ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காரணம் பெரியார் - காரியம் காமராசர்
July 16, 2020 • Viduthalai • கழகம்

திராவிடச் சிறகுகள் ஏற்பாட்டில் | காணொலியில் தமிழர் தலைவர் உரை

* கலி. பூங்குன்றன்

கல்வி வள்ளல் என்றும், பச்சைத் தமிழர் என்றும் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட காமராசர் அவர் களின் 118ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் காமராசர்பற்றி கருத்துரை தகவல் உரை வழங்கினார்.

திராவிடர் இயக்கத்துக்கும், காமராசருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு எந்த அடிப்படையில்? காமராசரின் கல்வித் தொண்டு, காங்கிரசுக்குள் நடந்த இனப் போராட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பல்வேறு நிகழ்வுகளைக் கூறினார்.

I. திராவிடர் இயக்க ஈர்ப்பு

விருதுநகரில் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த காமராசர், காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டராக இருந்து உழைப்பால், தியாகத்தால் படிப்படியாக வளர்ந்து, உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக, தமிழ்நாடு முதல்அமைச்சராக (1954-65), அகில இந்திய காங்கிரஸ் தலைவராக - பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தவராக  ஓங்கி வளர்ந்தவர். காமராசர் 1921இல் விருதுநகருக்குக் காங்கிரஸ் தலை வராக பெரியார் வந்தபோது, 'அப்போது நான் காங்கிரஸ்  தொண்டன்' என்று கூறுகிறார் காமராசர்.

1922இல் சாத்தூர் வட்டத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளராக இருந்தவர் காமராசர்.

1924-25ஆம் ஆண்டில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் ஈடுபட்டபோது, தனது மாமா வீட்டுக்கு வந்திருந்த காமராசர் வைக்கம் வந்து போராட்டத்தில் பங்கு ஏற்றுள்ளார். காண்டீபத்தில் மாரிசாமி இதனைப் பதிவு செய்துள்ளார்.

தந்தை பெரியார் காங்கிரசை விட்டுப் பிரிவதற்கு காரணம் வகுப்புரிமை; தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு சமூக நீதிக்காக பாடுபட்ட கருத்தெல்லாம் காமராசர் காங் கிரசில் இருந்தாலும் அவரைக் கவர்ந்தது.

திராவிடர் கழகத்தைப் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் காமராசரின் கருத்து என்ன?

பெரியகுளம் நகரசபை சார்பிலும் திராவிடர் கழகம் சார்பிலும் முதல் மந்திரி காமராசருக்கு வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன.

“திரு. காமராசர் பதிலளிக்கையில், திராவிடர் கழகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அதற்கு நல்ல முறையில் தலைமை வகிப்பதாகச் சொன்னார். பிற கட்சிகளைப் போல எல்லாவற்றையும் கண்டபடி தாக்காமல், கெட்டதெனப் புலப்படுவதைக் குறை கூறவும், நல்லதென நினைப் பதைப் பாராட்டவும் அவர் தயங்குவதில்லை. மற்ற கட்சிகளைப் போல் தேர்தலில் கலந்து கொள்ளாததால் இவ்வாறு நடந்து கொள்ள அவரால் முடிகிறது என்று அவர் கூறினார்”.

('தினமணி' 13.2.1955).

ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த போது, அதனை எதிர்த்து தமிழகமே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து எழுந்த நிலையில், பதவியை விட்டு ராஜாஜி விலகும்படி நேர்ந்தது. அந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு யார் முதல் அமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.

அந்த நேரத்தில் காமராசருக்குத் தைரியம் கொடுத்து முதல் அமைச்சர் பதவியை ஏற்கும்படிச் செய்ததில் தந்தை பெரியாருக்கும், டாக்டர் வரதராசலு நாயுடு அவர் களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு, காமராசர் ஆகியோரின் சந்திப்பு சென்னை அரசினர் தோட்டத்தில் டாக்டர் வரதராசலு நாயுடு இல்லத்தில் நடந்தது.

ஆச்சாரியாரைப் பொறுத்தவரை (ராஜாஜி) ஆட்சி அதிகாரத்துக்கு அவர் வந்தபோதெல்லாம் பார்ப்பனர் அல்லாத மக்களின் கல்விக் கண்களைக் குத்துவதில்தான் காரியமாக, கவனமாக இருந்தார். 1938இல் ஆட்சிக்கு வந்தபோது 2,500 பள்ளிகளை மூடினார் என்றால், 1952இல் வந்தபோது 6,000 பள்ளிகளை இழுத்து மூடினார். அதோடு நிற்கவில்லை.

அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்றார். அதற்கு மிகவும் சரியாக, துல்லியமாக  “குலக்கல்வித் திட்டம்“ என்று பெயரிட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினார் தந்தை பெரியார்.

காமராசர் முதல் அமைச்சர் பதவியை ஏற்ற நிலையில் குடியாத்தத்தில் நடைபெற்ற இடைத்தேரதலில் காமராசர் வெற்றி பெற தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் கடுமையாக உழைத்தனர்.

தந்தை பெரியாரைப் பின்பற்றி அறிஞர் அண்ணாவும்  திராவிட நாடு இதழில், “குலக்கொழுந்தே, குணாளா!" என்று எழுதி குடியாத்ததம் தேர்தலில் ஆதரவு அளித்தார். (அப்பொழுது திமுக தேர்தலில் ஈடுபடவில்லை.)

ஆட்சிக்கு வந்த காமராசர், ஆச்சாரியார் மூடிய 6000 பள்ளிகளைத் திறந்ததோடு, மேலும் புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார்.

குலக்கல்வித் திட்டத்தையும் ரத்து செய்தார்.

நாடெல்லாம் கல்வி நீரோடை பாய்ந்து ஓடியது. இலவச உடை, இலவசப் புத்தகம், மதிய உணவு என்று அலை அலையாகத் திட்டங்களை வகுத்துக் கல்வியில் பெரும் புரட்சி செய்தார்.

அன்றைக்கு மட்டும் அந்தக் குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால், இன்றைக்கு நம் பார்ப் பனர் அல்லாத மக்களில் இத்தனை எண்ணிக்கையில் டாக்டர்களையும், பொறியாளர்களையும், வழக்குரைஞர் களையும், நீதிபதிகளையும் பார்த்திருக்க முடியுமா என்ற நியாயமான கேள்வியை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்.

கல்வி வள்ளல் காமராசர் என்றும், பச்சைத்தமிழர் காமராசர் என்றும் தந்தை பெரியார் எங்கும் பிரச்சாரம் செய்தார். பிள்ளைகளுக்குக் காமராசர் என்று பெயர் வைத்தார்.  பள்ளிகளில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் காமராசர் வாழ்த்துப் பாட சொன்னார்.

பார்ப்பனர்கள் எல்லாம் வயிறு எரிந்தனர். கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்றனர்.

“பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக் கிறது.பெரியார் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை” என்று வெளிப்படையாகப் பேசினாரே காமராசர்.

‘ஆனந்தவிகடன்’ இதழில் வெளிவந்த ஒரு கருத்தையும் கழகத் தலைவர் நினைவூட்டினார்.

தந்தை பெரியார் படத்தைப் போட்டு தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் என்ற கருத்தை வெளியிட்டு இருந்தது.

அதற்கு அடுத்த வார இதழில், வாசகர் ஒருவர் எழுதியிருந்தார் Ôகல்வி வளர்ச்சிக்குக் காரணம் காமராசர் தானேÕ என்று எழுதி இருந்தார். அதற்கு ஆனந்தவிகடன் அளித்த பதில் “காரணம் பெரியார் - காரியம் காமராசர்” என்று எழுதி இருந்தது.

காமராசரின் பிறந்த நாளை “கல்வி வளர்ச்சி நாளாகக்” கொண்டாட வேண்டும் என்று கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது வெறும் ஆணையாக அல்ல, சட்டமாகவே நிறைவேற்றினார்.

காமராசர் மறைந்தபோது இரவோடு இரவாக முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கிண்டி ஆளுநர் மாளிகையையடுத்த  காந்தியார் நினைவு மண்டபம் அருகே அவரை அடக்கம் செய்து, அங்கே நினை வில்லம் உண்டாக்கும் அனைத்துப் பணிகளிலும் அவரே நேரிடையாகவே ஈடுபட்டார் (அந்த நிகழ்வின் போது, கழகத் தலைவர் ஆசிரியர்அவர்கள் முதல் அமைச்சர் கலைஞரால் அன்று அழைக்கப்பட்டு உடனி ருந்தார்). இப்படி திராவிடர் இயக்கத்துக்கும், காமராசருக் குமான தொடர்பு - ஈர்ப்பு இருந்ததை  வரிசைப்படுத்தினார் தமிழர் தலைவர்.

