அளவில் அ.தி.மு.க.தான் எங்களுக்கு நெருக்க மானது என்று பி.ஜே.பி.யின் தலைவர்கள் சொன்னதுண்டு.

உடல்நலம் பாதிக்கப்பட்ட கடைசிக் காலத்தில் பலகீனமாகி - மூகாம்பிகை பக்தரானார் எம்.ஜி.ஆர். என்று சொல்லப்பட்டா லும், எந்தக் கட்டத்திலும் நெற்றியில் மதச் சின்னங்களை அணிந்து கொண்டவர் இல்லை - திரைப்படங்களில்கூட அந்த வகையில் எம்.ஜி.ஆர். தோன்றியதும் கிடையாது.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் முதலமைச்சராக அவர் கலந்து கொண்டபோது - Ôமருத்துவத்தால் குணமாகாத நோய்களை அய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கி விடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப்பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு, டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு, பாமர மக்களைக் கெடுத்து விடக் கூடாது' என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசியதை எடுத்துக்காட்டி திருவாளர் சோ. ராமசாமி Ôஒரு முதல் அமைச்சர் இப்படிப் பேசலாமா?' என்று கண்டித்து எழுதியதுண்டு. (துக்ளக் 1.2.1979).

இந்த வரலாறு எல்லாம் கை நிறைய வண்ண வண்ணக் கயிறுகளைக் கட்டிக் கொண்டும், நெற்றி நிறைய திருநீற்றையும், குங்குமத்தையும் அப்பிக் கொண்டும் இருக்கும் அதிமுக அமைச்சர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

இந்த வகையில் அதிமுக பலகீனப்பட்டதால் காவிக்காரர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவி போர்த்தும் அளவுக்கு திமிர்பிடித்து திரிகிறார்கள்.

இதைப்பற்றி விவாதம் நடக்கும்போது பிஜேபியைச் சேர்ந்த அரட்டை ஆசாமி அந்தச் செயலைக் கண்டிக்காமல் காவி - புனிதமானது. அதை எம்.ஜி.ஆர். சிலைக்கு அணிவித்ததில் என்ன தவறு? என்று பேசி - அதிமுகவைச் சேர்ந்தவரிடம் நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டார்.

காவி புனிதமானதாம் - மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட காவிதான் கட்டிக் கொண்டார் - அவரை வைத்தே காவி Ôபுனிதத்தின்' யோக்கியதையை எடை போட்டு விடலாமே!

1992இல் ஒரு பட்டப்பகலில் காவி வேட்டிச் சாமியார்கள் அயோத்தியில் 450ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான் மையினரின் வழிபாட்டுத் தலத்தை இடித்து நொறுக்கியபோதே, காவியா - காலியா? என்பது ஊருக்கும், உலகுக்கும் நிர்வாணமாகவே தெரிந்ததே!

பட்டப் பகலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசரைக் கொலைசெய்ய முயன்றவர்கள் யார் யார்? பூரி சங்கராச்சாரியார் உட்பட காவி வேட்டி சாமியார்கள்தானே!

ஆமாம். காவி புனிதமானது நம்பித் தொலையுங்கள். ஒரே ஓர் எழுத்துப் பிழைதான் Ôவி'க்குப் பதிலாக Ôலி'தான்!