ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காமராசர் விரும்பிய சமூகநீதியை வென்றிடுவோம் - அதுவே காமராசருக்குச் சூட்டும் சரியான செயல் மாலை!
July 15, 2020 • Viduthalai • கழகம்

‘பச்சைத் தமிழர்' என்றும், ‘கல்வி வள்ளல்' என்றும் - இவற்றிற்கெல்லாம் மேலாக, ‘தமிழ்நாட்டின் ரட்சகர்' என்றும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் புகழ்மாலை சூட்டப்பட்ட கர்ம வீரர் காமராசர் அவர்களின் 118 ஆவது பிறந்த நாள் இன்று (15.7.2020).

தமிழ்நாடு காங்கிரசின் தூய தொண்டராக தனது பொதுவாழ்வைத் தொடங்கி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர், ‘கிங் மேக்கர்' என்று உயர்ந்தவர்.

அதைவிட, அவர் முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டுமென்று வற்புறுத்தி, தயங்கிய அவரை அந்தப் பொறுப்பை ஏற்க வைத்தவர்கள் தலைவர் தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜூலு (நாயுடு) அவர் களும் ஆவார்கள்!

அவர், ஆச்சாரியார் ஆட்சியில் கொடுமையின் உச்சமான குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, ஆச்சாரியார் மூடிய 6,000 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்ததோடு, ஒடுக்கப்பட்ட மக்களும், ஏழை,  எளிய மக்களும் கல்விக் கண்ணைப் பெற அயராது பாடுபட்டார்.

‘‘இதற்கெல்லாம்  காரணம், பெரியார்; காரியம் காமராசர்'' என்று ‘ஆனந்தவிகடன்' போன்ற ஏடுகளே எழுதிய வரலாறு மறைக்கப்பட முடியாதது.

சமூகநீதியும், ஆட்சி நேர்மையும் அவரது முத்திரைகள் - திராவிடர் இயக்கம் காமராசரை எவ்வளவு பெருமைப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்துள்ளது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் - இவர்கள் அரசியலைத் தாண்டி, இன உணர்வோடும், நியாய உணர்வோடும் காமராசரைப் பெருமைப்படுத்திடத் தவறவில்லை.

கலைஞர் ஆண்டுதோறும் காமராசர் பிறந்த நாளை கல்வி நாளாகக் கொண்டாட தனிச் சட்டமே இயற்றி, நன்றி பாராட்டினார்!

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் சார்பில், பசுவதைத் தடுப்பு ஆர்ப்பாட்டம் என்று பார்லிமெண்ட் தெரு விலும், அதற்கடுத்து டில்லியில் 3 மணிநேரம் நிர் வாண கோலத்தில் ‘சாதுக்கள்' - சாமியார்கள் நடத்திய கலவரத்தின்போது, காமராசர் வீட்டுக்கு 7.11.1966 இல் பட்டப் பகலில் சாமியார்கள் கூட்டத்தால் தீ வைக்கப்பட்டது. தி.மு.க. தோழர் ஒருவர் கொடுத்த தகவல் மூலம் அப்போது அதிலிருந்து தப்ப முடிந்தது. (‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'' என்று ஒருநூலே வெளிவந்துள்ளது).

அதையெல்லாம் தாண்டி, காமராசர் குல தர்மத்தை எதிர்த்து சமதர்மத்தை நிலைநாட்ட இறுதிவரைப் போராடிய சமூகநீதிப் போராளி!

‘தகுதி திறமை' பித்தலாட்டத்தை அம்பலப் படுத்தத் தயங்காதவர். உண்மை விளம்பி.

இன்று காமராசரை அவருடைய கொள்கை, வரலாறு தெரியாத,  அவர் உயிருக்கு உலை வைக்க முயன்றவர்களும்கூட, புகழ்ந்து பேசி, தமிழ்நாட்டில் கால் வைக்க முயலுகின்ற வேடிக்கைக் கூத்தும் நடைபெற்றுள்ளது!

காமராசர் ஏற்படுத்திய கல்விப் புரட்சி, திராவிடர் இயக்க ஆட்சிகளால் தொடரப்பட்டு வரும் நிலையில், அதனை ஒழிக்க முயலும் முயற்சிகளை முறியடித்து, சமதர்மம், சமூகநீதியை நிலைநாட்டி, காமராசர் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் அமைய உழைப்பதே காமராசருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை.

காமராசருக்கு நாம் சூட்டும் பெருமைமிக்க செயல் மாலையாகட்டும்!

வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்!

 

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.7.2020