 

II. ஆரியர், திராவிடர் போராட்டம்

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே காமராசர் - ஆச்சாரியார் போராட்டம் என்பது ஆரியர் -  திராவிடர் போராட்டம் என்றார் தமிழர் தலைவர். அதற்கான நிகழ்வுகளை நிகழ்ச்சி நிரலாக எடுத்துக் காட்டினார்.

காங்கிரசுக்குள்ளேயே சத்தியமூர்த்தி அய்யருக்கும் ராஜாஜிக்கும் பனிப்போர்! சத்தியமூர்த்தியின் சீடராக காமராசரும், ராஜாஜிக்குச் சீடராக கோவை சுப்பையாவும் இருந்தனர்.

1940ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் பதவிக்குப் போட்டி காமராசருக்கும் - சுப்பையாவுக்கும்; வாக்கெடுப்பில் மூன்று வாக்குகள் அதிகம் பெற்று காமராசர் வென்றார்.

தந்தை பெரியார் கூறுவார், நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல;  ஆரியர் - திராவிடர் போராட் டமே என்பார். காமராசர் - ராஜாஜி போராட்டம் என்பது அந்த அடிப்படையில்தான்.

1942 - “வெள்ளையனே வெளியேறு!’ என்ற காங்கிரஸ் முழக்கம் - அதனை ஆச்சாரியார் எதிர்த்தார் - காங் கிரசை விட்டே வெளியேறினார். பாகிஸ்தான் பிரி வினைப் பிரச்சினையில்கூட ராஜாஜி பிரிவினைக்கு ஆதரவாகவே நின்றார்.

1942 ஆகஸ்ட் போராட்டத்தில் காமராசர் உட்பட சிறையில் இருந்தபோது ராஜாஜி மட்டும் வெளியிலே சுகமாகத் திரிந்தார்.

அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் முக்கியம்.

1945ஆம் ஆண்டில் அரியலூரில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது; சிறையில் இருந்து அப்பொழுது காமராசர் விடுதலையாகி வெளியில் வந்தார். அரியலூர் மாநாட்டுக்கு எஸ்.கே. பாட்டீல் தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் ஒரு முக்கிய தீர்மானம்: “ஆகஸ்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் யாராக இருந்தாலும், கட்சிக்குள் மீண்டும் நுழைய விடக் கூடாது” என்ற தீர்மானம் 670க்கு 4 வாக்குகள் எனும் வகையில் மிகப் பெரிய பலத்தோடு நிறைவேற்றப்பட்டது.

குல்லூகப்பட்டரான ராஜாஜி சும்மா இருப்பாரா?

அப்பொழுது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்துக்கு ஆச் சாரியார் கடிதம் ஒன்று எழுதினார். அதன் அடிப்படையில் திருச்செங்கோட்டிலிருந்து ராஜாஜி மாநில காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.

அது காங்கிரசில் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெடிக்கச்  செய்தது. தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் காமராசருக்கே தெரியாமல் எப்படி அந்த முடிவு எடுக்கப்பட்டது? அது எப்படி சரியாகும்? காமராசர் ஏற்க முடியாது என்று எதிர் அறிக்கை வெளியிட்டார்.

உடனே மதுரை திருப்பரங்குன்றத்தில் தோழர் சிதம்பர பாரதியின் முயற்சியில் 1948 அக்டோபர் 31ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடைபெற்றது.

அதில் காமராசர் ஆதரவாளர்களும், ஆச்சாரியார் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர். திருச்செங் கோடு தேர்தல் செல்லாது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆச்சாரியார் மீண்டும் படுதோல்வி அடைந்தார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் ஆச்சாரியாருக்கு முட்டுக் கொடுத்தது.

அப்பொழுதுதான் அறிஞர் அண்ணா அவர்கள் தமது ‘திராவிட நாடு’ இதழில் (6.1.1946)

“கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது!” எனும் தலைப் பில் அரியதோர் கட்டுரையைத் தீட்டினார். இதுபோல சிறப்பான தலைப்புகள் தருவதில்கூட திராவிட இயக்கம்தான் முன்னோடி என்றார் கழகத் தலைவர்.

அந்தக் கட்டுரையின் முடிவில் அண்ணா என்ன எழுதுகிறார்? “முடிந்து விட்டதோ போராட்டம்? இல்லை, இல்லை, முடிவு கிடையாது ஆச்சாரியார் வேண்டுமா னால் ‘கெட்ட கனவு போன்றது அந்தப்பிரச்சினை, அதனை இனி மறப்போம்" என்கிறார்.

