ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காலம் கருதி தமிழர் தலைவர் கொடுத்த அறிக்கை
October 28, 2020 • Viduthalai • தலையங்கம்

மத்திய பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியின் அணுகுமுறை பச்சையாகப் பார்ப்பனத் தனத்துடன் - எவ்வித அய்யப்பாடுகளுக்கும் இடமின்றி இருந்து வருவதை நாடு கண்டு கொண்டுதான் இருக்கிறது.

மாநிலங்களிலிருந்து மத்திய அரசின் பொதுத் தொகுப்புக்கு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் அளிக்கப்பட்டும், சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய 50 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்க முடியாது  - கொடுக்கவே முடியாது என்று முரண்டு பிடித்து ஒற்றைக் காலில் நிற்பதைக் கண் கூடாகப் பார்த்த பிறகும் மத்திய பா.ஜ.க.வின் மனப்பான்மை எத்தகையது என்பதை ஆராய்ச்சி செய்துதான் கண்டுபிடிக்க வேண்டுமா?

ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கு 15 விழுக்காடு இடங்களை மாநில அரசுகள் அளித்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு அளிக்கும் இடங்கள் 502. தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் 251. ஆனால் மத்திய அரசின் முரட்டுத்தனமான முடிவின்படியும், 'மத்திய அரசு சொன்னால் அதற்கு அப்பீல் இல்லை' என்ற மனப்பான்மையுடைய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் நம் மாநிலத்திற்குக் கிடைத்துள்ள இடங்கள் வெறும் பூஜ்ஜியமே. அதுபோலவே மருத்துவக் கல்வி முதுநிலைப் பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு இடங்கள் மத்திய அரசின் பொதுத் தொகுப்புக்கு அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு தாரை வார்த்த இடங்கள் 880. இதில் பிற்படுத்தப்பட்டவருக்கு சட்டப்படி 50 விழுக்காடு என்ற அளவுகோலில் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் 440. அதிலும் நமக்குக் கிடைத்திருப்பது பூஜ்யமே.

மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய அரசு தொகுப்பிலிருந்து அளிக்கப்பட்டாலும் சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் 18 விழுக்காடு; ஆனாலும் அதிலும் ஏமாற்றும் சூழ்ச்சியாக வெறும் 15 விழுக்காடு இடங்கள்தான் அளிக்கப்படுகின்றன.

'நீட்' கொண்டு வரப்பட்ட 2016ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மட்டுமல்ல - அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வளவுக்கும் இந்திய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கு மேல் இருந்தும், அவர்களை மத்திய பா.ஜ.க. அரசால் வஞ்சிக்கப்பட முடிகிறது என்றால் அது எப்படி? பிற்படுத்தப்பட்ட மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்று மத்திய பா.ஜ.க. அரசு கருதுகிறதா? அப்படி என்றால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு - இந்தியா முழுவதும் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் 'விழிப்புணர்வு' - எரிமலை வெடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டதா இல்லையா!

இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் குழுவின் பரிந்துரை 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. அகில இந்திய அளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எடுத்த வருணிக்கவே முடியாத கடும் முயற்சியாலும் (42 மாநாடுகள் 16 போராட்டங்கள்), வாராது வந்த மாமணியாக வந்துதித்த வி.பி. சிங் அவர்களின் சமூகநீதி சிந்தனையாலும்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது (7.8.1990).

அரும் பெரும் சமூகநீதி ஆணையைப் பிறப்பித்து கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்த அந்த வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் யார்?

இன்றைக்குச் சமூகநீதிக்குக் கடும் பகைமையோடு  காய் நகர்த்திக் கொண்டு இருக்கக் கூடிய பா.ஜ.க.தான் என்பது நினைவில் இருக்கட்டும். வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியில் இருந்து கொடுத்த ஆதரவை இந்தக் காரணத்துக்காகக் திரும்பப் பெற்று, ஆட்சியைக் கவிழ்த்த காரியத்தைச் செய்தது இதே பா.ஜ.க.தான்.

சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 50 விழுக்காடு இடங்களை அளிக்காமல் சட்ட விரோதமாக மத்திய அரசு செயல்படுவது எப்படி? அதற்கு உச்சநீதிமன்றம் துணை போவது எப்படி?

மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியா (MCI) அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று உறுதியாக சொல்லியிருந்தும் - இப்பொழுது அதற்கு நேர் எதிராக செயல்படுவது எப்படி?

இதே உச்சநீதிமன்றம் - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கும் 27 விழுக்காடு இடங்களையாவது இவ்வாண்டு கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்த உச்சநீதிமன்றம் நேற்றைக்கு முதல் நாள் (26.10.2020) தீர்ப்பில் அதனை வசதியாக மறந்தது ஏன்? என்ற வினாவும் எழத்தான் செய்கிறது.

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கடந்த 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட கருத்துதான் மிக மிக முக்கிய மானது என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.

நடப்பது பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா கட்சிதான் - பார்ப்பனர்க்கான ஆட்சிதான். இந்த நிலையில் இந்தியா முழுவதும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் தொடங்கப்பட்டாக வேண்டும்.

இந்து - இந்து அல்லாதார் என்று திசை திருப்பி பார்ப்பன ஆதிக்கத்தை  சத்துணவு போட்டு வளர்க்கும் பா.ஜ.க.வை - வீழ்த்துவதற்கான உயிர்க்கரு இங்கேதான் மய்யம் கொண்டுள்ளது; இதைக் குறி வைத்து வீழ்த்தினாலன்றி சமூகநீதிக்கு வாய்ப்பு அறவே கிடையாது.

'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?' என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் 'குடிஅரசு' இதழில் (29.12.1933) எழுதினார். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

சமூகநீதி - நிலை நிறுத்தப்பட பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் அகில இந்திய அளவில் தொடங்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.