ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காவிகளின் ‘கூடா ஒழுக்கம்!'
July 23, 2020 • Viduthalai • மற்றவை

‘‘ஊசி  மிளகாய்''

நம் நாட்டில் முற்றும் அனுபவிக்கும் அய்டெக் சாமியார்களுக்குப்   பஞ்சமே இல்லை!  வடநாட்டு சிறைச்சாலைகள் - திகார் சிறைச்சாலை போன்றவற்றில் - ஏராளமான சாமியார்கள் பல ஆண்டுகள் தண்டனை பெற்று, சிறைக்குள்ளேயே ‘‘தவயோகம், ஞானயோகம், கர்மயோகம்'' எல்லாம் நடத்துகின்றனர்!

பல ஆசிரமங்களில் கருத்தடை மருத்துவ மனைகளேகூட இருந்ததை பல தொலைக் காட்சிகள் மக்களுக்குக் காட்டி, அவர்கள் ‘ஹடயோகம்' தினம் தினம்  எப்படியெல்லாம் ஆத்மார்த்த பூஜைகளை செய்து, உலக க்ஷேமத்தை வரவழைத்தனர் என்பதைத் துல்லியமாகக் காட்டின!

நம் நாட்டில்  காவி அணிந்து - தத்துவார்த்த உபதேசம் செய்யும் பாபாக்களுக்குப் பஞ்சமே இல்லை.

‘‘2000 ஆண்டுகளாக இமயமலை குகை யில் உயிருடன் இன்னமும் வாழும் பாபாக் களிடம் அடிக்கடி சென்று அருளுபதேசம் பெறுகிறேன்'' என்று கூறும் பக்த சிகாமணி களும் உண்டு!

‘‘நம்பினால் நடராஜர் -

நம்பாவிட்டால் எமராஜர்''

என்றவுடன், பயம் காரணமாக பய-பக்தி தானே வந்துவிடுகிறது!

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் களைக் குவித்துக் கொண்டுள்ள ‘கார்ப்பரேட் பாபாக்கள்' - ‘சுவாமிஜிகள்‘, ‘மஹராஜ்' களுக்கு நாட்டில் பஞ்சமே இல்லை!

ஆனால்,  இவர்கள் எவராலும் கரோனா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்து விரட்ட முடியவில்லை. அதற்கு ஆக்ஸ் ஃபோர்டுதான் தேவைப்படுகிறது.

விஞ்ஞானத்திடம்தான் கடைசியில் சனா தனத்தின் சரணாகதி - பரவாயில்லை, நல்ல முடிவுதான்.

இவ்வளவு சாமியார்கள் யோக -

யாகங்கள் செய்தும் நாட்டில்  - உலகத்தில் நாளும் கரோனா தொற்று பெருகி பலி எண்ணிக் கையும் கூடுகிறதே!

ஒருவேளை ‘ஆத்மா' அழிவதில்லை; அதற்கு மரணமில்லை என்று பாபாக்கள் சொல்லுவதைக் கேட்டு,  நாம் ஆறுதல் கொள்ளுவதைத் தவிர வேறு வழி இல்லை போலும்!

‘கூடா ஒழுக்கம்' என்ற தலைப்பில் ‘அறம்' என்ற முதற்பகுதியில், திருவள்ளுவர் 273 ஆவது திருக்குறள்மூலம் தெரிவித்த  அறி வுரை நினைவூட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.''                                                                                                 (குறள் 273).

இதன் பொருள் என்ன தெரியுமா?

‘‘மனதைத் தன் வழிப்படுத்தும் வல்லமை இல்லான், தானே வலிந்து மேற்கொள்ளும் துறவுக் கோலமானது - பசுவானது புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்று ஏமாற்றும் தன்மையை ஒப்பதாகும்!''

ஆம்! அந்த போலிச் சாமியார்களுக்குப் புத்தியில் படாதது- பசு புல்லை மேய்வது இயல்பு. ஆனால், புலி புல்லை மேயுமா என்று எவரும் எளிதில் கண்டறிந்து கொள் வார்களே என்ற சிந்தனைகூட உதிக் காததுதான்!

வள்ளுவர் வாக்குதான் எவ்வளவு அறிவு - அனுபவப்பூர்வமானது பார்த்தீர்களா?