பிரச்சனை கனவல்ல; ஆரியருக்கு என்றென்றும் ‘பிடி’ இருந்தே தீரும் என்ற நிலை வெறும் கனவாகப் போகிறது. காமராசர் அமைத்த கமிட்டி, களத்திலே ஒரு பகுதிதான் என்பது இனி விளங்கும். ‘கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது” என்றால் நிரந்தர நிலை அல்ல. ஊசல் ஆடுகிறது! இந்த “ஊசல் ஆட்டம்“ கடைசியில் இரு இனங்களும் வேறு வேறு முரண்பாடுகள் கொண்டது என்ற இன எழுச்சிக் கருத்தை முத்துரங்கங்களும் உணரும் நிலையைத் தந்து தீரும். கோடு உயர்ந்து குன்றம். தாழ்ந்ததும், குன்றமும், கோடும் மீண்டும் மீண்டும் போராடும்.

கடைசியில் ஈரோடு மார்க்கமே திராவிடருக்கு ஏற்றது என்ற உண்மையை விளக்கும் இது உறுதி!” என்று காங்கிரசுக்குள் நடப்பது இனப் போராட்டமே என்று அறிஞர் அண்ணா எழுதினார்.

இதனைத்தான் தனது உரையின் தொடக்கத்திலேயே - தந்தை பெரியார் கூறிய அந்த - ஆரியர் - திராவிடர் போராட்டம் பற்றி முத்தாய்ப்பாகக் கூறினார் தமிழர் தலைவர்.

இந்த ஆரியர், திராவிடர் போராட்டத்தில் காந்தியார் எங்கே வருகிறார் என்பது முக்கியம். காந்தியாரின் சம்பந்தியாயிற்றே ராஜாஜி !அதைத் தனது அரசியல் இருப்புக்குப் பயன்படுத்துகிறார்.

காமராசரிடம் தான் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டிட காந்தியாரைப் பயன்படுத்தினார்.

இந்தி பிரச்சார சபையைத் தொடங்கி வைப்பதற்கு காந்தியார் அழைக்கப்படுகிறார். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான காமராசருக்கு அந்தத் தகவல் எல்லாம் தெரிவிக்கப்படவில்லை.

ராஜாஜியும், டி.எஸ்.எஸ்.ராஜன் என்ற பார்ப்பனரும் கமுக்கமாகவே இவற்றைச் செய்தனர்.

எப்படியும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தானே காந்திஜி இறங்க வேண்டும் என்ற நினைப்பில் காமராசர் அங்கு சென்றார்.

 ஆனால், ஆச்சாரியாருக்கே உரித்தான தந்திரம் - காந்தியாரை அங்கு இறங்கச் செய்யாமல் அம்பத்தூர் இரயில் நிலையத்தில் இறங்கச் செய்ய ஏற்பாடு செய்து விட்டார். ஒரு செய்தியாளர் மூலமாக இதனை அறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராசர் ஒரு மாலையுடன் அந்தப் பத்திரிக்கையாளர் காரிலேயே அம்பத்தூர் இரயில் நிலையம் சென்று விட்டார். ராஜாஜி கோஷ்டியினருக்கு அதிர்ச்சி!

அந்த சுற்றுப் பயணம் முழுவதுமே காந்தியாரிடம் காமராசரை நெருங்கவிடாமலும்இ பேசவிடாமலும் பார்த்துக் கொண்டது ராஜாஜி கோஷ்டி.

தமிழ்நாடு பயணத்தை முடித்து விட்டு சென்ற காந்தியார் ‘ஹரிஜன்’ ஏட்டில் காமராசரையும், அவரோடு சேர்ந்தவர்களையும்  'கிளிக்' (Clique) ஒரு சதிகாரக் கும்பல் என்று எழுதினார்.

இது குறித்தும் அறிஞர் அண்ணா அவர்கள் தமது “திராவிட நாடு’ இதழில் (17.2.1946) “காமராஜர் சிந்தும் கண்ணீர்” என்று தலைப்பிட்டு ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார்.

காமராசர்மீது பார்ப்பனர்களுக்கும், மதவெறியர்களுக்கும் இருந்த வன்மம் கடைசிவரை தொடரவே செய்தது.

1967 தேர்தலுக்கு முன் சென்னை கடற்கரைக் கூட்டத்தில் (27.2.1966) ராஜாஜி என்ன பேசினார்?

“தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள கருப்புக் காக்கையைக் கல்லால் அடித்து வீழ்த்துங்கள்” என்று காமராசரைக் குறிப்பிட்டுப் பேசியதுண்டே!

(படம்: டில்லியில் காமராசர்மீது கொலை வெறி தாக்குதல் வீடு தீக்கிரை)

அதன் தொடர்ச்சியாகத்தான், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசரை இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பசுவதைப்பாதுகாப்பு என்ற பெயரில் நிர்வாண சாமியார்களும், ஜனசங்கத்தினரும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும், ஏன் சங்கராச்சாரியார்களும் திரண்டெழுந்து, அவரைக் கொலை செய்ய அவர் தங்கியிருந்த வீட்டைக் கொளுத்தினார்களே! (7.11.1966).

ஒரு திமுக தோழர் கொடுத்த தகவல் காரணமாகத்தானே உயிர் பிழைத்தார் காமராசர்! காமராசரின் உயிரைக் காப்பாற்றியதுவரை திராவிடர் இயக்கத்துக்கு முக்கியத் தொடர்பு உண்டு.

அந்தக் காமராசர்மீதான கொலைவெறித் தாக்குதல் குறித்து தக்க ஆதாரங்களுடன், படங்களுடன் “காமராசர் கொலை முயற்சி சரித்திரம்” எனும் நூலை திராவிடர் கழகம் வெளியிட்டதுண்டே!

நாடெங்கும் கண்டனப் பொதுக்கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தியது திராவிடர் கழகம்.

 “கத்தியை எடுப்போம்!”

“காவல் புரிவோம்!”

“காமராசரைக் காப்போம்!”

என்று முழக்கமிட்டது திராவிடர் கழகம்.

இவையெல்லாம் மறுக்க முடியாத, மறக்கமுடியாத ஆரியர், திராவிடர் போராட்டம் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் என்பதிலும் அய்யமுண்டோ!

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையை முடிக்குமபோது,

திராவிடம் உயரத்தில் பறக்கும். அதன் சிறகுகளை யாரும் வெட்டிவிட முடியாது என்பதை வரலாறு நிரூபிக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடு 'திராவிட சிறகுகள்'

வரவேற்புரை-'திராவிட சிறகுகள்'  நிறுவனர் ப.கார்த்திகேயன்

நன்றியுரை ஆசிரியர் கணேசன்.

 

நீதிமன்றத்தில் காமராசர்பற்றி பார்ப்பன வக்கீல்கள் கேலி - கிண்டல்

நாட்டில் அதிகம் படிக்காத மேதைகள் உண்டு; தந்தை பெரியார், காமராசர், கலைஞர் போன்ற வர்களை அப்படிக் கூறலாம். படித்த பாமரர்களும் உண்டு. காமராசரைப் பொறுத்தவரை தான் படிக்காவிட்டாலும் நாட்டு மக்கள், தம் மக்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினார். அதனைத் தம் ஆட்சியிலும் செய்து காட்டினார். பார்ப்பனர்களுக்கு அதுதான் ஆத்திரம். எதைக் கொடுத்தாலும் சூத்திரர் களுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே இந்துமதம் - மனுதர்மம் அவற்றை நம்புகிறவர்களின் மனப்பான்மை.

தகுதி - திறமைபற்றி காமராசர் தோலுரித்துக் காட்டினார்.

'பறையனைப் படிக்க வைத்தேன். ஊசி போட்டான். எந்த பிள்ளை செத்தது? பறையனைப் படிக்க வைத்தேன், இன்ஜினியரானான் - எந்த பாலம் இடிந்தது சொல். உன் தகுதியும், திறமையும் எனக்குத் தெரியும். உனக்குச் சொல்லிக் கொடுத்தவரின் தகுதியும், திறமையும் தெரியும். என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தை அழித்து விடுவேன்Õ என்று முழங்கினாரே.

'இது யார் பேச்சு? பெரியார் பேச்சா? காமராசர் பேச்சா?' என்று விடுதலை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுண்டே!

திருச்சியில் ஒரு நிகழ்வு. நீதிமன்றத்தில் படிக்காத பாமரர் ஒருவரைக் கூண்டில் ஏற்ற நேர்ந்தபோது- எம்.எஸ்.வெங்கட்ராமய்யர் என்ற வக்கீல் பார்ப்பனர் ஒருவர் "நீதிமன்றம் இப்போது ஒரு காமராஜரைப் பார்க்க போகிறது" (The Honourable Court will see one Kamaraj) என்று பகிரங்கமாகக் கேலி செய்தார். முத்துக்குமாரசாமி என்ற தமிழ் வழக் குரைஞர் "ஏன் ஓர் அகில இந்தியத் தலைவரைக் கிண்டல் செய்கிறீர்கள்?" என்று கேட்டார். சிவசுப்பிர மணியம் அய்யர் என்ற இன்னொரு பார்ப்பனர் வக்கீல் "அதில் என்ன தப்பு?" என்று கேட்டார்.

பார்ப்பனர்களின் இந்த மனப்போக்கை கண்டித்து திருச்சியில் ஒரு பொதுக்கூட்டமே போட்டுக் கண்டித்தார் தந்தை பெரியார் (18.12.1965).

ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று கழகத் தலைவர் சொன்னது சரிதானே!

 

தமிழர் தலைவர் எடுத்துக்காட்டிய முக்கியத் தகவல்

ராஜாஜியைச் சாடிய காமராஜர்

1955-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த டிவி எஸ். கட்டடத் திறப்பு விழாவே அது. சி.பி.ராமசாமி அய்யரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் ராஜாஜி பேசும்போது, பிராமணன், சூத்திரன் என்று பேச்சை ஆரம்பித்தார். சூத்திரன் செய்யவேண்டிய மோட்டார் தொழிலைப் பிரா மணன் செய்வதாகத் தமது பேச்சில் ராஜாஜி குறிப் பிட்டார். ராஜாஜி இவ்வாறு குறிப்பிட்டதும் காமராஜ் கோபம் கொண்டார். தொடர்ந்து பேசிய ராஜாஜி, டி.வி. சுந்தரம் அய்யங்காரைப் பாராட்டியும் பேசினார். வயதானதும் டி.வி. சுந்தரம் அய்யங்கார் தமது புத்திரர் களிடம்

தொழிலை ஒப்படைத்திருக்கிறார் என்றும், டி.வி. சுந்தரம் அய்யங்காரின் இந்தச்செய்கை பாராட்டுக் குரியது என்றும் ராஜாஜி கூறினார்.

அடுத்துக் காமராஜ் பேசினார். காமராஜ் பேசிய பேச்சைக் கேட்டதும் விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அதை வரவேற்றுக் கரகோஷம் செய் தனர்.

"வாலிபர்களிடம் வயோதிகர்கள் பொறுப்பை ஒப்படைப்பதைப் பற்றி ராஜாஜி இங்குக் கூறினார். ராஜாஜி இவ்வாறு பேசியதை நான் ஆதரிக்கிறேன், வர்த்தகத்தில் மட்டுமல்ல, ராஜ்ய நிர்வாகத்திலும்கூட அந்த வழியை வயோதிகர்கள் (ராஜாஜி போன்ற வர்கள்) பின்பற்றினால் நாட்டிற்கு நிச்சயமாக நன்மை ஏற்படும்'' என்று காமராஜ் பேசினார்.

ராஜாஜியின் தலைமைமீது தன்னுடைய கருத்து என்ன என்பதைக் காமராஜ் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே சொன்னது பலரையும் கவர்ந்தது.

ராஜாஜியின் புதிய ஆரம்பக் கல்வித் திட்டம் விவகாரமாகவே ஆகிவிட்டது. இத்திட்டம் குறித்துச் சட்டசபையில் காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போதெல்லாம் இந்த விவாதத்தை ஓட்டெடுப்புக்கு விடாமல் ஒத்திவைக்கக் காமராஜ் சம்மதித்தார். காமராஜின் ராஜதந்திரமே இது என்று அப்போது சிலருக்கு மட்டுமே தெரிந்தது. காமராஜ் பொறுமை யோடு நடந்து வந்தது குலக்கல்வித் திட்டத்தின்மீது இருந்த ஆத்திரத்தை ஆவேசமாக மாற்றியது. அப்போதுதான் காமராஜின் ராஜதந்திரம் (புதுகல்வித் திட்ட விவாதத்தை ஓட்டெடுப்புக்கு விடாமல் ஒத்தி வைக்கச் சம்மதித்தது) பலருக்கும் புரிந்தது''

(முருகு. தனுஷ்கோடி எழுதிய "காமராசர் ஒரு சரித்திரம்" என்ற நூலிலிருந்து)